வயலின் நெல் சாயங்கால சூரியனின் நெருப்பு வண்ணத்தில் பழுத்துக்கிடந்தது. அப்பா யோசனையாய் நடு வயலில் இறங்கிப்பார்த்தவர், என்ன சொல்ற அறுப்பு விட்டுடலாமா, எலி வெட்ட ஆரம்பிச்சிடுச்சு என்றார். அம்மா வரப்பின் பில்லை அறுத்துக்கொண்டிருந்தவள், இன்னும் 8 நாளிருக்கே, ஆனாலும் கதிர் கனம் தாங்காம தலை சாஞ்சிக்கெடக்கு அறுப்பு நாளைக்கே விட்டுடலாம். களத்துக்கு மட்டும் தலயாரிக்கு சொல்லிடு என்றாள்.
காவேரியின் கிளையாறான வீரசோழனின் பாய்ச்சல் கரையில் நிலம் கிடந்தாலும் , ஆத்துப்பாசனத்தில் அறுவடை செய்ததெல்லாம் முப்பாட்டன் காலத்திலேயே முடிந்து போன பின் ஆழ்துளை கிணற்றின் அடி ஈரத்தின் உறிதலில் தான் நிலம் ஈரம் பார்த்துக்கிடந்தது. பெரும் நிலப்பண்ணையின் ஓரமாய் கிழிந்த தாளின் ஒட்டாய்க் கிடந்த நாலங்குல சொந்த நிலம். பண்ணையில் நீர்ப்பாய்ச்சின நாள் போக பத்து மணிக்கரண்ட் இருக்கிற ஒவ்வொரு நாளில் கெஞ்சிக்கூத்தாடி விவசாயம் பண்ணுகிற நிலம்.
இதுவே நான் படிக்கும் இவரது முதல் கதை.
//வயலின் நெல் சாயங்கால சூரியனின் நெருப்பு வண்ணத்தில் பழுத்துக்கிடந்தது.//
காவேரியின் கிளையாறான வீரசோழனின் பாய்ச்சல் கரையில் நிலம் கிடந்தாலும் , ஆத்துப்பாசனத்தில் அறுவடை செய்ததெல்லாம் முப்பாட்டன் காலத்திலேயே முடிந்து போன பின் ஆழ்துளை கிணற்றின் அடி ஈரத்தின் உறிதலில் தான் நிலம் ஈரம் பார்த்துக்கிடந்தது. பெரும் நிலப்பண்ணையின் ஓரமாய் கிழிந்த தாளின் ஒட்டாய்க் கிடந்த நாலங்குல சொந்த நிலம். பண்ணையில் நீர்ப்பாய்ச்சின நாள் போக பத்து மணிக்கரண்ட் இருக்கிற ஒவ்வொரு நாளில் கெஞ்சிக்கூத்தாடி விவசாயம் பண்ணுகிற நிலம்.
இந்த எரநூறு குழி நெலத்தை வச்சு என்னத்துக்குடா மாரடிக்கிறே என்கிட்டேயே கொடுத்திடு நான் களமாக்கிக்கிறேன்னு அடிக்கடி முதலாளி கேட்டாலும் அப்பாவுக்கு அது சொந்த நிலம் , தம் உடம்போட ஒரு பாகம் மாதிரி. கனவுல கூட வயல்ல ஏதாவது வேலைதான் செஞ்சிட்டு இருப்பாரோன்னு இருக்கும் எனக்கு.
பத்து வயதில் தத்தாய் கொடுக்கப்பட்டவர், திருவாரூரின் கடைக்கோடி கிராமத்தில் இருந்து பிரஞ்சின் ஆளுகைக்கு உட்பட்டுருந்த திருநள்ளாற்றுக்கு அழைத்து செல்லப்பட்டவர். போட்ட சோத்துக்கு பொதி மாடா சொந்தக்காரங்க ஆக்கினாலும் உழைப்புக்கு அஞ்சாமல் மம்முட்டியும் அருவாளுமாய் அலைந்து திரிந்து வேலை செய்தவர். பசி நேரத்துக்கு சோறு கிடைக்காது, பசிக்குதுன்னு கேக்க முடியாது எல்லாத்தையும் வேலைல மறக்கனும் , ஒத்தையாய் வயல்ல அண்டைப்போடனும் , நாத்துப்பறிக்கனும் காலையில குனிஞ்சா சாயந்திரம் வரைக்கும் கரையேற முடியாது. வயக்காரனும் காரியக்காரனும் கண்கொத்திப் பாம்பா கரையிலேயே நிப்பானுங்க.
அதெல்லாம் அந்தக்காலம் இப்போல்லாம் எவன் நேரத்துக்கு வாங்குற கூலிக்கு வேலை செய்றான் என்பார் அடிக்கடி.
வயலின் எலி வெட்டிய பகுதிகளை பார்த்த படி கரையேறி வந்தவர் அறப்புக்கு சொல்லிடலாம் என்றார் .
வயலின் பொன்னி நெல் கொஞ்சம் வீட்டுக்கும் மற்றது வாங்கின வட்டிக்கும் கடனுக்குமாய் போக சரியாயிருக்கும் எப்போதும். அரப்புக்கு ஆட்கள் சொல்ல போனார் அப்பா. சிறிது நேரத்தில் பரபரப்பாய் திரும்பி வந்தார். அறப்புக்கு யாரும் வர மாட்டாங்களாம், பண்ணை நெலத்துல கூலி கூட்டித்தரலைன்னு சொல்லிட்டதால சங்கத்தில முடிவெடுத்திட்டாங்களாம் என்றார்.
அம்மாதான் சொன்னாள், நாமளே அறுத்திடலாம் , சின்ன சின்னக் கட்டாய் கட்டி களத்தில அடிச்சிக்கலாம் என்றாள்.
இரண்டாம் நாளின் வெளுப்புக்கு முன் அம்மாவும் அப்பாவும் அறப்பறுவாலால் அறுக்கத்துவங்க , நானும் என் தங்கச்சியும் பிள்ளறுவாலால் கைக்குப் பிடித்ததை அறுப்பதாய் பேர் பண்ணிக்கொண்டிருந்தோம்.
பத்து மணிக்கெல்லாம் தெரு ஆட்கள் கரை மேலிருந்து பாத்தபடி குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தார்கள். ரெண்டு நாளிலும் அப்படியே நடந்துக்கொண்டிருந்தார்கள். புருசனும் பொண்டாட்டியுமா அறுத்திட்டீங்க என்றபடி தலையாரியும் போனார். கட்டாய் கட்டி களத்தில் கொண்டு சேர்த்த மூணாவது நாள் , நெல்லடிக்க மாட்டுக்கு சொல்லப்போனார் அப்பா.
நெல் கட்டையெல்லாம் பிரித்து அம்மாவும் நானும் பரப்பிக்கொண்டிருந்தோம். தெரு முனையில் கூட்டமாய் ஆட்கள் வருவது தெரிந்தது. வந்தவர்கள் சங்கத்தில அறுக்கவே கூடாதுன்னு ஊர்க்கட்டு போட்டிருக்கோம் அதை மீறி ஏன் அறுத்தீங்க என்று காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் இருந்து பார்த்த அப்பாவும் ஓடி வந்தார். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு அவரை அடிக்க பாய்ந்தார்கள்.
எப்போது யார் கொளுத்தினா என்றே தெரியாமல் கொழுந்து விட்டு எரியத்துவங்கியது நெல்கட்டுகளும் , களத்தில் பரப்பிக்கிடந்தவைகளும். காய்ந்த நெல்லுக்கும் அதுக்கும் அரை மணி நேரத்தில் ஏகத்துக்குமாய் எரிந்து போனது. களத்தில் கிடந்த மரப்பரையும் , மம்முட்டியின் காம்பும் கருக்கிடந்தன. ஆங்காரமாய் தரையில் அழுதுக்கிடந்த அம்மா மண்ணை வாரி தூத்தியபடி அப்பாவை நோக்கி ஓடினாள்.
எதுவும் சொல்லாமல் அடிப்பட்ட முகத்தை , துண்டால் துடைத்தபடி புள்ளைங்கள வீட்டுக்குக்கூப்பிட்டு போ நான் வரேன் என்றார். அம்மாவோ பிடிவாதமா அவரைப்பிடித்து இழுத்த படி வீட்டுக்குக்கூட்டி வந்தாள்.
எதுவும் சொல்லாமல் அப்படியே வீட்டு சுவத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். எந்த பேச்சும் இல்லாமல் எதுவும் சொல்லாமல் இருந்தவரை அம்மாதான் யே என்ன போச்சுன்னு இப்படி உக்கார்ந்திருக்கே, கையில இருக்கிற சாமானை அடகு வச்சு வட்டியைக்கட்டிடலாம். சாப்பாட்டுக்கு ஒரு மாசம் வெளில அரப்புக்குப் போ நானும் நெல் பொறுக்க போறேன். ரெண்டு புள்ளையும் வெக்கிச்சுப்போய் நிக்குது நான் சோறாக்குறேன் நீ கடையில அரிசி வாங்கிட்டு வா என்றாள்.
அரிசியை வாங்கிக்கொடுத்து விட்டு அப்பா சொன்னார், உழைப்போட ருசி என்னன்னு தெரிஞ்சவன் எவனாச்சும் சாப்பாட்ல நெருப்பு வெப்பானாடி, நம்ம வேர்வைல வெளஞ்ச நெல்லு அரிசியாகி எத்தன பேரு பசியைப்போக்கும் எத்தன பேரு பஞ்சத்த தீர்க்கும். ஒன்னுத்துக்குமில்லாம நெருப்புக்கு தின்னக்கொடுத்திட்டாங்களேன்னு முகத்திலடிச்சபடி வீட்டு வாசல விழுந்து அழுதார்.
அதுக்கு அப்பறம் எங்க அப்பா எதுக்குமே அழுது நான் பார்த்ததில்லை . நெலத்தை வித்து பத்து வருசத்துக்கு மேல ஆகுது.
இதுவே நான் படிக்கும் இவரது முதல் கதை.
//வயலின் நெல் சாயங்கால சூரியனின் நெருப்பு வண்ணத்தில் பழுத்துக்கிடந்தது.//
கதையின் முதல் வரி.
//அதுக்கு அப்பறம் எங்க அப்பா எதுக்குமே அழுது நான் பார்த்ததில்லை . நெலத்தை வித்து பத்து வருசத்துக்கு மேல ஆகுது.//
கதையின் கடைசி வரி.
இணைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அறுப்புக்குத் தயாராக இருப்பதில் ஆரம்பிக்கும் கதை. அறுந்து விழுந்தவன் அதற்கும் கீழே போக வழியற்று, தன்னைக் கட்டி எழுந்து நிற்பதில் முடிகிறது.
இரண்டாவது பாராவிலேயே, விவசாயியின் சொத்தாக இருக்கிற சொற்ப நிலம், அதனுடனான பிணைப்பு கட்டப்பட்டு விட்டது. அந்தப் பத்தி முடியும் வரி
//கனவுல கூட வயல்ல ஏதாவது வேலைதான் செஞ்சிட்டு இருப்பாரோன்னு இருக்கும் எனக்கு.//
இதைவிட கதை நாயகனின் வாழ்வைப் பின்னோக்கிப் பார்க்க ஏற்ற வரியும் இடமும் எதுவாக இருக்க முடியும். எவ்வளவு இயல்பான ஃப்ளாஷ் பாக். ஒரு ஃபேட் அவுட்டில் சுலபமான கரைவு.
கதை நாயகனின் சிறுவயது கஷ்டங்கள் கண்ணீரை வரவழைக்கிற நோக்கத்தில் எழுத்தப்படுவதற்கு மாறாக, உரம் ஏறி அவன் எப்படி உழைப்பாளி ஆகிறான் என்பதில்தான் கருத்தாய் இருக்கிறது கதை. எழுத்தாளனுக்கான சுலபமான் சறுக்குப் பாறை. அநாயாசமாகக் கடந்து முன்னேருகிறது கதை. எவ்வளவு இயல்பாக ஒற்றை வரியில் நிகழ்காலத்தில் வந்து இணைகிறது பாருங்கள்.
//அதெல்லாம் அந்தக்காலம் இப்போல்லாம் எவன் நேரத்துக்கு வாங்குற கூலிக்கு வேலை செய்றான் என்பார் அடிக்கடி.//
//வயலின் எலி வெட்டிய பகுதிகளை பார்த்த படி கரையேறி வந்தவர் அறப்புக்கு சொல்லிடலாம் என்றார் .//
எங்கெல்லாமோ போய் காலம் கடந்து சுற்றி விட்டு வந்தாலும் கதை சொல்லும் சுகத்தில் தொடக்க முடிச்சு அறுகவில்லை. பர்ஃபெக்ட்.
ஒரு சின்ன திருப்பம். பண்ணை நிலத்தில் கூலிப் போராட்டம் நடப்பதால் ஆட்கள் அறுப்புக்கு வரப்போவதில்லை. சங்கக் கட்டுப்பாடு. சின்னஞ்சிறு விவசாயியின் அடுத்த இயல்பான முடிவு சொந்தமாக அறுத்துக் கொள்வது தவிர வேறு என்னவாக இருக்க முடியும். முற்றிய கதிரை அறுக்கவில்லை என்றால், பட்ட கஷ்டம் அவ்வளவும் பாழ். குழந்தை குட்டிகளோடு குடும்பமே சொந்த நிலத்தில் அறுவடையில் ஈடுபடுகிறது.
பின்னால் வரப்போகும் மோதலுக்கான முஸ்தீபு தொடங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஓரிரு பொறிகள் கோபமாய் கனலத் தொடங்குகின்றன, சத்தமே இல்லாமல்.
நெற்கட்டுகள் பரப்பட்டுக் கொண்டிருக்கையில் ஊர்க் கட்டுமீறலாய்ப் பார்க்கப்பட்டுக் கும்பல் வர கத்தல் கைகலப்பாதல் குழப்பம் அடிபடல் என அனைத்தும் துல்லியப்படாமல் எழுதப்பட்டிருப்பதே கும்பலைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. பிரமாதம்.
எந்த நேரத்தில் என்ன நடந்ததென்றே தெரியாமல் நெல் எரியத்தொடங்குகிறது.
எரிந்தடங்கியதன் அவலத்திற்கு இரண்டே ஷாட்கள்
//களத்தில் கிடந்த மரப்பரையும் , மம்முட்டியின் காம்பும் கருக்கிடந்தன.//
//களத்தில் கிடந்த மரப்பரையும் , மம்முட்டியின் காம்பும் கருக்கிடந்தன.//
//ஆங்காரமாய் தரையில் அழுதுக்கிடந்த அம்மா மண்ணை வாரி தூத்தியபடி அப்பாவை நோக்கி ஓடினாள்.//
அடிபட்ட அவமானத்தைத் துடைத்துக் கொண்டவனை இழுத்து வந்த அம்மா, நிகழ்வுகளில் இடிந்து உட்கார்ந்திருப்பவனை தேற்றுகிற விதமாய் வழி சொல்லி அனுப்புகிறாள். அழுது அரற்றி ஆவேசப்பட்ட அந்த கனம் கடந்ததும் தன்னைக் கட்டியெழுப்பிக் கொள்கிற பாங்கு குறிப்பாகப் பெண்களுக்கு மிக இயல்பானது. அதிலும் கணவன் குலைவதை ஒருபோதும் பார்க்க சகியாத மனைவிமார்.
அந்த க்ஷணத்தில் அடக்கப்பட்ட துக்கம் அடுத்து ஏதோ ஒரு தருணத்தில் பீறிடும். இயல்பான பேச்சோடு ஆற்றாமையின் அழுகையோடு செய்தியும் சொல்லப் படுகிறது.
//நெலத்தை வித்து பத்து வருசத்துக்கு மேல ஆகுது.//
சும்மா ஒரு தகவல் போல சொல்லப்பட்டிருக்கும் இந்த வரிதான் இதை நல்ல கதையாக்குகிறது. இந்த இடத்தில் கதை முடிந்து விடுகிறது. ஆனால் இதற்குப் பிறகுதான் அவலம் விரியத் தொடங்குகிறது வாசக மனத்தில்.
ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு மைக் பிடிக்க பல சந்தர்பங்களை வாகாக இடளிக்கும் கதை. அநேகமாக ஒதுக்கிவிட்டு அருகாமை உணர்வுடன் கதை பகிரப்படுகிறது.
மொழி பின்னால் இருக்கக் கதையனுபவம் முன்னால் திரள்வது முதிர்ச்சியின் அடையாளம்.
மொழி பின்னால் இருக்கக் கதையனுபவம் முன்னால் திரள்வது முதிர்ச்சியின் அடையாளம்.
”இலக்கிய வித்தைகளை யார் கற்றுத்தர இயலும்? அதன் நயங்கள் சொல்லப்படுகையில் பாழ்பட்டுப்போகின்றன. பின்பற்றப்படுகையில் காலைவாரி விடுகின்றன. தன்னுடைய சுனையைத் தானே தேடும் முயற்சி அது.” ஜி.நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி
நெருடல்கள்
தலைப்பு.
கையை விரித்து வைத்து மாயாஜாலம் காட்டுவது கஷ்டம். விரித்தது போல் காட்ட வேண்டும் ஆனால் காட்டிவிடக் கூடாது. சோறு என்கிற சாதாரண வார்த்தை கதை பற்றிய யூகத்தைக் குறைத்திருக்கும். கவர்ச்சித் தலைப்புகள் வாசக மனத்தை, எதிரிலிருக்கும் கதையைப் படித்தபடி இன்னொரு கதையை எழுதிக் கொண்டிருக்க வைத்துவிடும்.
//ஓரமாய் கிழிந்த தாளின் ஒட்டாய்க் கிடந்த//
பொருள் புரியவில்லை.
பொருள் புரியவில்லை.
//நெல் கட்டையெல்லாம் பிரித்து அம்மாவும் நானும் பரப்பிக்கொண்டிருந்தோம்.//
குவிக்கப் பட்டு அடுக்கப்பட்ட நெற்கட்டுகள் அந்தக் காட்சியின் ஆரம்பத்திலேயேக் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.
//எப்போது யார் கொளுத்தினா என்றே தெரியாமல் கொழுந்து விட்டு எரியத்துவங்கியது நெல்கட்டுகளும் , களத்தில் பரப்பிக்கிடந்தவைகளும்.//
பின்னால் வரும் இந்த வரிகளில் என்னதான் சரிசெய்யப்பட்டலும் அடுக்கப்பட்ட நெற்கட்டுகள் கொஞ்சம் போல பிரித்து பரப்பப்பட்டுக் கொண்டிருந்தால் ’கொளுத்துவது’ என்கிற காட்சி ரூபப்படல் இன்னும் நிஜத்திற்கு நெருக்கமாய் இருந்திருக்கும். அப்படி வருகையில்தான் கொளுத்தப்பட்டு எரிதலின் நம்பகத்தன்மையும் மனக்காட்சியும் துல்லியப்படும். இப்பொது இருக்கும் வடிவத்தில் பின் வரும் வரியின் நெல்கட்டுகளும் , களத்தில் பரப்பிக்கிடந்தவைகளும். என்கிற வார்த்தைகள், தவற விட்டதைப் பிடிக்க விரைகிற எத்தனமாகவே இருக்கின்றன.
//எப்போது யார் கொளுத்தினா என்றே தெரியாமல் கொழுந்து விட்டு எரியத்துவங்கியது நெல்கட்டுகளும் , களத்தில் பரப்பிக்கிடந்தவைகளும்.//
தமிழ்ச் சூழலில், ஒருமை பன்மை மயக்கம் ப்ளேக் வியாதியாகிக்கொண்டு இருக்கிறது.
எந்த ஒரு படைப்பையும், எப்படி இட்டுக் கட்டித் திட்ட முடியாதோ அதே போல வலிந்து பாராட்டவும் முடியாது. உள்ளம் தோயவில்லை எனில் இரண்டுமே பல்லிளித்து விடும். இளிப்பின் பின்னிருக்கும் ஊத்தை ஊரைக் கூட்டிவிடும்.
கதை என்று லேபிள் போட்டால்தான் கதையா? இல்லை அப்படிப் போட்டுக் கொள்வதெல்லாம் கதையா?