பகடி மாஸ்டர் ஜெயமோகன் அருளிச் செய்து வசந்த குமார் அச்சடித்து அவர்கள் இருவர் மட்டுமே வாசிக்கும் தமிழினி பத்திரிகையின் செப்டம்பர் இதழில் அங்கதம் என்கிற பிரிவில் வெளியான ”இலக்கியக் கோட்பாடுகள்” - முழு கட்டுரை ஆசிரியரின் வலைபூவிலும் கிடைக்கிறது.
இந்தக் கட்டுரையைப் படித்து சிரிக்க வேண்டும் என்றால் செய்முறையாவன
1. கண்ணாடி முன் நின்று கொள்ளவும்
2. உங்களது இரண்டு கரங்களின் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டி, நன்றாகக் கொக்கி போல் வளைத்துக் கொள்ளவும்
3. உங்கள் வாயை சற்றே விரித்து, இரண்டு ஓரங்களிலும் ஏற்கெனவே தயாராய் வளைத்து வைத்திருக்கும் இரண்டு விரல்களையும் உள்ளே விட்டு இருபுறமாகவும் நன்கு இழுத்து விட்டுக் கொள்ளவும்
4. இப்போது கண்ணாடியில் பார்த்தால் அச்சு அசலாக நீங்கள் சிரிப்பது போலவே இருக்கக்கூடும்.
எச்சரிக்கை:
தீவிர இலக்கியம் போலவே தோற்றமளிக்கும் ஜெயமோகனின் எழுத்தும் கண்ணாடியில் தெரியும் உங்களது பிம்பமும் ஒன்று போலவே இருப்பதாக எண்ணி மன உளைச்சல் மற்றும் அயர்ச்சியுடன் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போகும் முன் நப்பாசையில் விருதாவாக நஷ்ட ஈடு கிடைக்குமா என விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் முறையிடுவதைத் தவிர்க்கவும்.
விஷ்ணுபுரம் நாவலை விரித்து, உங்களுக்கு விமோசனம் கொடுக்கும் முகமாய் கோடி சீடர்கள் வாய்விட்டு வாசிக்கத் தொடங்கிவிடும் அபாயம் உள்ளது.
இலக்கியக் கோட்பாடுகள் கட்டுரையை இங்கேயும் படிக்கலாம்.
கட்டுரையின் உச்சங்கள்
மார்க்ஸ் குடும்பத்தின் முதலாளி. அவரால் பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்ட வேலைக்காரி ஹெலன் டெமுத் உழைக்கும் வர்க்கம். இருவரையும் சமாதானப்படுத்திய ஜென்னி மார்க்ஸ் நடுவர்க்கம்.
செம்படை அரசின் தலைவராக இருந்தவர் ஸ்டாலின். இவருக்கு எழுதப்படிக்க தெரியாதென்பதனால் பிறர் இவருக்காக எழுதினார்கள்.
சிறுவயதில் பூணூல் போட மறுக்கையில் அவர்கள் மார்க்சியர்களாக ஆகிறார்கள். திரும்பப் போடுவதா வேண்டாமா என்ற குழப்பம் அவர்களை நடுவயதில் இருத்தலியலாளர்களாக ஆக்குகிறது.’சரிதான் கழுதை’ பையனுக்கு பூணூல் போட முடிவெடுக்கும்போது பின்நவீனத்துவர்களாக ஆகிறார்கள்.
அழகான பெண்கள் அழகைப்பற்றியும் அழகில்லாத பெண்கள் யோனியைப்பற்றியும் கவிதைகள் எழுதும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.
பூவாத்தாள் காலத்தில் பெண்கள் முன்பக்கம் விடுதலைபெறுவது அவர்களில் பலவகையான புதிய அசைவுகளை உருவாக்கி விடுதலையுணர்வை அளிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
தொப்பி - திலகம் என்கிற மாஸ்டர் பீஸ் எழுதிய ஜெயமோகனிடம் இருந்து அடுத்து அவரது தீவிர வாசகர்கள் எதிர்பார்ப்பது
மணிரத்தினம் - சுஹாசினி முன்னும் பின்னும்
கமலின் உலகத் திரைப்படக் காதல்
கேபி-அனந்து பொழிபெயர்ப்புக் காட்சிகள்
கிடங்குத் தெரு நாவலும் அங்காடித் தெரு திரைப் படமும்
பகடியாக எழுதுவது தமிழின் இலக்கியப் பேராளுமைக்கு சிரமாக இருப்பின் மேற்கண்ட தலைப்புகளில் ஸீரியஸாகவும் எழுதலாம் தப்பில்லை, பாராட்டும் விருதும் அவருக்குதானே நமக்கென்ன.