தாஸ்த்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் கதையை வலைத்தள மகாஜனங்களில் பெரும்பாலானோர் படித்திருக்க வாய்ப்புகள் அதிகம். முக்கியமான காரணங்கள், மலிவுவிலை சோவியத் வெளியீடு. சின்ன தலையணை. அநேகமாக பொது நூலகங்களில் மற்றும் நடைபாதை பழைய புத்தகக்கடைகளில் இன்றும் சுழற்சியிலிருப்பது.
படித்திராதவர்களின் வசதிக்காக கொஞ்சம் போல கதை. தன்மை ஒருமையில் சொல்லப்படும் கதை. பீட்டர்ஸ்பர்க்கில் இரவு நடையில் ஒரு சிறிய பாலத்தினருகில் தனியே அழுதுகொண்டிருக்கும் அழகியொருத்தியைக் காண நேர்கிறது. ஆறுதலாகப் பேசத்தொடங்க அவள் தன் காதலனைப் பிரிந்த துக்கக்தில் இருப்பதை அறிய நேர்ந்து நடந்தவாறே பேசியபடி அவளை வீட்டில்விடுகிறான். அடுத்த மூன்று நாட்களிலும் சிநேகிதத்தில் கிளர்ச்சியுற்றவனாய் காதலிக்கவே தொடங்கி விடுகிறான். அவளிடம் சொல்ல யத்தனிக்கிற அன்று அவள் காதலன் வரவும் இவனைத் தோழனாக மட்டுமே பாவித்து காதலனுடன் சென்று விடுகிறாள். இவன் பழையபடி தனிமை சூழ்ந்து கொள்ள. காதலற்ற தனிமைக்காக சோகப்படுவதைக் காட்டிலும் ஏமாற்றப்பட்டதாக உணர்வதை விட மூன்று நாட்கள் அவளுடன் பழகிய நினவையே நெகிழ்வோடு நினைத்துக் கொள்கிறான்.
விஸ்கோண்டி காட்சிப்படுத்துவதில் மிகத்தேர்ந்தவர். அநேகமாக பார்த்தது இந்த ஒரு படம் மட்டுமே என்று நினைக்கிறேன்.
இதில் முக்கியமான அம்சமே, அவனது காதலற்ற தனிமை, கதை முழுவதும் பனி மூட்டமாய் கவிந்திருக்கும் வெறுமை, அவளால் சற்றே விலகுவதையும் அவளை இழக்க நேர்ந்ததும் திரும்ப அவனை தனிமை சூழ்வதையும் இருக்கமான நடையில் எழுதியிருப்பார் தாஸ்த்தயேவ்ஸ்கி.
படம் நேர் எதிர்மறை. அவன் ஷேவ் செய்து கொள்வதிலிருந்து அவனது நடவடிக்கைகள் யாவும் துளிகூட மந்தகதியில் இருக்காது.
எனக்கோ பெருத்த அதிர்ச்சி, ஆச்சர்யம்.
ராயப்பேட்டை அருண் வீரப்பன் அவர்களின் திரையரங்கில் பார்த்ததாக நினைவு.
எப்டி மோகன் படம் கொஞ்சங்கூட டல்லாவே இல்லையே. கதைல இருக்கற எதுவும் விடுபட்டும் போகலை அதே சமயம் இதுல அவன் ஒரு மாதிரி பரபரப்பா துள்ளலோட இல்லெ இருக்கான். ஆனா படமும் நல்லாதான் இருக்கு. இப்டி எல்லாம் பண்லாமா?
ஏண்டா எடுத்தவனை விட்டுட்டு யே வுசுர எடிக்கிறியே என்று நினைத்துக்கொண்டாரோ என்னவோ
ஆச்சரியமாதான் இருக்கு - என்று ட்ரேட் மார்க் சிரிப்போடுஅமைதியானார்.
இப்போது படம் பார்த்துவிட்டு கதையும் படித்துவிட்டு, எழுத்தும் படமும் ஒன்றாக இருக்கிறதா இல்லை எனக்குதான் பிரமையா என யாரிடமேனும் தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறது.
கருப்பு வெள்ளைக் கலக்கலுக்கு: http://www.google.co.in/images?q=le+notti+bianche&um=1&hl=en&biw=1259&bih=566&tbs=isch:1&source=lnt&sa=X&ei=UjdtTIHyL5K6sQPuloyTCw&ved=0CAYQpwU
மேலதிகத் தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Luchino_Visconti