12 January 2011

தமிழினி வசந்தகுமார் என்னும் புகைப்படக் கலைஞன்

இராசேந்திர சோழன்
அவர் பக்கத்தில் வசந்தகுமார் எடுத்த இராசேந்திர சோழன்
இருவரையும் சேர்த்து எடுத்த எனது ஐஃபோன்


பாடபேதங்கள்
சும்மா போகிற போக்கில் வசந்தகுமார் தட்டியது. எதிரில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் பெண்.
இருய்யா வீகே அந்தப் பொம்பளை கிட்டப் போட்டுக்குடுத்து உங்கிட்ட மாடலிங்குக்குத் துட்டு கேக்க வெச்சிட்டுதான் மறுவேலை.
ஜாக்பாட் நாஞ்சில் நாடன் ரெண்டாவது பதிப்பு புக்ஃபேர்லையே போட்டுட்ட இல்லே! இன்னும் என்ன துட்ட அவு மேன்.
12.10.1984ல் 24 வயசுப் பயல் ’சிறுமி கொண்டுவந்த மலர்’ எழுதிவிட்ட திமிர். 

கையெழுத்துப் பிரதியின் முதல் படிவத்தை,க்ரியா ராமகிருஷ்ணன்  அப்போதிருந்த, அபிராமபுரம் வீட்டில், உள் அறையில், நான் படித்துக் காட்ட, பாயில் படுத்து, தலைக்குக் கையை அண்டக் கொடுத்தபடி கேட்டுக் கொண்டிருந்த சுந்தர ராமசாமி, படித்து முடித்ததும், முறுவலித்தபடி, 

ப்ச. ரொம்ப நன்னா வந்துருக்கு. இந்தக் கதை, படிக்கிற யாருக்கும் ரொம்பகாலம் நெனவுல இருக்கும்.சில கதைகள் சிலரோடு அடையாளப்பட்டுடும். அது போல் இது உங்களுக்கு அமைஞ்சிடும் பாருங்க. எந்தப் பத்திரிகைக்கு அனுப்பப் போறீங்க?
ஐயையோ கதையை இன்னும் எழுதியே முடிக்கலை!
அப்படின்னா இப்பப் படிச்சது?
இது முதல் ட்ராஃப்ட்டு தானே!
அப்டியே பத்திரிகைக்கு அனுப்பலாம்.
சேச்சே கொறஞ்சது எட்டு தடவையாவது திரும்பத் திரும்ப ஆரம்பத்துலேந்து காப்பி பண்ணி எழுதுவேன்.
என்னது என்பது போல வெடுக்வெடுக்கென தலை தூக்கி அசைத்து, இரு முறை புருவம் தூக்கி ஒரு மெளன கேள்விக்குறி.
இல்லை திரும்பத்திரும்ப காப்பி பண்ணும் போதுதான் மெருகு ஏற்றது. அட்லீஸ்ட் எனக்கு. 
இல்லை அப்பாலஜிடிக்கா ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. சும்மா வேணும்னுதான் கேட்டேன். செய்யறதைத் தெரிஞ்சிதான் செய்யறேளான்னு தெரிஞ்சிக்கதான் கேட்டேன். சரியாத்தான் இருக்கீங்க. ஜேஜேல சில பகுதிகள் 20 தடவைக்கும் மேல திரும்பத் திரும்ப எழுதப்பட்டிருக்கு.

இந்த ஆள் உயிரற்றுக் கிடப்பாராம், அதை நான் போய்ப் பார்க்க வேண்டுமாம். என்னங்கடா அநியாயம். என்னிடம் இருக்கும் சுந்தர ராமசாமி எனக்கு அப்புறமும் இருப்பார்.
சச்சிதானந்தம் வீட்டில் முதல் மாடியில் C.மோகன் குடியிருந்த சமயம். என்னை மொட்டை மாடிக்கு அழைத்துப் போய் வசந்தகுமார் எடுத்த படங்கள். ராயப்பேட்டையில் இருக்கும் இந்த வீட்டில்தான் தி.மு.கவின் கொடி முடிவு செய்யப்பட்டது என்று எப்போதோ அப்பால அப்பால என அடிக்கடி உபயோகித்துச் சிரிக்கும் மழலைப் பேச்சு சச்சி சொன்னதாக நினைவு.
வசந்தகுமார் கேமரா லென்சு கவர் திறக்கும் போதே சூரியன் அஸ்தமனம் அடைந்துவிட்டான். மிச்சமிருந்தது வெளிச்சம் மட்டுமே. மஞ்சள் வெய்யில்.
தம்தம் தொம்த நம்தம் தம்தம் தொம்த நம்தம்

அஸைட் என்கிற ஆங்கில அம்மாஞ்சிப் பத்திரிகையில் வசந்தகுமார் ஃபோட்டோகிராஃபர் கம் லே அவுட் ஆர்ட்டிஸ்ட்டாக, அப்போது நிழலாக நடந்த நண்பன், பஷீருடன் இருந்த காலம். 82-83? அவ்வப்போது பிஎஸ்ஏ எஸ்எல்ஆர் சைக்கிள் அங்கே போய்விடும். கண்ணில் பட்டதைச் சுட்டதில் கிட்டியவை.

குரஸோவா படங்களை நினைவூட்டும் ஃப்ரேம்.


அப்போதைய பாறை, 
இப்போதைய தமிழினி பத்திரிகையின் அட்டைகள் எல்லாம் கோயில் சிற்பங்கள்

பிரம்மாதமான ஓவியம்.
வசந்தகுமாருக்குதான் என்ன ஒரு தீர்க்க தரிசனம், பிற்காலத்தில் தான் ஒரு நல்ல பதிப்பாளனாகப் போகிறோம் என அன்றே தெரிந்திருக்கிறது. வருங்கால  சுய சித்திரத்தை 27 ஆண்டுகளுக்கு முன்னாலேயே மாடல் வைத்து எடுத்திருக்கிறான். தலையில் சாதாரண துண்டில்லை தடிமனான சாக்கு துணி.