08 February 2011

ராமன் இழந்த சூர்ப்பநகை - பிரமிள்

 பிரமிள்


ராமன் இழந்த சூர்ப்பநகை

இருளின் நிற(முகக்) கதுப்பில்
தணல்கள் சிரித்தன.
அவள் ராக்ஷஸப் பாறைகள்
பாகாய் உருகின.

     உருகியென்?
     அவனோ கடவுள்.

ஆடையின் இரவினுள்
உதயத்தை நாடும்
பருவ இருள்.
நடையோ
ரடிய்வ்வோ
ரடியில்
தசையின்
ஜ்வாலை நடுக்கம்.

     நடுங்கியென்?
     அவனோ, பாவம்,
     கடவுள்.

தழுவ விரியும்
தொடைகள் திரண்டு
பிரிந்து பிரிந்து
இடையே ஓர்
தலைகீழ்க் கருஞ்சுடர்
எரிந்து எரிந்தழைக்கும்.

அழைத்தென்?
அவனோ, த்சொ!
கடவுள்.
*
(1973)


நன்றி: அடையாளம்