கடவுளென நம்பிய கற்சிலை
அதிவேகக் கடற்குதிரையில்
சவாரிக்கும் சீருடைகளிலிருந்து
”எல்லை தாண்டினாய்” என
சீறுகின்றன குண்டுகள்.
மாரி மேரிகளின் தாய்மை
கடாக்ஷம் மறந்து
உண்டியல்மேல்
நிலைத்திருக்கிறது.
செத்தவன் குருதியில்
சிவக்கிறது கடல்.
குறி தவறிய குண்டின் கருணையில்
குற்றுயிராய்ப் பிழைத்தவன்
கைகளை துடுப்பாக்கித்
தத்தளிக்கிறான்.
முக்காலமும் உணர்ந்தவன்
விகாரைக்குள்
சம்மணமிட்டு கைகட்டி
புன்னகைக்கிறான்.
நடைதிறக்க இன்னும்
நேரம் இருக்கிறது என்று
வேடிக்கை பார்க்கிறது
கடவுளென நம்பிய கற்சிலை.