இண்டியன் ரைட்டர் பேட்டி
‘இந்தியாவுக்கு இன்று
எது தேவை?
ஹிந்து மதத்தின்
ஜாதீயக் கட்டமைப்பா?
ஜாதீயத்தை உதறி
மனிதாயத்தை உயர்த்தும்
அரசியல் சாசன
மதச்சார்பின்மைப்
பிரக்ஞையின் வளர்ச்சியா?
அதுவும் க்ஷீணித்து
உப்புச் சப்பற்ற
லெளகீகம் ஆகிவிடும்
ஆத்மீக ஆபத்தா?
மனசின் மர்மத்தை
ஆராயும் புத்தரின்
பேராழம் போன்று
ஒரு புது அகமுக
விஞ்ஞான நோக்கமா?
எது?’ இதைக்கேட்டு
அக்கமும் பக்கமும்
பார்த்துவிட்டு
நடுங்கும் குரலில்
பதிலைச் சொன்னார்
இண்டியன் ரைட்டர்:
’எனது தத்துவம்
என்ன என்கிறீர்கள்
குதிரை கனைக்கிறது
கொசு ஙொய் என்கிறது
மோட்டெருமை போடுகிறது
முக்காரம் இதில்
சத்தம் எது
புத்தம் எது என்று
மண்டையைக் குழப்பாமல்
ஒவ்வொன்றாய் டேப் பண்ணி
ஒழுங்காய் விற்றால் நல்ல
யாவாரம்!’
- பிரமிள்
*
(1986)
மீறல், அக்டோபர் 1993.