பிரமிளின் கவிதைகள் புத்தகத்திலிருந்து நன்றியுடன்
ஆவி குமுதம் ஜூவி வாசிக்கிறேன், கல்கி சாண்டில்யன் கரைத்துக் குடித்திருக்கிறேன், சுஜாதாவை சுவாசிக்கிறேன், வைரவரிகளைப் பூஜிக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு மேலே இருக்கும் கவிதை புரியவில்லை என்றால் கோளாறு என்னிடமா? என்று கேட்கும் ஒரு மனிதரிடம் வார்த்தைக் கொல்லர் லா.ச.ராவில் தொடங்கி வார்த்தைப் பேச்சாளர் ஜெயகாந்தன் வரையில் கொஞ்சம் தூள் பக்கோடாவாகவாவது கடித்துத் தின்று மென்று பாரும், ஆரம்பத்தில் பேதியாகும் போகப்போக செட்டாகும். அதற்கப்புறம் இவர் கவிதையை முயற்சித்துப் பாரும் புரியக் கூடும் எனலாம்.
காரணம் எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிவது மட்டுமே இலக்கிய வாசிப்பிற்குப் போதுமானதல்ல என்பதுதான். ஆரம்பத்தில் குறிப்பிட்ட வெகுஜன பத்திரிகைகள் / எழுத்தாளர்கள் வாசிப்பவனுக்கு எந்த உபாதையும் அளிக்காமல் அவனது இயற்கை உபாதைகளைத் தணிப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்களைப் படிப்பதில் உள்ள ஒரே உபயோகம், புத்தகத் தலையணைகள் குறித்த மிரட்சியைப் போக்குகிறார்கள் என்பதுதான். இவர்களை வாசித்த பழக்கம் விரல் சூப்பும் குழந்தைக்கு ஒப்பானது. பாச்சி கிட்டாத சமயத்து பாசாங்குப் பழக்கம். எச்சிலைப் பாலாக நினத்துக்கொள்ளும் பாவனை.
இரண்டு விரலை வாயில் வைத்துக் கொண்டு ஒரு 35 வயது, அவ்ங்க எய்யினது எள்ளாம் எயக்குப் புயியுது, புயியாம எய்யுயதுதான் இயக்கியமா? இள்ள நீ இயக்கியம்னு ஷொல்ழதுதான் இயக்கியமா? என்று கேட்குமென்றால், சகிக்கலை விரலை எடு இந்தா குச்சி ஐஸ் இதை வைத்துக் கொள் எனக் கொடுக்கலாம் இலக்கியம் விவாதிக்கலாமோ?
வீடுவிட்டு வெளியேறி, ஒற்றையடிப் பாதை வழியே ஊர் தாண்டி, விஸ்தார சாலைக்கு வருவதென்பது விரதமில்லையா? அது என்ன சாதாரண விஷயமா? தேசீய நெடுஞ்சாலையிலேயே நடக்கத் தொடங்கிவிட்டேன், ஆனாலும் இந்தக் கவிதை புரியவில்லை எனச்சொன்னால், சொல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், இன்னும் கொஞ்சம் முயற்சி செய், கவிதையில் எந்த இடம் புரியவில்லை?
கொஞ்சம் முன்னாலேந்து படியேன். புரியிது புரியிலேன்னு கவலைப்படாம ஆரம்பத்துலேந்து கடைசி வரிக்கும் சும்மா சரசரன்னு படியேன். புரியலைதானே பரவாயில்லை.சரி இப்ப ஆரம்பத்துலேந்து இன்னொரு தடவைப் படி. ஆரம்ப வரிகளைத் தலைப்போட சேத்துப்படிச்சா கொஞ்சம் புரியிறா மாதிரி இருக்கா. சபாஷ். அதுகூட கடைசி லைனையும் கோர்த்துப் படிச்சா வேற அர்த்தம் வருதா அதான் அதான் இன்னும் இன்னும். நீ நீதான் படிக்கிறே நா ஒண்ணும் சொல்லலே. கேள்வில்லாம் வந்தா வாய்விட்டுக் கூச்சப்படாமக் கேட்டுக்கோ. பதில் தன்னால கெடைக்கும்.
அது எப்படி? கருகாத தவிப்புங்கறது ஒரு மன நிலை! திரிங்கறது கண்ணுக்கெதுற தெரியிற ஒரு பொருள். விளக்குலப் போட்டு எரிஞ்சி வெளிச்சம் குடுக்க உபயோகிக்கிற பொருள். அதெப்படி தவிப்புல்லாம் சேந்துத் திரியாகி நாக்கு பொளந்து எரிஞ்சா, கபகபன்னு இல்ல எரியும். சீக்கிரம் இல்ல அணைஞ்சிடும். இங்க என்னாடான்னா அணையாத எரியுதுங்கறாரு. நீ... ஏம்பா இது என்ன காதல் கவிதையா?
செல்லமே அதேதான். இப்ப காதல்ங்கற பேக்ரவுண்ட வெச்சிகிட்டு இன்னும் கொஞ்சம் படி.
அடுத்ததுல என்னா நெருப்பச் சொல்றாரா இல்ல பொம்பளைய சொல்றாரா? இல்லாட்டிப் பொம்பளைய நெருப்பு மாதிரி சொல்றாரா? மொதல்ல, தவிப்ப சொன்னாரு. இப்ப அதையே பொம்பளையாக்கறாரா அட! ஒரே நெருப்பு ரெண்டுத்துக்கும் செட்டாவுது.
நரம்புவலை பூரா...ரத்தத்துல அவள் வடிவமா? மின்நதி சர்ப்பச்சுருணை எரிந்து சிந்த. என்ன இது மேட்டர் போல இருக்குதே! பஸ்மம் படம்புடைத்தெழுகிறேன் உன்மீதே சரிகிறேன். திரும்பத் திரும்பவா?
எரிவின் பாலை மீண்டு அடடா!.. வாய் பாதம் பதிக்கிறது சூப்பர் இது கொஞ்சம் வைரமுத்து மாதிரியே இருக்கு ஆனா எழுதினது 78 அப்ப வைரமுத்து எங்க இருந்தாரு? ஐயோ இந்தாளு 60ல எழுத ஆரம்பிச்சவரா? தசைப் பசுந்தரை பற்கள் பதிந்தகல என்னாப்பா இது மேல மேல அலைஅலையா வந்துகிட்டே இருக்கு.
இதோ உன் மீதென் முதிராத யுவநடையில் தத்தளித்த முத்தங்கள். ஆகா ஆரம்பத்துல தவிப்புகள் கூடி திரி நா பிளந்து. இப்ப தத்தளித்த முத்தங்கள். தத்தளித்த முத்தங்கள் என்னாய்யா என்னாய்யா எக்ஸ்ப்ரஷன் இது.
நீ தரும் பதில் முத்தங்கள் மதுர வெளி. ஓ மொதல்ல பாலையா இருந்தது பதில் முத்தம் கெடைச்சதும் மதுர வெளி ஆயிடுச்சா. மதுரம் மதுரம்ங்கறது என்னா என்னா ஒரு வார்த்தை அதை வெளியோட கனெக்ட் பண்ணிட்டானேய்யா. ஏற்கெனவேகூட ஒருக்கா வெளின்னு யூஸ் பண்ணினானே ஆ... வெளியில் வகிடெடுத்து.
மதுர வெளியில் மீண்டும் என் உதிரம் அலைகிறது. எல்லாருக்கும் மதுரம் உதிரம் மட்டும்தான் போட வரும். இது அது இல்லே. மொதல்ல மாதிரியே, கண்ணுக்குத் தெரியாத, மதுர வெளிங்கற, மனசுக்கு உள்ள இருக்கற ஒரு எடத்தைக் கண்ணுக்குத் தெரியிற ரத்தத்துல எப்படிய்யா கனெக்ட் பண்றான். அட ஆமா! மாமே! நமக்கு வேண்டியவளை நெனச்சாலெ ஜிவ்வுங்குதே. அதானோ!
பாலையில் படர்கிறது பசுந்தரை.
ஒக்காளா ஓழி என்னென்னமோ அர்த்தம் வருதேய்யா!
”ரொம்ப சந்தோஷமா இருக்கறப்போ குடிக்கணும் இல்லேன்னா கெட்ட வார்த்தை பேசணும்னு தோன்றது இல்லியோ” என்று குறும்பாய் முறுவலித்தபடி, சுந்தர ராமசாமி, 85 வாக்கில், க்ரியா ராம் வீட்டில் நண்பர்களுக்கிடையேயான உற்சாகமான சந்திப்பின் போது கூறினார். ராமகிருஷ்ணன் அடுத்த அறைக்குப் போய் ’கோனியேக், ஃப்ரென்ஞ்ச் ப்ரேண்டி ’ என்றபடி நீள பாட்டிலைக் கொண்டுவந்தார். ஆரம்பத்தில் ஒன்றுமே இல்லை அப்புறம் ஆரம்பித்தது மோகினியின் ஆறத் தழுவல்.
இறுக்கம் வேறு, புரியாமை என்பது முற்றிலும் வேறு. இறுக்கம் எளிமை இரண்டும் ஆளுமை சார்ந்தது. புரியாமை இயலாமை சார்ந்தது. புரியாமல் எழுதுவதில் இறுமாந்து கொள்வது புதைமணலில் இறங்கிக் கொண்டிருப்பதற்கு ஒப்பானது. மண்ணின் அடிச்சூட்டின் கதகதப்பில் மனம் ஆரவாரிக்கக்கூடும். மிச்சம் ஏதுமில்லை என்பது தெரிய வருகையில் ஆள் முற்றாகச் செரிக்கப்பட்டிருப்பான்.
இறுக்கம், செரிவு ஆகியவை மொழிக்குக் கலைஞனின் கொடை. ஆபரண அணிவிப்பு. தன்னைத் தாண்டும் முயற்சியில் சுய விரிப்பில் துல்லிய மனப்பிடிப்பில், மனுஷ்யத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் முயற்சி.
விளையாட்டுக்காரன், நம்மைப் போலவே உடலுறுப்புகள் கொண்ட ஒருவன்தானே! அவனது வீச்சு கண்டு நாம் வாய் பிளப்பது ஏன்?
பின்னது உடலால் தாண்டும் முயற்சி, முன்னது மனமூளையால்.
புதியதை எவனும் சொல்லிவிடவில்லை, சொல்லிவிடப் போவதும் இல்லை. புதிய முறையில் சொல்லவே எத்தணிக்கிறான். அதில் புரியாமல் சொல்வது என்பது ‘ஒரு முறை’ ஆகுமா என்பது கேள்விகூட இல்லை, ஒரு கருத்து அவ்வளவுதான்.
அவனவன் விதியை அவனவன் படைப்பதும் அகப்பட்டுக்கொண்டுவிட்டோமோ என்கிற சுய விமர்சனத்தில் அவற்றை அவனே உடைப்பதும் தானே வாழ்க்கை. வாழ்க்கையின் ஒரு அம்சம்தானே இலக்கியம். இலக்கியத்திற்கான விதி மட்டும் எப்படி வேறாக இருக்க முடியும்.
***********
பிரமிளின் கவிதைகள் படைப்புகளுக்கு
அணுகவேண்டிய இடம்
அடையாளம் வெளியீடு