குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் ஃப்ரெஞ்ச் படத்தை உலகத் திரைப்பட விழாவில் பார்த்த நிறைவு ஏற்பட்டது.
நான் படிக்கும் ஷோபா சக்தியின் முதல் கதை என்றபோதிலும் இதன் பின்னால் இருக்கும் அரசியல் புகை மூட்டமாய் இருப்பது போன்ற தோற்றத்தில் அப்பட்டமாகவே தெரிகிறது. விமர்சனம்தான் வைக்கிறார். ஒரு விதத்தில் பார்த்தால் பொதுவாக எழுத்து என்கிற காரியமே, விமர்சனம்தான். ஈழ அரசியலின் உள் நுட்பங்கள் அறியாத நான், வெறும் பார்வையாளன் மட்டுமே என்பதால், சரி தப்பு சொல்ல எனக்கு அருகதை இல்லை.
ஷோபா சக்தியுடையது சமகாலத் தமிழின் பெரிய எழுத்துதான் சந்தேகமே இல்லை. எழுதவேண்டும் என்கிற உத்வேகத்தையும் பொறாமையையும் ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் ஒருசேர தோற்றுவைத்து இருக்கிறது இந்தக் கதை.
மிகச்சில தீற்றல்களில் ஃப்ரான்ஸின் நிராகரிக்கப்பட்ட கீழ்த்தட்டு மனித வாழ்வை அநாயாசமாக உயிர்ப்பிக்கிறார். நாலாந்தர ஃப்ரெஞ்ச் குடியிருப்புகளை படிக்கட்டுகளை பொலிஸ்காரர்களை மற்றவர்களுக்குத் தோன்றும் துர்நாற்றம் கதை சொல்லிக்கு தோன்றாததும், மற்றவர்களுக்குத் தோன்றாத துர்நாற்றத்தில் நாய்க்குட்டி அவனுக்குத் தெரிவதுமாக அய்யோ சொல்லிக்கொண்டே போகலாம்.
எந்த அனுதாபமும் கோராமல், நைந்து கிடக்கும் வாழ்வைக் கண்முன் விரித்து வைத்து எழுத்தாளன் ஷோபா சக்தி நம்மோடு நின்று தானும் பார்க்கிறார் அவரையும் அவரது வாழ்வையும்.
எவ்வளவு நிதானமாக நம்மைக் கொண்டு செலுத்த வேண்டிய இடத்திற்கு என்ன ஒரு நேர்த்தியுடன் வலை பின்னுகிறார்.
ஒரு எழுத்தாளனின் அறிமுகம், இப்படித் தன்னிச்சையாகக் கூடி வரவேண்டும். அபிமானிகளால் படி படி எனத் துரத்தப்பட்டு படிப்பது துன்பம். இனிமேல் ஷோபாவின் எழுத்துக்களைத் தேடிப் படிப்பேன். திகட்டாது என்றும் தோன்றுகிறது.