அசோகமித்திரன் இந்தப் புத்தகத்தை, ஆதிமூலத்திற்கு அன்போடு அளித்திருக்கிறார். பத்து வருடம் கழித்து, எழுதப் பரபரத்துக் கொண்டிருந்த, பக்கத்துவீட்டுப் பையனான எனக்கு, ஆதிமூலம் இதைப் படிக்கக் கொடுத்தார். அதை நான் எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க முடியும்?அந்த இன்னொருவர் ஆதியே ஆனாலும் கொடுத்துவிட முடியுமா என்ன? எதற்கும் இந்த விஷயத்தை ஆதிமூலத்தின் மகன்களான அபி, ராஜு இருவர் காதிலும் விழ வாய்ப்பிருக்கும் இடங்களில் பேசிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக ராஜு. அப்பாவோட புக்கு வெச்சிருக்கீங்களாமே நச்சு என்று தேடிவந்து கேட்டாலும் கேட்டுவிடுவான்.
இது போலத்தான் 1985-86ஆக இருக்க வேண்டும், தேனாம்பேட்டை அலுவலகத்திற்கு ஒரு ஃபோன்.
நச்சு நான் ஆதிமூலம் பேசறேன்.
ஐ... சொல்லுங்க.
ஒரு பாரதியார் ட்ராயிங்கோட நெகட்டிவ் உங்கிட்ட இருக்கு இல்ல....
அ..ஆமான்னு... நெனக்கிறேன்....
அது வேணுமே. லைன் ட்ராயிங்க்ஸ் புக்கா வருது.
சரி நாளைக்குக் கொண்டாந்துடறேன்.
நாளைக்கு ராஜுவை அனுப்பறேன்.
சரி
ஞானக்கூத்தன் ஆர்.ராஜகோபால் ஆனந்தும் இருந்த நினைவு. எல்லோரும் வந்து ஒரு பாரதியின் கோட்டுருவத்திற்கான சிறு படம் கொடுக்க, அதை மாதிரியாக வைத்து அவர்களுக்காக ஆதிமூலம் வரைந்து கொடுத்த பிரமாதமான பாரதியின் கோட்டுருவம்.அந்த படத்தின் நெகடிவை, அவர்களே வந்து கொடுப்பதாய்க் கூற, நான் அவசரமாய் இடைபுகுந்து, திருவல்லிக்கேணியில் போய் நான் வாங்கி வருகிறேனே என முன் வந்ததால் அது என் கைக்கு வந்தது. அதற்குப்பின் அந்த நெகட்டிவை வாங்கினாயா என ஆதிமூலம் அவர்கள் கேட்கவும் இல்லை, நான் வாங்கி வந்ததைச் சொல்லவும் இல்லை. இதற்கிடையில் நிறையமுறை அவர் வேலை பார்த்த வீவர்ஸ் சர்வீஸ் செண்ட்டர் சென்றிருக்கிறேன்.
தமது ஓவியங்களைப் புத்தகமாய்த் தொகுக்கும் போது நினைவு வந்திருக்கிறது. கலைஞர்கள் என்றாலே நினைவு மறதிக்காரர்கள் என்பது எவ்வளவு பெரிய பொய். குறிப்பாக தாடி வளர்க்காத நவீன ஓவியர்களை நம்பவே கூடாது போலும்.
நான் பொக்கிஷமாய் வைத்திருந்த அந்த நெகடிவை, மறுநாள் ராஜு வந்து வாங்கிக்கொண்டு போய்விட்டான். அதாவது பரவாயில்லை, அது அவரது ஓவியம், போனால் போகட்டும் என்று கொடுத்ததில் தவறில்லை. இது புத்தகம். அதுவும் அசோகமித்திரன் கொடுத்த புத்தகம். ஆதிமூலத்திற்கு அன்புடன் என்று எழுதிக் கொடுத்த புத்தகம். இருவரையுமே மனதார நேசிக்கும் என்னைவிடவும் இதை வைத்துக்கொள்ள தகுதியானவர் எவரேனும் உண்டா? நமக்கென்று தனியாக ஒரு நியாயம் இல்லையா என்ன?
அபராஜிதன் என்கிற ராஜு அப்போது நான்கோ ஐந்தோ படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. அப்போதே பிரஷ்களை உபயோகித்துதான் வரைபவன். அதுவும் அப்பாவின் பிரஷ்கள். வரைந்தது போதும் என்று தோன்றியதும், அப்படியே எழுந்து போய்விடுவான். தூரிகைகளை சுத்தப்படுத்தி வைக்கும் அவனது உதவியாளரின் பெயர் ஆதிமூலம்.
எனது நெருங்கிய நண்பர்கள் சமயவேல், ஷங்கர் ராமன் போன்றவர்கள் இந்தப் புத்தகத்தில்தான் அசோகமித்திரன் சிறுகதைகளைப் படித்தார்கள் என்பது குறிப்பிடத் தகுந்த விஷயம். இது ஒன்று போதாதா, நான் ஒன்றும் சுயநலவாதியில்லை என்று பல்லாவரம் மலையின் மேல் நின்று கூவ.
1956ல் எழுதத் தொடங்கிய அசோகமித்திரனுக்கு, முதல் சிறுகதைத் தொகுதி வெளியாக, கிட்டத்தட்ட 15 வருடங்கள் வேண்டியிருந்தது. அதுவும் எந்தப் பதிப்பகமும் வெளியிடவில்லை. ஒரு அறக்கட்டளையின் உதவியினால் வெளியிடப்பட்டது.
26 சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பிற்கு ஞானக்கூத்தன் எழுதிய முன்னுரை.
அசோகமித்திரன் அவர்களுக்கு ஜேடி-ஜெர்ரி விருது வழங்கி பாராட்டிய கூட்டத்தில் இரண்டு விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. ஒன்று ஓவியர் ஆர்.பி.பாஸ்கரன் அவர்கள் பேச்சில் சிறுபத்திரிகைகளும் அவை சார்ந்த எழுத்தாளர்களும் நவீன ஓவியங்களைத் தங்கள் பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டனர் என்று சிலாகித்துப் பேசினார். ஒரு காலகட்டத்தில் இவர் பூனை மட்டுமே வரைந்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொன்று, பிரபஞ்சன் பேசுகையில் அசோகமித்திரனின் ரிக்ஷா என்கிற கதையை விஸ்தாரமாகக் கூறினார். அரங்கம் அதிர்ந்தது. இந்தக் கதையைப் படிக்காத ஒரு தலைமுறையே இருக்கக்கூடும் என்பது ஆச்சரியமாக இருந்தது.
தொகுப்பில் இருக்கும் முதல் கதை.
ரிக்ஷா (1965)
சிறுபத்திரிகை என்பது, கடந்து வந்துவிட்ட மைல்கல் அல்ல. ஆரோக்கியமாக இருக்க நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் அவசியம் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய குழந்தைமை போல, ஒவ்வொரு இலக்கியவாதியும் மனதில் சுமக்க வேண்டிய கருப்பை.