அசோகமித்திரனின் தண்ணீர் நெடுங்கதையில் இருந்து ஒரு பகுதி. இது எழுதப்பட்டு வெளியான ஆண்டு 1973. ஆனால் இன்றைக்கும் இந்த க்ஷணத்திலும் கூட இந்த ட்விட்டர் பஸ்ஸ் இருக்கும் இணைய காலத்திலும் கூட எவ்வளவு அர்த்தபூர்வமாய் இருக்கிறது.
கைகொட்டி சலித்தேன், பிறகு இதைப் படித்து சிலிர்த்தேன்.
இலக்கியத்திற்கும் மொக்கைக்கும் வித்தியாசம் எத்துனைத் துல்லியமாய் இருக்கிறது.
மொக்கை எழுதப்பட்ட அன்றைக்கு மட்டுமேயானது. இலக்கியம் என்றைக்குமானது.
இரண்டே நிமிஷத்தில் அந்தப் பம்பைச் சுற்றி பதினைந்து பேர் வந்து விட்டார்கள்.
“அடே, இன்னிக்குத் தண்ணி வந்திடும்னு பேப்பர்லே போட்டிருந்தானா? என்று ஒருவர் கேட்டார்.
அவருக்கு யாரும் பதில் தரவில்லை. வீட்டுக்காரப் பையன் தடால் தடாலென்று பம்பு அடித்துக் கொண்டு இருந்தான். தண்ணீர் ஏகமாக இரும்புத் துரு கலந்து கலங்கி வந்து கொண்டிருந்த்து. வெகு சீக்கிரத்தில் தரையெல்லாம் தண்ணீர் பரவி ஓட ஆரம்பித்தது.
“நான் கொஞ்சம் அடிக்கறேண்டா, நான் கொஞ்சம் அடிக்கறேண்டா” என்று அவன் தங்கை கெஞ்சினாள். அவன் அம்மா, “நீ எதுக்கு வரே? போய் பக்கெட் பாத்திரம் ஏதாவது எடுத்துண்டு வா” என்றாள்.
இதற்குள் ஒரு குடித்தனக்காரர் பெரிய தவலை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். வீட்டுக்கார அம்மாள், “நீங்கள்ளாம் கொஞ்சம் இருங்கோ, இப்பத்தானே தண்ணி வர ஆரம்பிச்சுருக்கு. டேய், விட்டு விடாதே, கை வலிச்சா சொல்லு” என்றாள்.
ஆனால் அன்று அவனுக்குக் கை வலிக்கும் என்றே தோன்றவில்லை. சோர்வே இல்லாமல் தொடர்ந்து பம்பு அடித்துக் கொண்டிருந்தான். தண்ணீர் பெருகி வந்து வந்துகொண்டிருந்ததே அவனுக்கு மேலும் மேலும் வலுவைக் கொடுத்த மாதிரி இருந்தது. “நீங்க தவலையை விடுங்க மாமா. அவ பக்கெட் கொண்டுவரதுக்குள்ளே இதை ரொப்பிடலாம்” என்று சொன்னான்.
”இதை இன்னி முழுக்க அடிச்சிக்கூட ரொம்பாதே – கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ.... ஏண்டி, ஏன் இவ்வளவு நாழி?”
“நீங்க சும்மா வையுங்கோ மாமா, தண்ணீயெல்லாம் கீழே போறது.”
அவர் தவலை வைத்து சில விநாடிகளுக்குள் வீட்டுக்காரர்களின் பக்கெட் வந்துவிட்ட்து. தவலை நகர்த்தப் பட்டது.
பக்கத்து வீட்டு ஜன்னல் படீரென்று திறந்து கொண்டது. அங்கிருந்து ஒரு பெண்குரல், “தண்ணி வரதா?” என்று கேட்டது. அதைத் தொடர்ந்து அந்த வீட்டில் தண்ணீர் அடிக்க ஆரம்பித்த சப்தம் வந்தது. இந்தப் புறம் இருக்கும் வீடு, எதிர் வீடு, மொட்டைமாடி வீடு, கோணல் வெராண்டா வீடு, முன்புறம் கீற்றுக் கொட்ட்கை கொண்ட வீடு ஆக எல்லா வீடுகளிலும் தண்ணீர் பம்பு அடிக்க ஆரம்பித்திருந்தார்கள். தண்ணீரும் ஒவ்வொரு வீட்டிலும் வந்தது.
ஜமுனாவும் சாயாவும் கூடக் குழாயடியில் வந்து நின்று தண்ணீர் கொட்டுவதைப் போலக் கண் கொட்டாமல் பார்த்து நின்றார்கள். ஜமுனா சாயாவிடம் சொன்னாள், “இப்போது பகவானே வந்தால் கூடக் கொஞ்சம் திண்ணையிலேக் காத்திருங்கோ, குழாயிலே தண்ணி வரதை நன்னாப் பாத்துட்டு வரோம்னுதான் சொல்லுவோம்” என்றாள்.
சாயா சொன்னாள், “தண்ணீ வராதப்போ மட்டும் நான் என்ன கஷ்டப்பட்டுட்டேன்? உன்னைத்தான் நான் அலைய விட்டேன்.”
வீட்டுக்காரப் பையனின் முதல் உற்சாகம் குறைந்து அவன் பம்பை இன்னொருவரிட்ம் ஒப்படைத்தான். தண்ணீரை உள்ளே கொண்டு போன அவன் அம்மா கேட்டாள், “ஏண்டா தண்ணிலே ஏதாவது நாத்தம் வரதா?”
ஒருவர் சொன்னார், “இவ்வளவு மாசம் வராம இருந்து இப்போ வரது, ஏதாவது கொஞ்சம் நாத்தம் வரும்.”
”இல்லே, சாக்கடை நாத்தம் மாதிரி இருக்கு. டேய், பாருடா”
பையன் இரு கைகளாலும் பம்பிலிருந்து கொட்டும் தண்ணீரைக் கையில் ஏந்தி வாயில் விட்டுக் கொண்டான். உடனே வெளியே துப்பினான்,
“என்னமோ மாதிரிதான் இருக்கு.”
”என்னமோ மாதிரியா? நான் பாக்கறேன்” என்று அவன் தங்கை சிறிது வாயில் விட்டுக் கொண்டாள், அவளும் உடனே கீழே துப்பி “சீ” என்றாள்.
”என்ன?” என்று அவள் அண்ணா கேட்டான்.
”சரியான மூத்திர நாத்தம்”” என்று அவள் சொன்னாள். தொடர்ந்து தூ தூவென்று உடலெல்லாம் அருவருப்புத் தெரியத் துப்பிக் கொண்டிருந்தாள்.
ஒரு அம்மாள் பக்கத்து வீட்டுப்பக்கம் பார்த்து, “என்ன உங்க வீட்ல வர தண்ணி நாறறதா?” என்று கேட்டாள்.
அந்த அம்மாள் சொன்னாள், “இப்பத்தான் அந்தத் தண்ணிலே ஸ்நானம் செஞ்சேன். ஒன்னும் இல்லேபோலேயிருக்கே?”
”வாயிலே விட்டுண்டு பார்த்தேளா?”
”இல்லையே ஏன்? என்ன?”
”கொஞ்சம் மறுபடியும் பாருங்கோ”
ஒரு நிமிஷம் கழித்து அந்த அம்மாள் சொன்னாள், “என்னமோ மாதிரி உப்பு கரிக்கிறது.”
“சாக்கடை நாத்தம் இல்லையே”
இன்னும் ஒரு நிமிஷம் கழித்து அந்த அம்மாள், ”ஐயே, ஆமாம். ஒரே நாத்தமா நாறறதே! இதைப் போய் தலையிலே கொட்டிண்டேனே?” என்று சொன்னாள்.
இப்போது வாயில் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் தண்ணீர் நாத்தமடித்துக் கொண்டபடியே வெளியில் பெருகிக் கொண்டு வந்தது. தவலைக்காரர் தன் முக்கால் தவலையையும் அப்படியே அங்கே கவிழ்த்தார். வீட்டுக்காரப் பையன் கேட்டான், ”சாக்கடைத் தண்ணியை ஏன் இங்கே கவிழ்த்து சேறாக்கறேள்? கொல்லைப் பக்கம் கொண்டுபோய் கொட்டக் கூடாது?”
”இந்தத் தண்ணியை நான் சுமந்து கொண்டுபோய்க் கொட்டணுமா? எனக்கு முன்னாலேதான் நீங்களே இங்க சேறா அடிச்சிருக்கேளே?”
பம்பு அடிப்பது நின்றது. எங்கேயோ தண்ணீர்க் குழாயும், சாக்கடையும் கலந்து அந்த இடத்தில் இருந்த ஏழெட்டு வீடுகளிலும் குழாயில் சாக்கடைத் தண்ணீர்தான் வருகிறது என்பது உறுதியாயிற்று. இம்மாதிரி முன்னெப்போதோ நடந்த போது குழாய்களை சரிப்படுத்த இரண்டு நாட்களாயின. அதற்குள் அந்தத் தெருவில் ஐந்து பேருக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டது. ஆபீஸுக்குப் போகத் தாமதமான போதிலும் ஜமுனாவின் வீட்டுக்காரரின் மகன் புகார் செய்ய கார்ப்பரேஷன் ஆபீஸுக்குப் போனான்.
ஜமுனா சொன்னாள், “சாக்கடைத் தண்ணியிலேயும் தண்ணி சரியான ஃப்ளஷ்ஷவுட் தண்ணி.”
”இதுக்குக் கூட பகவான் திண்னையிலேயேக் காத்திண்டிருக்கணுமில்லே?” என்று சாயா சொன்னாள். ஜமுனா சிரித்தபடியே, சாயா பின்தொடர மாடிப்பக்கம் போனாள். அங்கே பாஸ்கர் ராவ் காத்துக் கொண்டிருந்தான்.
மேலே இருப்பதைப் படித்த்தோடு நிற்காமல், கீழேயும் என்னவோ சுட்டி இருக்கிறதே அதையும்தான் பார்ப்போமே என சொடுக்கிப் படித்து மேலே இருக்கும் கதைக்குப் புது அர்த்தம் தொனித்தால் கம்பெனி பொறுப்பல்ல.
http://bit.ly/gU0SLj
http://bit.ly/gU0SLj