06 March 2011

விக்கிபீடியாவில் இரண்டு முறை இறக்கும் திஜா!

//தி. ஜானகிராமன் (T.Janakiramanபெப்ரவரி 281921 - நவம்பர் 181983)//


//தி.ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.//
ஏதோ 1982ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் ஊருக்குப் போனார் என்கிற ரேஞ்சில் எழுதப்பட்டு உள்ளது. சரி அதுவாவது போகட்டும் ஒரே பக்கத்தில் ஒரே தகவல் எப்படி இரண்டு விதமாய் வரமுடியும்?



திஜா இறந்தது 1982 என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் 82ல் தீபாவளி அன்று அல்லது அதற்கு ஒட்டிய தினம், வண்ணநிலவன் சமயவேல் நான் மூவரும் திஜாவை அவரது திருவான்மியூர் இல்லத்திற்குச் சென்று சந்தித்தோம். (நான் பணி மாற்றலில் அப்போதுதான் ஈரோட்டிற்கு சென்றிருந்தேன். அம்மா மட்டும் இங்கே இருந்தார்கள். தீபாவளி விடுமுறையை ஒட்டி மெட்ராஸ் வந்திருந்தேன்). 

வேலையைத் தொடர்வதா துறப்பதா என்கிற கடுமையான உளைச்சலில் இருந்த காலம். திஜா இறந்ததைக் குமுதம் ஆவி போன்ற ஒரு பத்திரிகையிலிருந்து அறைவாசி ஒருவன் தற்செயலாக வாய்விட்டுப் படிக்க நேர்ந்ததால் தெரியவந்த செய்தி. அவரை நேரில் சந்தித்து ஒரு வாரம் கூட ஆகி இருக்கவில்லை என்கிற அதிர்ச்சி இன்னும் நினைவில் இருக்கிறது. 

விக்கிப்பீடியாவை மட்டும் குற்றம் சொல்வதில் பொறுளில்லை. அதில் இந்தத் தகவலைப் பதித்த நபரையும் குறை சொல்ல வழியில்லை. வீக்கிப் பீடியாவில் தவறான தகவலை உள் நோக்கத்தோடு சொருக அவர்கள் ஜெயமோகன் & கோ போல தகுடுதித்த எழுத்தாளர்களா என்ன? 

திஜாவின் புத்தகத்திலேயே இரண்டு வேறு வேறு தகவலகள்.

திஜாவின் படைப்புகள் தொகுதி - 1 (ஜூன் 2007) ஐந்திணைப் பதிப்பகம். 
இதன்படி திஜாவின் இறப்பு 18.11.1983

திஜாவின் படைப்புகள் தொகுதி - 2 (2008) ஐந்திணைப் பதிப்பகம். 
இதன்படி திஜாவின் இறப்பு 18.11.1983

தவறு தெரியவந்து பதிப்பகத்தார் 2008ல் திருத்தி இருக்கிறார்கள் என நம்புவோமாக!

நல்லவேளையாகத் தவறு நேர்ந்தது ஐந்தினைப் பதிப்பகத்தில், எனவே திருத்திக் கொண்டு விட்டார்கள். இதுவே ஜெயமோகன் எழுதியதில் ஏற்பட்டிருந்த பிழை எனில் தி.ஜானகிராமனின் இறப்புச் சான்றிதழை அல்லவா திருத்த வேண்டி இருந்திருக்கும்.

// குஜராத்திகளின் காலனியில் பூனை கிணற்றில் விழுந்துவிடுகிறது.// திலீப்குமார் January 7th, 2009 

ஆனால் திலீப்பின் கதையில் வருவது எலி. இந்த நிமிஷம் வரையிலும் ஜெயமோகனிடம் தவறு நேர்ந்தமைக்காக வருத்தமும் இல்லை திருத்தமும் இல்லை. 

இதில் பெருங்கூத்து, இது ஜெமோ நினைவிடைத் தோய்ந்து ஞானதிருஷ்டியில் அருளிப்படைத்த ஆயிரமாயிரப் பக்கங்களில் ஏதோ ஒரு கட்டுரை அல்ல. ஜெயமோகன் ஆற்றிய உரை. எங்கு? அந்தப் பதிவின் இறுதியிலேயே அந்தத் தகவலும் இருக்கிறது.

//[6- ஜனவரி௨009 அன்று மாலை சென்னையில் திலீப்குமார் அவர்களுக்கு சாரல் விருது வழங்கும் விழாவில் ஆற்றிய உரை]//

திலீப்குமாரைப் பாராட்டி அவர் முன்னிலையில் பேசிய உரையிலேயே தவறு. தவறுதல் மனுஷத்தனம். தீர்வு கதையை எழுதிய திலீப்குமாரே ஜெயமோகனிடம் கதறியிருக்கிறார். ஜெயமோகன் அது பூனை அல்ல எலி என்று. அப்படியும் திருத்திக் கொள்ளாமல் பதிவேற்றி இருப்பது தெய்வீகம். அந்தத் தவறை நம்மைப்போன்ற சாமானியர் சுட்டிக்காட்டித் திருத்திவிட்டால் சரஸ்வதியிடம் குடித்த முலைப்பால் வீணாகிவிடதோ!

இதைப் படித்தபின் வீக்கிபீடியாவின் தன்னார்வத் தொண்டர்கள் திஜாவின் பக்கத்தில் இருக்கும் பிழையைத் திருத்திவிடுவார்கள். ஆனால் திலீப்குமாரின் தீர்வு கதைக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு தீர்வு என்று கிடைக்கும்? வரலாற்றைத் தாண்டிய சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் ஜெயமோகன் எழுதியபடி, திலீப்குமார் தன் கதையில் எலியைப் பூனையாக்கிக் கொண்டால்தான் உண்டு.

தமிழகம் தழுவிய அளவில் இதற்கெனத் தனியே ஒரு போராட்டம் நடத்தினால் கூட ஜெயமோகன் தளத்தில் இது திருத்தப்படுமா? ம்ஹூம். உபநிஷதத்தில் திருத்தமா? மூச்.