11 February 2011

குருக்ஷேத்ரம் - பிரமிள்

குருக்ஷேத்ரம்

இன்று வேலை நிறுத்தம்
’கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே’
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கண்ண பிரானுக்குக்
கல்லடி!

சுவரெங்கும்
பசிவேத சுலோகங்கள்!
அர்ச்சுனன் கிளைத்து
அரக்கனாய்
கார்த்த வீர்யார்ச்சுனனாய்
தலை ஆயிரம்
கை இரண்டாயிரம்!

கண்ணபிரான் நெற்றியிலே
உதிரத்தின்
நாமக் கோடுகள்!

விஸ்வரூபத்துக்கும்
முயற்சிக்க வலுவில்லை.

இருந்த கால்களில்
எழும்ப முயன்றான்.
‘கீதையைக் கேட்க 
அர்ச்சுனன் இல்லையென்றால்
கூப்பிடி கெளரவரை’ யென்றான்.

பறந்தது போன் செய்தி
போலீசுக்கு.

*
(1973)

- பிரமிள்

பாரதத்தின் என்றைய நிகழ்காலமும் மகாபாரதமும் பின்னிப் பிணைந்திருக்கிறார் பிரமிள் இந்தக் கவிதையில். நிகழ் உலகை கலை எனும் மாயச்சரட்டில் புராண கற்பித உலகின் சம்பவங்களோடு மாலையாகத் தொடுத்து திரும்ப மண்ணுக்குக் கொண்டு வருவதைப் பாருங்கள்.

சமூக விழிப்புணர்வு இங்கே எப்படிக் கலையாகிறது. இதற்கு இணையான ஒரே ஒரு முற்போக்குக் கவிதையைக் காட்ட இயலுமா?

வேலைநிறுத்தம் / பகவத் கீதை / கார் / நழுவப் பார்த்த / கண்ணபிரான் / கல்லடி முதல் சில வரிகளிலேயே கோர்த்தாகிவிட்டது.

கோஷ சுவர் எழுத்துக்கள் உலகம் முழுக்கவும் வேலை நிறுத்தத்தின் தவிர்க்க முடியாத ஒரு அம்சம். அதைப் புராணத்தில் குழைக்கையில் //பசிவேத சுலோகங்கள்//

ஆளும் வர்க்க கண்ண பிரானுக்கு சொல்பேச்சு கேட்காத எதிர் கேள்வி கேட்கும் தொழிலாளிகள் //அர்ச்சுனன் கிளைத்து// ஆயிரக்கணக்கில் ஆகின்றனர்.

உலகம் முழுக்கவும் வேலை நிறுத்தங்களின் மற்றொரு ஒற்றுமை, ஏதோ ஒரு கட்டத்தில், கும்பலின் உணர்ச்சிக் குவிப்பு கை மீறி தலையெடுக்கும் வன்முறை. போகவும் தப்பப் பார்க்கிறவனை தப்பாமல் தப்ப (தப்பினால் நம்மையது தப்பாதோ - தனிப்பாடல் திரட்டு காளமேகம்? (கமான் கந்த வேல் ராஜன் கூகுளில் தேடிக் கொண்டுவந்து ஒட்டுமின்!) அல்லவா வெறி கொள்ளும் கும்பல். தொடக்கத்தில் வந்த //கல்லடி// மூன்றாவது பத்தியில் //உதிரத்தின் நாமக்கோடுகள்// ஆகிறது.

அது சரி புரிகிறது. அதற்கு ஏன் நடுவில் ஒரு பத்தியின் இடைவெளி? கல்லடி பட்டதும் ரத்தம் என்று எழுதியிருந்தால் சப்பை வைரமுத்து அல்லவா ஆகி இருப்பான். பிரமிள் எப்படி? ஏன்? பெருங்கவி ஆகிறான். 

காயம் பட்ட உடனேவா ரத்தம் வருகிறது? அடிபட்டு ரத்தம் பரவ கால அவகாசம் வேண்டாமா?அதைத்தானே நாம் சினிமா சிந்தனை என எல்லாவற்றிலும் டைம் லேப்ஸ் என்ற பெயரில் அழைக்கிறோம். தேர்ந்த எழுத்தாளன் பாத்திரத்தின் மன ஓட்டங்களை இரு சம்பவங்களுக்கான இடைப்பட்ட கால அவகாசத்தில்தான் எழுதுவான். யதார்த்தத்தில் தேவைப்படும் நம்பத்தகுந்த நேரத்திற்குள் எண்னங்களை எழுதிச் செல்வான். பாத்திரத்தின் எண்ண ஓட்டத்தை எழுதுகிறேன் பேர்வழி என பாத்திரத்தின் கையில் இருக்கும் சிகரெட்டை மறக்கலாமோ? சிகரெட் பிடிக்காத மடத்தில் ஆச்சாரமாக வளர்ந்த சிறுவனாக ஒரு எழுத்தாளன் இருந்தால் அவன் ஒரு சிகரெட்டின் நேரம் என்று என்னத்தைக் கண்டான். பற்ற வைக்காத சிகரெட் பர்மனெண்ட் என்கிற அளவிற்குதான் கலைபுத்தி இருக்கும்.

வணிக எழுத்தாளன்களிடம் கதையில் பாத்திரங்களுக்கு ‘மனமே’ இருக்காது. வெறும் சம்பவக் கோர்ப்பு மட்டுமே இருக்கும். அடுத்து என்ன அடுத்தடுத்து என்ன? எழுதப்படும் நினைவலை, மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆசிரியனின் எண்ணமாய் இருக்கும். அதுவும் அவன் படித்த பொஸ்தகங்களின் வாந்திக் கலவையாய் இருக்கும். குறைந்தபட்சம் அவனது சொந்த அவதானிப்பாய்கூட இருக்காது. அந்த பாத்திரத்தின் கலாச்சாரப் பின்னணியில் அது இப்படிப் பேசுமா என்று கூட மந்தை வாசகன் எண்ணிப் பார்க்க மாட்டான். அறிவுஜீவி ஆவதற்காக வேண்டி அவசர அவசரமாக, வரிக்கு வரி அடிக்கோடு போட ஆரம்பித்து விடுவான். 

பாத்திரத்திற்கென ஒரு மொழியும் இயல்பான பேச்சுமாக இருக்க வேண்டும். அந்தப் பேச்சு சுவாரஸியமாக இருக்கலாம். உயர்வாக இருக்கலாம். ஆனால் சுவாரஸியத்திகாக மட்டுமே பாத்திரம் பேசுவதும், அடிக்கோடு இட்டுக்கொள் என்பதற்காகவேப் உரையாடுவதும் ஒஸ்தியா? இதை அறியாத மூடமொக்கைகள். நீ சொல்றதுதான் இலக்கியமா நீ சொல்றவன் எல்லாம் பார்ப்பானாவே இருக்கானே பார்ப்பான் எழுதினது மட்டும்தான் இலக்கியமா?என எதையாவது கேட்கவேண்டும் என்பதற்காகவே கேள்வி கேட்கும். இதில் டாக்டர் மற்றும் டாக்டரேட் மூடர்களும் அடக்கம்.

ஒரே எழுத்தாளன் அல்லது கவிஞன் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பாத்திரங்களைப் படைக்கையில் அதுவாக அந்தத்தருணத்தில் ஆவதுதான் மர்லன் ப்ராண்டோ உயிர்த்துக்காட்டிய மெத்தட் ஆக்டிங். நடிப்பதற்காகப் பாத்திரமாக மாறிக்கொண்டு இருந்தது அவரது வாழ்வை பாதித்தது. பெரும்பாலான கலையிலக்கிய கோஷ்டிகள் ஏன் கொஞ்சம் கழண்டே இருக்கின்றன என்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். 

தி.ஜா பாத்திரத்தின் மன ஓட்டமும் சு.ராவின் மன ஓட்டமும் அ.மியின் மன ஓட்டமும் எப்படி வேறு படுகின்றன என்று எழுதிக்கொண்டே போகலாம். இல்லையேல் மனமிசைந்த ஓரிருவருடன் பேசலாம். இதைப்போய் மொட்டைமாடியில் வந்து பேசு என்கிறார் எனில் பத்ரி சேஷாத்ரி என் பகையாளியாகத்தானெ இருக்க வேண்டும்? எப்படி இவன் ஒளறிக் கொட்டிக் கெளறி மொழுகறான் எனப்பார்ப்போமே என்கிற நப்பாசைதானே! அங்கே கேள்வி கேட்கவென்றே நாலுபேர் வருவான். அ அப்பிடின்னா என்ன என்பதில் இருந்து ஆரம்பிப்பான். தேவையா மனுஷனுக்கு இதெல்லாம்.

நான் ஜெயமோகனைப் பார்த்து மைறாபொ என்று பொறாமைப் படுவதெல்லாம் அவருக்கு இருக்கும் இந்த அரங்கசாமி அண்ட் கோவைப் பார்துத்தான்.  விவேகாநந்தர் குறிப்பிட்ட ஆட்களில் ஒரு சிலரையேனும் அவர் திரட்டி இருக்கிறார் என்றே தோன்றுகிறது. என்னதான் கிண்டலடித்தாலும்,ஒரே மனவரிசையுடன், ஒத்திசைந்தவர்களோடு உலாவருதுதான் எவ்வளவு பெரிய கொடுப்பினை.

எனக்கு நண்பர்கள் என்று வாய்த்திருப்பது ஒவ்வொன்றையும் பாருங்கள் நான் டா வென்றால் அது டோ வென்னும். எதைப் பேசத் தொடங்கினாலும் கவிராஜன் காண்டு தாங்காது. நான் இந்தத் தெருமுனையில் இருந்தால் அவர் அடுத்த தெருவின் அந்தக் கோடியில் நின்றுகொண்டு வேறு பாஷையில் பேசிக்கொண்டிருப்பார். யுவகிருஷ்ணாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் ‘சீமான் என்ன பெரிய சாமானா?’ என்கிற ஷோபா சக்தியின் வேத வாக்கியத்தை இன்னமும் சாக்ரடீஸ்கூடத் தாண்டவில்லை என்பதுதான் அவரது அசைக்கவொண்ணா கருத்து. அதிஷா கொஞ்சம் பரவாயில்லை போலத் தோற்றமளிக்கக்கூடிய ஆள் ஆனால் சமயத்தில் அதுவும் படுத்தும். சென்ஷி ரொம்பக் குழையும் ஜெமோவைத் தொடாதவரையில். அந்த டாப்பிக் வந்ததும் முறுக்கிக்கொள்ளும். நேசமித்ரனுக்குக் கோணங்கி சென்ஸிடிவ் மேட்டர்.

இவர்களோடு நான் படும் பாடு தறி படுமா?

இதற்குக்காரணம் அநேகமாக நான்தான் என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் நான் கிண்டி கிழங்கெடுப்பதால் இவனையும் கிண்டலாம் என உரிமையெடுத்துக் கொள்கிறார்கள் போலும். உலகத்தின் அத்துனை பெரியவர்களும் சொன்ன ஒரு எளிய விஷயத்தை இவர்கள் ஏன் இங்கே மறந்து விட்டார்கள். சூரியனுக்குக் கீழே அனைத்தையும் கேள்விகேள் - என்னைத் தவிர.

இதைப் பெரியார் ஒரு ஜென் கவிதை போல சொல்லி இருக்கிறார்.

என்னிடம் வருபவன் சிந்திக்கக் கூடாது. ஆனால் என்னிடம் வருவதா இல்லையா என்பதை நன்றாக சிந்தித்துவிட்டு வா.

காரியமாற்ற, சிந்தனை ஒரு தடைகேடு! ஆனால் கேள்வி கேட்டால் தான் இலக்கியம். கேட்காவிட்டால் ஐக்கியம்.

பெரியார் சொன்னதன் முற்பாதியான <என்னிடம் வருபவன் சிந்திக்கக் கூடாது.> என்பதை ஏதோ பகவத் கீதை அருளிய கண்ண பிரானைப்போல் கடைபிடிக்கும் ஜெயமோகன் என்கிற பெரியாரிஸ்டைப் போய் ஹிந்துத்துவவாதி ஆர்எஸ்எஸ்காரர் என்பது எவ்வளவு பெரிய அநீதி.

ஜெயமோகக் கண்ன பிரான் ஒரு புறம் சொஸ்தமாய் இருக்கட்டும். பிரமிளின் கண்ண பிரான் வாங்கிய அடியில் //விஸ்வரூபத்துக்கும் முயற்சிக்க வலுவில்லை// இதில் இன்னொரு விசேஷம். இந்த விஸ்வரூபம் வரைக்கும் உயர்நடைத் தமிழில் போகும் கவிதை விஸ்வரூபத்திற்கும் என்றல்லவா இருக்க வேண்டும். பின்னால் வரப்போகும் நையாண்டியின் அழுத்தத்திற்காகப் பேச்சு வழக்கிற்கு மாறுகிறார் பிரமிள். இது ஒன்றும் அரிய கண்டுபிடிப்பில்லைதான். சரஸ்வதி மூச்சா ஆய் போகக்கூட அகலாமல் எழுத்தாளன் நாவில் குந்திக்கொண்டு இருப்பதாகக் கூமுட்டைகள் சாமி சரணம் போடுகின்றனவே அது அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையாக்கும் என ருசுப்பிக்கவே இதைச் சொல்ல வேண்டி வந்தது. 

கவிதை முடிகிற நக்கல் வரிதான் ஆதாரப் பொறியாக இருந்திருக்கலாம், அல்லது எழுதி வந்த போக்கில் தோன்றி இருக்கலாம். ஒரு முறுக்கலில் கிடைத்த பரவசத்தில் கிண்டல் முற்ற, முன்னால் போய் முரண் வேண்டி, உரைநடை வரிகளாய் நிரவி இருக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம், கண்டிப்பாக இது ஆசு கவி மேட்டர் இல்லை. 

ஒரே மூச்சில் பாடியதைப் போன்ற தோற்றம் தரும் திரை இசையில் பஞ்ச் எனப்படும் வெட்டி வெட்டிப் பாடியதன் வெல்டிங் தெரியாவண்ணம் மொழுகிக்கலப்பது என்பது கணினிமயத்தால் சிலபல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அது எழுத்தாளன் கவிஞனிடம் என்றும் இருப்பதுதான். ஆளுக்கு ஆள் கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். 

எஸ்ஐஇடி கல்லூரிக்கும் எல்லார் ஸ்வாமி பில்டிங்கிற்கும் இடைப்பட்டக் கட்டிடத் திட்டில் உள்ளொடுங்கி இருக்கும் ஆனந்தா ஆஃபீஸ் செண்டர் அலுவலகத்தில் நான் செல் தபால் ஓம்பி வரு தபால் காத்திருந்த கடைநிலை குமாஸ்தாவாக இருந்த நாட்களில் அடிக்கடி என் அலுவலகம் வந்து கொண்டிருப்பார் பிரமிள்.ஒரு நாள் ’கடல் நடுவே ஒரு களம்’ கவிதையின் கைப்பிரதியைக் கொடுத்தார் பிரமிள். எனக்குப் படிக்கக் கொடுத்த கவிதையின் வடிவத்தில், அப்போது துளசிதாஸ் பாடல் இல்லை. என்னிடம் இருந்த கையெழுத்துப் பிரதியிலிருந்து என் கையெழுத்தில் தருமு எதிரிலேயே படி எடுத்துக் கொண்டேன். அதை வைத்துக் கொண்டே அன்றோ மறுதினமோ திருவல்லிக்கேணியில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்தக் கவிதையைப் படித்தேன். 

கடல்களைத் தாண்டிக் கேட்கிறது
வீறிட்ட சிசுக்குரல்

பாருங்க கவிதையை எடுக்கும் போதே எப்படி எடுக்கறான். தனுவுண்டு காண்டீபம் அதன் பேர் அப்படிங்கறாப்புல இல்லை எடுக்கறான் என்றேன்.

பிரமிள் ஒருசில நாட்களுக்குள் துளசிதாஸ் மேற்கோளை சேர்த்தார். 

ஓய் இப்பப் படியும். அப்போதைக்கும் இப்போதைக்கும் எப்படி? எனக்கேட்டார். 

துளசிதாஸ் சேர்த்தபின் இன்னொரு பரிமாணம் கிடைக்கிறது என்றேன். 

இந்த உடான்ஸ்ஸுல்லாம் கூடாது என்ன பரிமானம் கெடைக்குது? என்றார். 

கவிதையில் இல்லாத சயனைட் குப்பி துளசிதாசர் பாடலால் கிடைக்கிறது என்றேன். துளசிதாஸரிடம் நேரடியாக அது இல்லை ஆனால் //மரணிக்க வைப்பதால் விஷத்திற்கு வாழ்த்து// என்கிற வரியில் கிடைக்கிறது என்றேன். 

அவரது அமேடியஸ் ஸ்டைல் கிறுக்குச் சிரிப்பில் உரக்கச் சிரித்து அதுக்காகத்தான் அதைப் போட்டேன் என்றார் பிரமிள்.

உலகத்தையே துச்சமென எண்ணிப் போங்கடா பொக்கே! என வாழ்ந்தவன், புரிகிறதா, தான் நினைத்த தாக்கம் சென்று சேர்கிறதா என்பதில் எவ்வளவு கருத்தாய் இருந்திருக்கிறான்.

விஸ்வரூபத்துக்கு வலுவற்ற கண்ண பிரான் //இருந்த கால்களில் எழும்ப முயன்றான்// இந்தப் பகடி, //கீதையைக் கேட்க அர்ச்சுனன் இல்லையென்றால் கூப்பிடு கெளரவரை என்றான்//  என்று முடிக்கிற இடத்தில் முத்தாய்ப்பாக //பறந்தது ஃபோன் செய்தி போலீசுக்கு// என்றாகிறது.

ஆனால் கவிதை இங்கே முடியவில்லை. இப்போது இதை, 

//பறந்தது ஃபோன் செய்தி போலீசுக்கு// 

என்பதை முதல் வரியாய்க் கொண்டு தொடக்கத்திலிருந்து படியுங்கள். சுற்றத் தொடங்குகிறதா? முடிவற்ற லூப் சுற்றல். வாழ்வில் போராட்டம் ஒரு தொடர் நிகழ்வு தானே! இந்த கருத்து, எதிர் கம்யூனிஸ்ட்டான பிரமிளிடம் நுட்பமாக இருக்கிறது என்று சொன்னால், ஹோல்சேல் புரட்சி & கோக்களால் ஜீரணிக்க முடியுமா?

இதே உத்தியை சுஜாதா ஒரு கதையில் உபயோகித்து இருப்பார். குமுதத்தில் படித்த நினைவு. அது ஒரு அதிர்ச்சி கதை என்று ஞாபகம். அதில் அது வெற்று உத்தியாக மட்டுமே நின்றிருக்கும். கதை சுற்றிக்கொண்டே இருக்கும். சுஜாதாவிற்கு வேண்டியது சளைக்காத புதிய சுவாரசியம்.

ஒன்று கலையாக எழுவதும் மற்றது கைத்திறனாக எஞ்சுவதும் இங்குதான். 

கதையோ கவிதையோ, சுவாரசியமாகவும் இருந்து சிரமமற்றும் புரிகிறது என்பதையே ஒரு தகுதியாய் வைத்து அது ஏன் கலையாகவில்லை என முரண்டு பிடிப்பது, பரிசீலனைக்கு உட்படுத்தப் படாத மூட நம்பிக்கையன்றி வேறென்ன?

நன்றி: அடையாளம்