தமிழ் இலக்கியத்தை உய்விக்க விஷ்ணுவின் பதினோராவது அவதாரமாக ஸ்பெசல் பிறவி எடுத்திருக்கும் முக்கால தெய்வமாம் ஜெயமோகன் அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வந்தனங்களுடனும் நன்றியுடனும்
என் புத்தகத்திலிருந்து சில பக்கங்கள்....
விமலாதித்த மாமல்லன் கதைகள்
இலக்கிய அறிமுகங்களாகத் தொடங்கிப் பின்னர் வாழ்நாள் நட்புகளாகத் தொடர்பவையே என்னுடைய பெரும்பான்மை உறவுகளும். அவற்றுள் ஒன்று விமலாதித்த மாமல்லனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு. ஏறத்தாழ முப்பதாண்டுக் கால நட்பை இருவரும் அட்டவணையிட்டுப் பராமரித்துச் செழுமைப் படுத்தியதாக நினைவில்லை. எதேச்சையாக ஊற்றெடுத்த தோழமை அதற்கான பெருக்குடனும் வறட்சியுடனும் வலுப் பெற்றிருக்கிறது. அன்றாடம் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த நாட்களிலும் ஆண்டுக்கணக்கில் தொடர்பேயில்லாமலிருந்த இடைவெளிகளிலும் நட்பில் குலைவு ஏற்பட்டதில்லை. அதற்குக் காரணம் விமலாதித்த மாமல்லன். நீண்ட காலம் பார்க்காமலும் பேசாமலுமிருந்தாலும் சந்தித்த நொடியில் வெள்ளமாகப் பெருகி இடைக்காலப் பள்ளங்களைத் தூர்த்து விடும் சமநிலை நோக்கும் வேகமும் அவருக்கு உண்டு. இது அவருடைய இயல்பின் ஓர் அம்சம்; எழுத்துக்களிலும் உள்ளோடும் குணம்.
விமலாதித்த மாமல்லனின் கதைகளை அறிமுகம் கொண்டதற்கும் அவரைச் சந்தித்ததற்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கவில்லை.அவரது ஆரம்பக் காலச் சிறுகதைகள் வெளியானபோதே அவற்றைப் பற்றி கோவை இலக்கிய நண்பர்களிடம் பேசியிருந்திருக்கிறேன். வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம் என்ற சிறுகதையாளர்களின் வரிசைக்கு அடுத்த வரிசை உருவாகிக் கொண்டிருந்தது. திலீப்குமார், சுரேஷ்குமார இந்திரஜித், விமலாதித்த மாமல்லன் என்ற வரிசை. எழுதி வெளியான ஒவ்வொரு கதையும் இலக்கியச் சூழலில் விவாதிக்கவோ பாராட்டவோ பட்ட காலம் இதுதான் என்று இப்போது குறிப்பிடத் தோன்றுகிறது. இம்மூவரில் அதிகம் உருட்டப்பட்ட பெயர் விமலாதித்த மாமல்லனுடையது. இலக்கியக் காரணங்களுக் காகவும் அந்த நாட்களில் அவர் வரித்துக் கொண்டிருந்த இலக்கியக் கலகக்காரன் பாத்திரத்துக்காகவும் அதிகம் பேசப் பட்டார். சக கலகக்காரராக அறியப்பட்டிருந்தவர் கவிஞர் விக்ரமாதித்தியன்.
ஓர் அறிமுக எழுத்தாளனின் தயக்கத்துடனல்ல; தேர்ந்த கதையாளனின் சரளத்தன்மையுடன் அறிமுகமானவர் விமலாதித்த மாமல்லன். முதல் கதை வெளியான ஆண்டிலேயே அரை டஜனுக்கு மேற்பட்ட கதைகளும் ஒரு குறுநாவலும் அச்சேறியிருந்தன. அதுவரையிலான தமிழ்ச் சிறுகதை மரபில் அநாயாசமாகப் பொருந்தக் கூடியவையும் அதிலிருந்து முன் நகரக் கூடியவையுமான கதைகள் அவை. அதனாலேயே அந்தக் காலத்துச் சிறுகதைப் போக்கின் கிளைவழியைச் சுட்டுபவர்களில் ஒருவராகவும் இருந்தார். வாசிப்பின் மூலம் வந்தடைந்திருந்த இந்தக் கருத்துகளை அழுத்தமாக வெளியே சொல்லத் தயக்கமிருந்தது. தேவையற்றது அந்தத் தயக்கம் என்பதை தி.ஜானகிராமனைச் சந்தித்த பின்னர் புரிந்து கொண்டேன்.
தி.ஜானகிராமனையும் விமலாதித்த மாமல்லனையும் முதலில் சந்தித்தது ஒரே நாளின் இரு வேறு பொழுதுகளில் என்ற தற்செயல் நிகழ்ச்சி இப்போது மகிழ்ச்சியளிக்கிறது. சிற்றிதழ்களின் ஒருங்கிணைப்பு, தீவிர இலக்கியச் செயல்பாடுகளுக்கான கூட்டமைப்பு என்ற நோக்கங்களை முன்வைத்து உருவாக்கப்பட்ட 'இலக்கு' அமைப்பின் இரண்டு நாள் கூட்டத்துக்காக நண்பர்களுடன் சென்னை சென்றிருந்தேன். கூட்டம் பிற்பகலில். எனவே காலையில் வேறெங்காவது போவது என்று முடிவானது. திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு மூன்று கட்டடங்கள் தள்ளித்தான் 'கணையாழி' இதழின் அலுவலகம் இருந்தது. அப்போது தி.ஜானகிராமன் அதன் கௌரவ ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார். அவரைச் சந்திப்பது என்று முடிவானது.காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு ஜானகிராமனைச் சந்தித்தோம். முதலில் 'கணையாழி' அலுவலகத்திலும் பின்னர் பெல்ஸ் சாலையின் தொடக்கத்திலிருந்த முரளி கேப்பிலும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம் .ஆரம்பப் பரவசங்கள் கலைந்து இயல்பான உரையாடலுக்குத் திரும்பிய போது அவருடைய சிறுகதைகள் பற்றிப் பேச்சு வந்தது. என்னை வசீகரித்த பல ஜானகிராமன் கதைகளும் எங்கே அந்த வசீகரத்தின் நுண் நரம்பை வைத்திருந்தன என்பதைச் சொல்லி வியந்து கொண்டிருந்தேன். காப்பி மிடறுகளுக்கிடையில் அதைக் கேட்டுக் கொண்டு வந்த ஜானகிராமன் குறுக்கிட்டார். 'இதையெல்லாம் விட நுட்பமாகப் பார்த்து எழுதக் கூடிய ஆட்கள் வந்து விட்டார்கள். 'கணையாழி'யிலேயே ஒரு கதை போட்டோம். இலை என்று. புதிதாக ஒருவர் எழுதியது. நன்றாக எழுதி யிருக்கிறார்'. அவர் அடுத்த மிடறு காப்பியை இறக்குவதற்கிடையில் 'நீங்கள் குறிப்பிடுவது மாமல்லன் கதையைத்தானே?' என்று கேட்டேன். இசைவாகத் தலையாட்டினார் ஜானகிராமன். பிற்பகலில் மாமல்லனைச் சந்தித்தபோது எனக்குச் சொல்ல இருந்த முதல் விஷயம் ஜானகிராமனின் அங்கீகாரம் பற்றிய தாகவே இருந்தது. ஏற்கனவே தெரிந்து ஒரு தகவலை மீண்டும் கேட்கிற அசுவாரசியத்துடன் அதைக் கேட்டுக் கொண்டாலும் உள்ளூர அதில் மகிழ்ச்சியடைந்தார் என்பதை அவர் கண்கள் தெரிவித்தன. ஓர் இலக்கிய நட்பு அன்று தொடங்கியது.
பின்னர் வேலை கிடைத்து சென்னை செல்ல நேர்ந்தபோது விமலாதித்த மாமல்லனுடனான சந்திப்புகள் தொடர்ந்தன.கடிதத் தொடர்புகள் ஏற்பட்டன. இடையில் அவருடைய கதைகள் வெவ்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தன. சில கதைகள் அப்போது நான் தொடர்புகொண்டிருந்த சிற்றேடுகளில் வெளியாகவும் முகாந்திரமாக இருந்திருக்கிறேன். சென்னையில் ஓரிரு முறை அவரது வீட்டிலேயே தங்கியிருக்கிறேன். வெளியிடங்களில் தங்கினாலும் மாலை நேரச் சந்திப்புகள் நிச்சயம். அன்று சென்னை வாசிகளாக இருந்த பல எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் ஓவியர்களையும் தீவிர வாசகர்கள் சிலரையும் நேரில் சந்தித்தது மாமல்லன் துணையுடன்தான். மத்திய அரசின் கலால் துறை ஊழியராக இருந்தவர் எல்லா வற்றையும் துறந்து தேசாந்திரம் புறப்பட்டார். பாதியில் திரும்பி வந்து மறுபடியும் வேலையில் சேர்ந்தார். சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு மாற்றல். அங்கும் சந்தித்திருக்கிறேன். அப்போதும் காவியுடுத்து சந்நியாசம் கொள்கிற மனநிலையில்தான் இருந்தார். இந்தக் காலங்களிலெல்லாம் இலக்கியவாதியாகவும் தீவிரமாகச் செயல்பட்டார். எழுத்துடன் இலக்கியக் கலகங்களும் அவரைக் கவனத்துக்குரியவராக்கின. எழுத வந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தொகுப்பைக் கொண்டு வரும் தீர்மானத்துக்கும் வந்திருந்தார். அதுவும் சொந்த வெளியீடாக. அன்றைய பதிப்புச் சூழல் அப்படி. எழுத்தாளனோ கவிஞனோ தன்னுடைய படைப்பைப் புத்தக வடிவில் பார்க்க ஒன்று தானாகவே வெளியிட்டுக் கொள்ள வேண்டும். அல்லது பதிப்பாளரின் தயவுக்குக் காத்திருக்க வேண்டும். அன்றைய நிலையில் க்ரியாவோ அன்னமோ வெளியிட்டால் மட்டுமே இலக்கிய வாசகர்களின் கவனத்துக்குச் செல்ல முடியும். அவர்களாக முன்வந்து வெளியிடக் காத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்பின் காலக்கெடு பதிப்பாளர்க ளாலேயே ஊகிக்க முடியாதது. தவிர, எல்லாரையும் எல்லா வற்றையும் விமர்சனம் செய்கிற விமலாதித்த மாமல்லன் போன்ற 'இலக்கியச் சண்டிய'ரின் புத்தகத்தை வெளியிடப் பதிப்பாளருக்கு அசாத்தியமான பெருந்தன்மை வேண்டியிருந்தது. துரதிருஷ்டவசமாக மாமல்லனுக்கு அந்தப் பெருந்தன்மையின் ஆலிங்கனம் வாய்க்கவில்லை. அது குறித்தெல்லாம் கவலைப்படுகிற ஆளல்ல என்பதால் புத்தகத் தயாரிப்பு முயற்சியிலும் இறங்கினார். பணம் திரட்டினார். அச்சகத்தை கண்டு பிடித்தார். ஆதிமூலத்திடமிருந்து முகப்புக்கான ஓவியத்தை வரைந்து வாங்கினார். விக்ரமாதித்தியனிடம் பிழை திருத்துநர் பணியை ஒப்படைத்தார். இந்தக் கிரமத்தில் முன்னுரை எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்டதுதான் வியப்பளித்தது. ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதும் அளவுக்கான ஆகிருதி எதுவும் அன்று எனக்கிருக்கவில்லை. இலக்கிய முன்னவர்களும் விமர்சகர்களும் வாசகர்களும் பொருட்படுத்தக் கூடிய சில கவிதைகளை எழுதியிருந்தேன் என்பது தவிர வேறு தகுதியைக் கொண்டிருக்கவில்லை. அதை மாமல்லனிடம் சொன்னேன்.' யே, எல்லாம் நீ எழுதினா சரியா இருக்கும்பா' என்றார். அந்த வாசகம் அன்று எனக்களித்த தன்னம்பிக்கை மிகவும் உற்சாகமூட்டியது. அந்த உற்சாகத்துடன் முன்னுரைக்குத் தயாரானேன். நோட்டுப் புத்தகத்தாளில் பத்துப் பக்கங்கள் வரக் கூடிய கையெழுத்துப் பிரதியுடன் சென்னைக்குப் புறப்பட்டேன். முன்னுரையின் கடைசி இரண்டு பத்திகள் எழுதப்படாமல் இருந்தன. அவற்றை இரவோடிரவாக அவர் வீட்டில் உட்கார்ந்து எழுதி முடித்தேன். சில நாட்களுக்குப் பின்னர் விமலாதித்த மாமல்லனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'அறியாத முகங்கள்' வெளியானது.
இன்று யோசிக்கும்போது சாதாரணமான செயலாகத் தென்படும் காரியம் அன்று வெவ்வேறு பொருட்களைத் தந்தது. இலக்கியம் வழியான நட்பு, அதன் மூலமான ஒத்துழைப்புகள், புதிதாக எழுத வருபவர்களின் அடையாள உருவாக்கம், ஒரு படைப்பை சகவாசகனுக்குப் பரிந்துரைப்பதற்கான துணிவு, அடிப்படையான இலக்கியக் கருத்துகளை உருவாக்கிக் கொள்ளும் சிந்தனை முறை, எல்லாவற்றுக்கும் மேலாக 'நானும் இலக்கியவாதி' என்ற தோளுயர்த்தல் என்று பல அர்த்தங்களை அந்தச் செயல் தந்தது. முன்னுரை அந்தப் புத்தகத்தின் இலக்கியப் பெறுமானத்தைக் கூட்டியதா இல்லையா என்பது தெரியவில்லை. முன்னுரை மூலம் ஒரு படைப்பு நிலைநிற்பதில்லை என்பதுதானே உண்மை? எனினும் அந்த முன்னுரை எனது இலக்கியத் தகுதியை ஒரு மாற்றுக் கூட்டியது என்றே கருதுகிறேன்.'அறியாத முகங்க'ளுக்குப் பிறகு இன்றுவரை முப்பது புத்தகங்களுக்காவது முன்னுரை எழுதியிருக்கிறேன். இருபத்தி ஏழு வருடங்கள் கழித்து முதல் முன்னுரை எழுதிய அதே எழுத்தாளரின் கதைகளை, அதே நோக்கத்துக்காக மீண்டும் வாசிக்கையில் தவிர்க்க முடியாமல் இந்த எண்ணங்கள் நன்றி கூரலுடன் மேலெழுகின்றன.
விமலாதித்த மாமல்லனின் கதைகள் குறித்தும் அதற்கு எழுதப்பட்ட முன்னுரை பற்றியும் சொல்லப்பட்ட கருத்துகளும் கூடவே நினைவுக்கு வருகின்றன. மாமல்லன் கதைகளில் அசோகமித்திரனின் பாதிப்பும் என்னுடைய உரைநடையில் சுந்தர ராமசாமியின் செல்வாக்கும் தென்படுவதாகப் பரவலாக விமர்சிக்கப்பட்டது. அசோகமித்திரன் கதைகளில் தகவல்களை அடுக்குபவர்; அதை நேர்த்தியாகச் செய்வதனால் மிகச் சிறந்த தொழில்நுட்பரே தவிர 'உன்னதமான எழுத்துக் கலைஞர் அல்லர்'. அவரைப் பின்பற்றும் மாமல்லனும் கைவினைஞரே. இதே தொனியிலான விமர்சனம் எனக்கும் கிடைத்தது. இவை பொருட்படுத்தப்பட வேண்டிய கருத்துகளல்ல என்று உணர்ந்திருந்தாலும் மறைமுகமாக அவற்றின் கூர்மை மெல்லிய கீறலை இருவருக்கும் ஏற்படுத்தியிருந்தது என்றே தோன்றுகிறது. இன்று யோசிக்கும்போது இந்தக் கருத்துகளை வலுப்படுத்தும் விதமான தரவுகள் எதுவுமில்லை என்பது புலனாகிறது. அசோகமித்திரன் கதைகளில் காணப்படும் செறிவும் நுட்பமான தகவல் துல்லியமும் மாமல்லன் கதைகளிலும் காணப்படுகிறது என்பது ஒற்றுமை. ஆனால் ஒரு படைப்பை நிர்ணயிக்கிற படைப்பாளனின் பார்வை வெவ்வெறானது. அதைக் கவனத்தில் கொள்ளாமல் விட்டதுதான் மேற்சொன்ன 'மூட ஒப்பீட்டு'க்குக் காரணம். செறிவு, நுட்பமான தகவல் ஆகிய பொதுத் தன்மைகளால் சமப்படுத்திப் பார்க்கக் கூடியவை அசோகமித்திரனின் 'பார்வை'யும் விமலாதித்த மாமல்லனின் 'இலை'யும். இரு கதைகளையும் ஒப்பிட்டு வாசிக்கும் தேர்ந்த வாசகனால் இந்தப் பார்வை மாற்றத்தை எளிதில் இனங்காண முடியும். 'பார்வை'யை விமலாதித்த மாமல்லனோ 'இலை'யை அசோகமித்திரனோ எழுதியிருக்க முடியாது என்பது துலங்கும். எல்லாவற்றையும் விட தமது படைப்புகளில் இருவரும் சித்தரிக்கும் உலகங்கள் வேறானவை என்பது புலப்படும்.
மேற்சொன்ன விமர்சனம் விமலாத்தித்த மாமல்லனைக் குண்டூசிக் குத்தல் அளவுக்காவது பாதித்திருக்கலாம் என்பது என் யூகம். அதை அவர் படைப்பூக்கத்துடன் எதிர்கொண்டார் என்பது என் முடிவு. அதன் விளைவாகவே ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவையான கதைகளை எழுதினார் என்று எண்ணுகிறேன். அவையனைத்தும் அவர் வாழ்ந்த காலத்தின் அடையாளங்க ளுடனும் பெற்ற அனுபவங்களின் உயிர்ப்புடனும் உருவாகியிருக்கின்றன என்பதை எல்லாக் கதைகளையும் ஒன்று சேர்த்து வாசிக்கும் தருணத்தில் கண்டடைய முடிகிறது.
நண்பர்களாக இணைந்து நாங்கள் செயல்பட்டது மிகக் குறைவு. இலக்கியவாதிகளுடனான சந்திப்புகள், புதிய போக்குகள் பற்றிய பேச்சுகள், பெரும் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய பகிர்ந்து கொள்ளல்கள், கலைப்படங்களுக்கான தேடல்கள், இலக்கிய விவாதங்கள் என்று பொதுவான ஆவேசம் எங்களை இணைத்திருந்தது. இவற்றிலெல்லாம் விமலாதித்த மாமல்லன் ஒரு விதமான சாகச உணர்வுடனேயே ஈடுபட்டார். அந்த உணர்வும் செயலும் தரும் புதுமையுணர்வுகளுக்குத் தன்னைத் திறந்து கொடுத்திருந்தார். சந்நியாசம் போனதும் சமூக சேவகரான பாபா ஆம்தேயின் தலைமையில் இந்திய ஒருமைப்பாட்டுக்காக நாடு முழுவதும் சைக்கிள் பயணம் போனதும் நாடகங்களில் நடித்ததும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியதும் ஜோதிட நம்பிக்கைகளுடன் திரிந்ததும் இஸ்லாமிய சித்தர்கள் மேல் பக்தி பாராட்டியதும் அதிலிருந்து விலகியதும் எல்லாம் இந்த மனத் திறப்பின் கூறுகளே. இவையெல்லாம் அவர் எழுத்திலும் பதிவு பெற்றிருக்கின்றன. க்ஷணச் சித்தமும் க்ஷணப் பித்தமுமான இந்த மாமல்ல மனோபாவத்துக்கு எதிரான திட சித்தமும் திடப் பித்தமுமான மனநிலை என்னுடையது. ஆனால் அடிமனத்தில் மாமல்லனைப் போல ஆவேசப் பாய்ச்சலுக்கான ஏக்கம் எனக்கும் இருந்திருக்கிறது. இலக்கிய சங்கதிகளை மீறிய நட்புக்கு ஒருவேளை இந்த ஏக்கம் காரணமாக இருக்கலாம். அந்த வகையில் விமலாதித்த மாமல்லன் பரோபகாரி. நான் மட்டுமல்ல அவரை நெருக்கமாக அறிந்த வேறு இலக்கிய நண்பர்களும் இந்த வாக்கியத்துக்குச் சான்றளிக்கக் கூடும். தன்னுடைய சிறுகதைத் தொகுதியை வெளியிட்ட அனுபவத்தில் தொடர்ந்து இரண்டு நூல்களை அச்சியற்றி வெளிக் கொணர விமலாதித்த மாமல்லன் மேற்கொண்ட முயற்சிகளை இந்த சாகச உணர்வின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். முதலாவது புத்தகம் எனது முதலாவது கவிதைத் தொகுதியான 'கோடைக் காலக் குறிப்புகள்'. இரண்டாவது நூல் - பிரமீள் எழுதிய 'ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை'. அவருடைய வற்புறுத்தலும் ஒத்துழைப்பும் இல்லாமலிருந்தால் நான் புத்தகத்தைப் பற்றிக் கற்பனை கூடச் செய்திருக்க மாட்டேன். பணத்தையும் கையெழுத்துப் படியையும் ஒப்படைத்ததைத் தவிர நூலாக்கத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. நாற்பத்து எட்டுப் பக்கமுள்ள அந்த மெல்லிய தொகுதிக்குப் பின்னால் மாமல்லனால் ஒருங்கிணைக்கப்பட்ட தோழமை இருந்தது. புத்தகத்தை வடிவமைத்தவர் பஷீர், மெய்ப்புப் பார்த்தவர் விக்ரமாதித்தியன். முன்னுரை எழுதியவர் பிரம்மராஜன்.
இந்த இலக்கிய ஒத்துழைப்பு வலுவாகி, சொந்த வாழ்க்கைப் பிரச்சனைகளிலும் விமலாதித்த மாமல்லனின் யோசனைகளுக்குச் செவிசாய்த்திருக்கிறேன். சில முடிவுகளுக்கு உடன்பட்டிருக்கிறேன். சென்னையில் வசிக்க இடம் தேடியபோது வழி காட்டியவர் அவர்தான். ஓவியர் அச்சுதன் கூடல்லூர், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், முருகேசபாண்டியன் போன்றவர்கள் தங்கியிருந்த இடம் என்று மீர்சாகிப் பேட்டை பி.என்.சி. மான்ஷனில் கொண்டுபோய்த் தள்ளினார். சிறிது காலத்துக்குப் பின்னர் சகோதரிகளுடன் வசிக்க ஆரம்பித்து, பார்த்துக் கொண்டிருந்த வேலை இல்லாமற் போனபோது ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யலாம் என்று யோசனை சொல்லி அதற்கான முதலீட்டுக்கும் வழிகாட்டி கல்கத்தாவுக்கு அனுப்பினார். இவையெல்லாம் என் வாழ்க்கையின் திருப்புமுனை நாட்கள். மாமல்லன் திருப்பி விடாமலிருந்தால் வாழ்க்கை வேறு திசைகளில் நகர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். இலக்கியம் மாபெரும் அற்புதங்களை நிகழ்த்த வேண்டாம். குறைந்த பட்சம் சக மனிதனைப் பொருட்படுத்துவதற்கான கருவியாக இருந்தால் போதும் என்ற அடிப்படை நம்பிக்கையின் எடுத்துக் காட்டாகவே இதைப் பார்க்கிறேன்.
இந்த முழுத் தொகுப்பில் 1980 முதல் 1995 வரை விமலாதித்த மாமல்லன் எழுதிய முப்பது கதைகள் இருக்கின்றன. அவர் உற்சாகத்துடன் இயங்கிய ஒன்றரைப் பதிற்றாண்டுக் காலத்தின் விளைச்சல் இவை. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட கதைகளுக்கு முதல் வாசகன் அநேகமாக நானாகத்தான் இருப்பேன். கதைக் கருவாகத் தொடங்கி அதன் வளர்ச்சி பற்றிய விவரங்களினூடே இறுதி வடிவம் பெறும் வரை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில கதைகள் சொல்லப்பட்ட வடிவத்தில் அல்லாமல் வேறாக உருமாற்றம் பெற்றதையும் பார்த்திருக்கிறேன். மிகச் சரளமான எழுத்தாகத் தோன்றும் இந்தக் கதைகள் பலவும் பலமுறை திரும்பத் திரும்ப எழுதப்பட்டவை. கூற்றும் எழுத்துமாக கதைகளை அகப்பட்ட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதை மாமல்லன் ஒரு பயிற்சியாகவே மேற்கொண்டிருக்கிறார் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.இது இரண்டு விதமான கதையாடல்களுக்கு வழி வகுத்திருக்கிறது. ஒரே சமயத்தில் ஜானகிராமன், கி.ராஜநாராயணன் போன்ற செவ்வியல் முன்னோடிகளின் மரபைச் சார்ந்த கதை சொல்லியாகவும் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற நவீனத்துவர்களைப் பின் தொடரும் கதை எழுத்தாளராகவும் தன்னை முன்னிருத்த மாமல்லனுக்கு இது உதவியிருக்கிறது. 'போர்வை', 'முதல் குடிமகன் விஜயம்' ஆகியவற்றை கதை சொல்லலின் எடுத்துக் காட்டுகளாகவும் ''சிறுமி கொண்டு வந்த மலர்' , நிழல்' முதலானவற்றை வாசிப்புக்குரிய பிரதிகளாகவும் கருதலாம்.
கதைகளை வாசிக்கும் யாருக்கும் முதலில் துலங்கும் அம்சம், விமலாதித்த மாமல்லனின் சிறுகதைப் பிரக்ஞை. முதல் கதையான 'குப்பை' முதல் ' சோழிகள்'வரையிலான கதைகள் வரை பார்த்தால் இதை உணர முடியும். மிகையற்ற சொற்கள், நுட்பமான தகவல்கள், பராக்குப் பார்க்காமல் இலக்கை நோக்கி நகரும் வேகம், பாத்திரங்களின் உருவாக்கம், அவர்களது பின்னணி சார்ந்தே அமையும் உரையாடல், கதையாடலின் நம்பகத்தன்மை - இந்த இலக்கிய இயல்புகள் தொகுதியிலுள்ள எந்தக் கதையிலும் சோடை போனதில்லை. இது தமிழ்ச் சிறுகதைக் கலையில் உள்ளார்ந்து இயங்கும் இந்த மரபை மாமல்லன் அநாயாசமாக ஏற்றுக் கொண்டிருப்பதன் விளைவு. கதையாக்கத்தின் இன்னொரு அம்சம் அவற்றின் வகைப்பாடுகள். எதார்த்தம் சார்ந்த கதைகள் முதல் அதி புனைவுகள் ( சிறுமி கொண்டு வந்த மலர், குல்லா), உருவகக் கதைகள் (உயிர்த்தெழுதல்) , செறிவான குறுநாவல்கள் (பெரியவர்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்) என்று வெவ்வேறு வகையான படைப்புகளைத் தொகுப்பில் காணலாம். தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்பவராகவும் தாண்டிச் செல்லுபவராகவும் வைத்துக் கொள்ளும் முனைப்பின் சான்றுகள் இவை.
இலக்கியம் எப்போதும் சமகாலத்துடனான எதிர்வினை யாற்றல்தான். அப்படிச் செயல்படும்போதே அது சமகாலத்தை மீறவும் முனைகிறது. சமகாலத்தின் பிரச்சனைகளையும் அதனுடன் தொடர்பு கொண்ட பின்னணிகளையும் கொண்டிருக்கும்போதே அதைக் கடக்கவும் எத்தனிக்கிறது. ஒரு படைப்பாளிக்கு சவாலான இடம் இது. நடைமுறையில் புழங்கும் மோஸ்தர்களை அடியொற்றி இந்தச் சவாலை எதிர்கொள்வது எளிது. விமலாதித்த மாமல்லன் இந்த சுலப நடைமுறைக்கு எதிரானவர் என்பதைக் கதைகள் காட்டுகின்றன. மாய எதார்த்தவாத எழுத்தின் நிழல் தமிழ் நவீனச் சிறுகதைகளின் மீது படர்ந்திருந்த காலத்தில் எழுதப்பட்ட கதையாக 'சிறுமி கொண்டு வந்த மலரைச் சொல்லலாம். ஆனால் அது ஒரு மோஸ்தரை இறக்குமதி செய்த கதையாக அமையவில்லை. சமகாலத் தமிழ் நகர வாழ்வின் வலுவான தளத்தில் வேர் கொண்டதாகவே உருவாகியிருக்கிறது. 'பந்தாட்டம்' கதையையும் அதே தளத்தில் காணலாம். இரு கதைகளும் எழுதப்பட்ட காலத்தின் அடையாளங்களைக் கொண்டவை; எனினும் அதைக் கடந்து இன்றும் பொருள்படுபவை. 'தாசில்தாரின் நாற்காலி'யில் கையாளப்படும் பிரச்சனை இன்றும் வேறு வடிவத்தில் தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது?
'வாழ்ந்து பெறும் அனுபவங்களின் எதிர்வினையே கலை - என்பதை இலக்கிய அடிப்படையாகக் கொண்டால் அந்த வரையறையை இந்தக் கதைகள் பெருமளவு நிறைவேற்றுகின்றன' என்ற வாக்கியத்தை 'அறியாத முகங்கள்' முன்னுரையில் எழுதியபோது அது யூகம் சார்ந்தும் எதிர்பார்ப்பின் வெளிப் பாடாகவும் இருந்தது. எவ்வளவு உத்திகளும் போக்குகளும் தோன்றி மறைந்தாலும் வாழ்வனுபவத்தின் மீது உருவாக்கப் படும் படைப்பே வலுவானது என்ற ஆகப் பழையதும் ஆனால் என்றும் புதுமையானதுமான கருத்தே எனக்கு உவப்பானதாக இருக்கிறது. சொல்லித் தீராத புதிர்களையும் விளங்கி முடியாத மர்மங்களையும் வாழ்க்கை வைத்துக் கொண்டே இருக்கிறது. விமலாதித்த மாமல்லனின் மொத்தக் கதைகளையும் மீண்டும் வாசிக்கும்போது அவருடைய எழுத்தின் மைய நோக்கமும் உணர்வும் இந்தக் கருத்துத்தான் என்பது புலனாகிறது. இந்தக் கதைகளில் பெரும்பான்மையும் அவரது அனுபவங்களின் ஈரத்தைக் கொண்டிருப்பவை. குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டவை, அலுவலக வாழ்க்கையைச் சித்தரிப்பவை, சமூகப் பிரச்சனைகளை அலசுபவை, அமானுஷ்ய எல்லைகளில் சஞ்சரிப்பவை ஆகிய எல்லாக் கதைகளிலும் எழுதியவரின் அனுபவம் அழுத்தமாகப் படிந்திருக்கிறது. அத்துமீறலாக ஓர் உதாரணத்தைச் சொல்லலாம். வெகு சரளமாக எழுதி வந்த மாமல்லன் ஒரு கட்டத்தில் துவண்டு போனார். எழுதுவதற்காகப் போராடினார். மனநல மருத்துவரின் ஆலோசனையையும் சங்கிலி பாபாவின் சித்துவேலையையும் நாடினார். இந்த அனுபவத்தையே 'உயிர்த்தெழுதல்' என்று கதையாகவும் எழுதினார். கதையாக அது அவருடைய அனுபவம் மட்டுமல்ல; வீழ்ச்சியிலிருந்து மீளப் போராடும் என்னுடையதும் உங்களுடையவும் கதையும்தான்.
வரையறைகள் கொண்டதுதான் விமலாதித்த மாமல்லனின் கதையுலகம். நகரப் புற மத்திய வர்க்க வாழ்க்கை அனுமதிக்கும் அனுபவங்களை முதன்மையாகப் பேசுவது. அதிலும் அவருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய பின்னணிகளில் கதையாடல்கள் உள்ளன. அதே சமயம் இந்தக் கதைகள் மத்தியதர வர்க்க வாழ்க்கை முன்வைக்கும் மதிப்பீடுகளைக் கேள்விக்கும் விமர்சனத்துக்கும் உட்படுத்தவும் செய்கின்றன. அதையொட்டியே அந்தப் பின்னணியைக் கடக்கும் கதைகளையும் அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது. 'நிழல்', 'ஒளி' போன்ற கதைகள் அவ்வகையிலானவை. இந்த மொத்தக் கதைகளிலும் வாழ்வின் மீதான ஓர் எழுத்தாளனின் பார்வை குவிகிறதே தவிர அதை கோட்பாடாக்கும் சமத்காரமோ மோஸ்தராக்கும் தந்திரமோ வெளிப்படுவதில்லை. இந்த இலக்கிய அமைதிதான் விமலாதித்த மாமல்லன் கதைகளை இன்றைக்கும் பொருந்தக் கூடியவையாக நிலைநாட்டுகின்றன. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பதிலிருந்து பதினைந்து ஆண்டுகள் கடந்த இக் கதைகள் மொழி வழக்கில் மட்டும் மெல்லிய பழைமையைக் கொண்டிருக்கின்றன. அது காலத்தின் மேலோட்டமான மாற்றம். ஆனால் பொருளிலும் கதையாடலிலும் சம காலத்தன்மை குன்றாமலேயே மிளிர்கின்றன. அது அவ்வளவு எளிதானதல்ல. இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு யாருடைய முதல் தொகுப்புக்கு முன்னுரை எழுதினேனோ அவருடைய இதுவரையிலான கதைகளின் முழுத் தொகுப்புக்கும் முன்னுரை எழுத வாய்த்திருக்கிறது. இதுவும் அவ்வளவு எளிதானதல்ல.
சுகுமாரன்
திருவனந்தபுரம்
15 டிசம்பர் 2010