தொல்லை
மீசை முளைக்கும் முன்பாக
முன்னால் நீண்டது பல்லெனக்கு
சும்மா இருக்கும் போதினிலும்
சிரிப்ப தாகக் காட்டிற்று.
கேலிப் பொருளாய் நான் மருக
கேலிச் செயலென பகையாச்சு
வேறு வழிகள் தெரியாமல்
சவரம் நிறுத்த முடிவெடுத்தேன்.
அடரும் தாடி பார்த்துட்டு
கூட்டம் கூடத் தொடங்கிற்று
கூடும் கூட்டம் தினம்பார்த்து
பேச்சும் நீளத் தொடங்கிற்று
வாயைத் திறக்கும் போதெல்லாம்
தானாய் இளிக்கிற தெத்துப்பல்
இருப்பது மறப்ப தெப்படிடா
மார்க்கம் ஏதும் இருந்தால் சொல்
தெற்றுப் பல்லொரு ரோதனையா
தட்டிப் பையில் வைத்துக்கொள்
மீன்முள் எலும்பு முறுங்கைக்காய்
சூப்பும் போது மாட்டிக்கொள்.
***
மானஸ்தன்
கூண்டிலே
மொட்டைக் கரத்துடன் ஒருவன்
எதிரிலே சிறைபுகச் சித்தமாய்
இன்னொருவன்.
நடந்ததை விளக்கினார் வக்கீல்.
நீயெல்லாம் ஒரு அப்பனுக்குப் பிறந்தவனா?
இன்னொருமுறை கைநீட்டி சொல்லடா!
கை
நீட்டாவிட்டால் இவனுக்கு மானமில்லை
நீட்டிய கையை
வெட்டாவிட்டால் அவனுக்கு மானமில்லை
வேறு என்னதான் செய்வான்
மானமுள்ள மனிதன்.
***
ஸ்திதி
பீயை மொய்க்கும் ஈயையும்
தேன் திரட்டுவதாக
பாவிப்பதால்தான் நிலைக்கிறது
மனைவியின்
மாதரசி பாத்திரம்.
***
உபாசனை
புத்தகத்தில் முகம் புதைத்தால்
புத்திஜீவி ஆகலாம்
புத்தனாக முடியுமா?
புட்டத்துக் கிழிசலை
புத்தகம்தான் மறைக்குமா?
நடமாடிய
விவேகானந்த சர்வகலாசாலை
மண்டியிட்டது
ஒரு தற்குறியிடம்.
’அது போகிறது தேடவேண்டாம்’
எழுதி வைத்து
பதின்மூன்றில் வீட்டைத் துறந்தவன்
எந்த புத்தகத்தில் தனக்கான
மலையைக் கண்டான்?
கொக்கோக மெளன கோஷம்
மனதில் முரசறையும்
ஆன்மீகப் புரட்சி கோஷியே!
புலித்தோல் அறியும்
உன் புட்டத்துக் கிழிசல்.