கலை இலக்கியத்தை ஆராயக் கூடாது அனுபவிக்க வேண்டும். ஒரு படைப்பின் சாரத்தை மட்டுமேப் பேச வேண்டும். ஒவ்வொரு வாசகனின் வாசிப்பு அனுபவமும் ஒவ்வொரு விதமானது. அதை அவனவனிடம் விட்டுவிடுவதே சாலச் சிறந்தது.
ஆராதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் உபன்யாசியின் உபதேசமும் அவரது உபாசிகளின் வசனங்களும் ஒன்று போலவே இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. தனக்குத்தானே பாஸ்மார்க் போட்டுக் கொள்ளும் சாதுர்யம், தொடர்ந்து தரமுள்ளதாய் தம்பட்டமடித்துக் கொள்கையில் தன்னிடத்தை விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டதாய்த் தனித்து தூக்கி நிறுத்திக் கொள்ளும் தந்திரோபாயம் ஆகிறது.
ஒன்றை ஆராயாமலும் தர்க்கிக்காமலும் எப்படி ரசிக்க முடியும்? ரசனை அழகுணர்வு எல்லாம் பிறக்கையிலேயே நம்மோடு பிறந்தவையா? வாழ்க்கையை நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பார்க்கிறோம். நாம் பார்த்ததையே எழுத்தாளனும் பார்த்து எழுதி இருப்பதைப் பார்த்ததும் அட என்று நம்மை அடையாளம் கண்டுகொள்கிறோம். அல்லது நாம் பார்க்கத் தவறியதை அவன் பார்த்திருப்பது கண்டு பிரமித்து, அவன் பார்வையால் நம் பார்வையை செழுமைப் படுத்திக் கொள்ள முயல்கிறோம். அவன் பார்வை மிகச் சாதாரணமாய் இருப்பதாய்த் தோன்றும் தருணத்தில் - ஒரு காலத்தில் கண் திறக்கக் கற்றுக் கொடுத்ததே அவன்தான் என்ற போதிலும், அவனைத் தாண்டி நாம் நகர்ந்திருப்பது, நம்மையும் அறியாமல் நமக்குள் நிகழ்ந்திருக்கும் மாற்றம். கல்கி சுஜாதாக்கள் வசீகரித்தது எப்படிப் பொய்யில்லையோ அதேபோல் அவர்களைத் தாண்டுவதும் உண்மைதான். தரத்தின் இடைக்கழி எப்போதும் இருக்க வேண்டிய இடம் தலைக்கு மேல் அக்குளில் அல்ல.
எவனேனும் ஒருவனுக்கு விசிறியாகத் தாலி கட்டிக் கொண்டவனுக்கு இது ஒரு போதும் நிகழ வாய்ப்பில்லை. வாழ்வை எழுத்தோடும் எழுத்தை வாழ்வோடும் சதா உரசிப் பார்த்துக்கொண்டே இருப்பதில்தானே வாசகனுக்கோ எழுத்தாளனுக்கோ முன்னகர்வு இருக்க முடியும். விசிறிகள் அடுத்தவனுக்கு விசிறிவிடக் கண்டுபிடிக்கப் பட்டவை. வெக்கையின்போது மட்டுமே உபயோகப் படுத்தப்படுபவை. விசிறியினால் உண்டான ஆசுவாசம் கிடைத்ததும் இறுக்கம் மறைந்து நிறைவு விரவத் தொடங்கியதும், ஒரு பக்கமாய் ஒதுக்கி வைக்கப் படுவது. அடுத்த வரப்போகும் இறுக்கத்தை இளக்கிக் கொள்ள தேவைப்படும் என்பதைத்தவிர விசிறியின் இருப்பிற்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறதா என்ன?
ஆக நமக்குக் கவலை தமக்கு விசிறிக்கொள்ளத் தெரியாத மூட விசிறிகளைப் பற்றி அல்ல.
ரசனை அது உண்டாக்கும் விகாசம் என்பவை ஒரு விதத்தில் பயிற்சி சம்பந்தப்பட்டவைதான் ஓரோன் ஒண்ணு ஈரோன் ரெண்டு மட்டுமே பயிற்சி அன்று. ஆனால் ஆரம்பத்தில் அறிந்துகொண்ட வாய்ப்பாடு என்கிற அத்யாவசியமான பயிற்சியை அடிப்படையாகக் கொண்டே மாபெரும் தர்க்க துல்லிய கடின கணக்குகள் எழுப்பவும் அவிழ்க்கவும்படுகின்றன.
உயர் சிந்தனையை அழகுனர்வை மனிதமன நுட்பங்களை விரல் சூப்பியபடியே அடையாளம் கண்டுகொண்டவன் எவன்? இவற்றின் மீதான லயிப்பு என்பது, அறிவும் மனமும் ஒன்றிணைந்து தோய்தல் என்கிற பயிற்சியின் விளைவன்றி வேறென்ன?
உண்டவுடன் எடை பார்த்தால் உணவின் எடையும் சேர்ந்திருக்கும். அதுவா நமது சரியான எடை? உனவின் விருந்தாளித் தங்கல் அதிகபட்சம் மறுநாள் காலை விரோதியாய் வெளியேறும்வரைதானே.
வெண்டைக்காய் சாப்பிட்டுவிட்டு கண்ணாடியில் தெரியும் உருவத்தில் ராமானுஜன் ஜாடை தெரிவது போல் உணர்பவர்கள் தம்மை அறிவுஜீவிகளாய் நம்பிக்கொள்ளும் அசடுகள் அல்லவோ.
ஆராயக்கூடாது அனுபவிக்க வேண்டும் என்கிற மந்திர உச்சாடணத்தை மந்தரித்துக் கொடுக்கப்பட்ட அட்சதை போன்று பயபக்தியுடன் தலையில் போட்டுக் கொள்வதோடு நில்லாமல், நமக்கு நல்ல புத்தி வரட்டும் என நம் தலையிலும் போட்டு, தாம் கடவுளாய் வழிபடும் உழக்கிடம் நமக்காகவும் சேர்த்து இறைஞ்சிக் கொண்டு இருப்பார்கள்.
உலகம் இந்த உழக்கிறகு வெளியில்தான் விரிந்து கிடக்கிறது.
அளந்து கொட்டுகிறது என்பதால் உழக்கிலிருந்தே அரிசி வருவதான தோற்றத்தை உண்மையென தவழும் குழந்தைகள் நம்பக்கூடும். உழக்கைப் பிள்ளையாராய்க் கும்பிடுவதால் என்ன குடியா முழுகிவிடப் போகிறது? த்ய்வங்களின் எண்ணிக்கை, முப்பத்து முக்கோடி. அத்தோடு இது முப்பத்து முக்கோடியே ஒண்ணு.
நமது தலையை, தனித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதே நமது தலையாய கவலை.
The Kitchen Maid - Johan Vermeer
c. 1658; Oil on canvas, 45.5 x 41 cm; Rijksmuseum, Amsterdam
ஓவியத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும். தனி பக்கத்தில் ஓவியத்தை திறந்து ஜூம் பண்ணிப் பார்ப்பது சாலச் சிறந்தது.
ஓவியத்தைப் பார்தாயிற்றா? இதன் சாரம் என்ன?
பணிப்பெண் பால் ஊற்றுகிறாள்.
அவ்வளவுதானா?
சரியப்பா சமையல்கட்டில் பால் ஊற்றுகிறாள், ஒரு களிமண் குடுவையில் இருந்து இன்னொரு கற்சட்டியில் பாத்திரத்தை சாய்த்து பால் ஊற்றுகிறாள். ஆமாம் மேசை அடைசலாக இருக்கிறது. அதில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே உயிர்ப்புடன் தொட்டுவிடலாம் போல இருக்கின்றன. முழு ரொட்டியும் அது அமர்ந்திருக்கும் பிரம்புக்கூடையும் அருகில் இருக்கும் துண்டங்கள் மற்றும் மேசைக்கு நடுவே குவிந்து தொங்கும் துணி...
அவ்வளவுதானா?
அந்தப் பெண்ணிற்கும் பின்புற பக்கவாட்டுச் சுவருக்குமான இடைவெளி இருட்டும் நிழலுமாய் எவ்வளவு துல்லியப் படுகிறது. வெளிச்சம் அந்த அறைக்கு எங்கிருந்து வருகிறது? அந்தக் கோணத்தில் தவிர வேறு கோணத்தில் வெளிச்சம் வரவே இல்லை பாருங்கள். பாலூற்றும் பாத்திரத்தைத் தாங்கிப் பிடித்திருப்பதனால் அவளது கையின் தசை திரண்டு மேட்டுடுவதைப் பாருங்கள்.
பொதுவாகவே வெர்மியரின் ஓவியங்களில் வெளிச்சம் விளையாடும்.
பகல் வெளிச்சம் போலல்லவா இருக்கிறது? வெளிச்சம் வெயிலில்லை. அவளது கனத்த உடைகள் குளிர் வெளிச்சத்தை உணர்த்துகின்றன. அவளது காலுக்குப் பின்புறம் சதுரமாக அது என்ன? பெரிது படுத்திப் பாருங்கள். அட இரும்பு கனப்படுப்பு. உள்ளே ஒளிரும் மரக்கட்டையோ? சுற்றிலும் சிதறின குப்பை. அடுப்பிற்குப் பக்கத்தில் அது என்ன மரக்கட்டையின் உதிரிக் குச்சியோ? அய்யையோ அதற்குப் பின்புறம் சுவருக்கும் தரைக்குமாகப் பட்டியாக அது என்ன டைல்ஸா? அவற்றில் ஒவ்வொரு டைலிலும் ஒரே சீராய் படங்கள். கனப்பு மறைப்பதால் ஒரு படத்தின் ஒரு பகுதி எட்டிப் பார்க்கிறது. சமையல் சுவரில் இருக்கும் பொக்கு பொகறைகள். ஆணி ஓட்டைகள். சுண்ண மடிப்புகள்.
நீட்டிக் கொண்டிருக்கும் ஆணியின் நிழலும் வெளிச்சம் கசியும் கண்ணாடி ஜன்னல் மரச்சட்டத்தை ஒட்டி உள்ளே மாட்டப்பட்டிருக்கும் கூடையின் நிழலும் ஒரே கோணத்தில் இறங்குகின்றனவா இல்லையா?
கூடையின் சுவர் இருட்டு கூடையின் முன் பகுதியில் மெல்ல வெளிரத் தொடங்குவதைப் பாருங்கள். கூடையின் பாதியில் இருந்து தொங்கும் பளபளத்த பாத்திரம் தொங்கும் ஆணியை கூடை மறைத்துவிட்டது இருந்தாலும் அதன் நிழல் சீராக இறங்குகிறது பிடியின் நிழலோடு.
ஜன்னல்? ஜன்னலில் ஒரு ஓரத்தில் கண்ணாடி உடைந்திருக்கிறது. உடைந்த இடத்தில் பாயும் வெளிச்சம் ஒளியாக இருக்கிறது. அது மரச்சட்டத்தில் தீய்வதைப் பார்க்கலாம். கண்ணாடித்துண்டங்களின் இணைப்புகளில் இருக்கும் அழுக்கு...
பணிப்பெண்ணின் முகத்தில் இருக்கும் பால் சிந்தாமல் ஊற்றுவதன் கவனக் குவிப்பு. அவள் நெறியின் மையத்து நிழல். 1/3 முகச்சாய்வின் காரணமாய் கண்ணிற்குக் கீழ் விழும் நிழல். மார்புக்கும் கைக்கும் இடையி இருக்கும் நிழல். மேலுடையின் கை மடிப்புகளில் இருக்கு நிழல் கலந்த வண்ண மாற்றம். ஒளியும் நிழலும் முயங்கும் இடங்களும் பார்த்துப் பார்த்து மாய்ந்து போக வைக்கின்றன.
வெர்மியரின் ஓவியங்களில் எல்லாப்பொருட்களையும் தழுவும் வெளிச்சம் வாழ்க்கையைப் பிரகாசமாக்கியதாகத் தெரியவில்லை. நுண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததாலோ என்னவோ குறைவாய்ப் படைத்து குடும்பத்தைக் கடனில் விட்டுச் செல்ல நேர்ந்தது.
1675ல் புதைக்கப்பட்டவனின் 43 வயது தெரிகிறதா? அல்லது இன்னும் அவன் வாழப்போகும் நூற்றாண்டுகள் தெரிகின்றனவா? இடையில் மறக்கப்பட்டு இரு நூற்றாண்டுகள் கழித்து மீள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டாடப்படுபவர்.
c. 1660-61 Oil on canvas, 96.5 x 115.7 cm; Royal Cabinet of Paintings Mauritshuis, The Hague
அசோகவனம் போன்ற ஒரு பெரும் காவியம் வரப்போவதை 300 வருடங்களுக்கு முன்பே அறிந்து கொண்டு படைபூக்கத்துடன் வெர்மியர் செயல்பட்டிருக்கிறார் என்பது இப்படி ஒரு கருப்பொருளைத் தேர்வு செய்ததில் இருந்தே தெளிவாகிறது.
Woman Holding a Balance
c. 1664; Oil on canvas, 40.3 x 35.6 cm; National Gallery of Art, Washington
ஒரு பெரும் தராசு பற்றிக் கூறினார். நீதியும் அநீதியும் கருணையும் கொடூரமும் அழகும் கோரமும் ஆக்கமும் அழிவும் என அதற்கு இரு தட்டுகள். தராசுமுள் எப்போதும் சஞ்சலம் கொண்டது. கங்கையை சுட்டிக்காட்டியபடி ஆதிகவி கூறினார் 'மகாகாவியம் என்பது கங்கை போல. கங்கோத்ரியில் சிறு குடம் போன்ற ஊற்றிலிருந்து அது உற்பத்தியாகிறது. பல நூறு நதிகளும் ஓடைகளும் கலந்து பெரும் பிரவாகமாக மாறிக் கடலில் கலக்கிறது. முள் சமநிலை குலையும் ஒரு சலனத்தில் பிறக்கும் நதி அது. கடலைச் சேர்கையில்மீண்டும் முள் சமநிலை கொள்கிறது. ' என் மனம் ஒளிமயமாயிற்று. எழுந்து அவர் பாதங்களை வருடினேன்.
(கனம் செய்யப்பட்ட வார்த்தைகளில் விண்டு சொல்லவியலா உட்பொருள் ஏதும் உளதோ?)
இப்படி எதையும் போதிக்காத இவர் என்ன பெரிய ஓவியர்?
A Woman Asleep at a Table
c. 1657; Oil on canvas, 87.6 x 76.5 cm; Metropolitan Museum of Art, New York
தூங்காத மனிதர் என்று ஒருவரேனும் இந்த உலகில் இருக்க முடியாது தானில்லையா? செகாவைப் பிடித்தபடி ரஷ்யா போக முடியுமா, 6000க்கும் அதிகமான ஹாலிவுட்டில் டிஸ்கஷனில் இருக்கும் படங்களின் டிவிடிக்கள் உட்பட பார்த்தபடி, ஏராளமான புத்தகங்களை விக்கிபீடியாவிலேயே படித்தபடி, எல்பி அட்டைகளிலேயே இசையைக் கேட்டபடி தேசாந்திரியாக வாழும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான இந்த ஓவியத்தைத் தமிழுக்கு மொழிபெயர்த்தால் விசேசமான பொறுத்தமுள்ள தலைப்பு துயில் என்பதாகத் தானிருக்கும் இல்லையா?
The Procuress
1656; Oil on canvas, 143 x 130 cm; Gemaldegalerie Alte Meister - Staatliche Kunstsammlungen, Dresden
இந்த ஊரில் ஒரு பல்கலைகழகம் கூட இல்லையா? தேகம் இங்கே பாடமாக இன்னும் வைக்கப்படாததற்கு அவர்களல்லவா வெட்கப்பட வேண்டும்.
கடைசியாக வந்த ழான் டூமினி மின்னஞ்சலின் படி, அந்த நகராட்சி அறிவித்து இருப்பது: திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தொடங்குகையில் தேகம் பாடநூலாகும்.
நான் இங்கே கசங்கிக் கொண்டிருக்கிறேன் அவன் அங்கே கசக்கிக் கொண்டிருக்கிறான். இடையில் முந்நூற்றுச் சொச்சம் ஆண்டுகள். இதுவே என் எழுத்து காலம் கடந்த க்ளாஸிக் என்பதைக் காட்டவில்லையா?
View of Houses in Delft, known as "The Little Street"
c. 1658; Oil on canvas, 54.3 x 44 cm; Rijksmuseum, Amsterdam
இந்த ஒரு ஓவியம் மட்டுமே பல ஓவியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதை எப்படி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மோட்டார் மெக்கானிசம் பயிலப்படுகிறது எனப் பார்க்க விருப்பமுடியோர் இங்கே சொடுக்கவும்.
Soldier and a Laughing Girl
c. 1658; Oil on canvas, 49.2 x 44.4 cm; The Frick Collection, New York
உங்களுடன் படுக்க எப்போதும் தயாராய் இருக்கிறேன் என்பதற்காக என் கணவரை எப்படி நான் விட்டு வர முடியும்? ஹிஹிஹி
ஆட்சேபனையே இல்லை அன்பே. அவ்வப்போது அவரும் உன்னுடன் படுக்கலாம். நான் அனுமதி மறுக்கவே மாட்டேன். தனிமையில் இசைப்பவனின் தனித் தகுதி அல்லவா அது. நான் மதிக்கும் ஒரே எழுத்தாளனாகிய கோபி ஓரிடத்தில் சொல்லி இருக்கிறார்: மனிதர்களே அற்ற இடத்திற்கு நாம் செல்லுவோம் உன் கணவரும் வரலாம் எனக்கு ஆட்சேபனையில்லை என்பதை அவருக்குத் தெரிவி. (நல்லதொரு குடும்பம் ஓப்பன் யூனிவர்சிடி)
The Music Lesson
c. 1662-65; Oil on canvas, 74.6 x 64.1 cm; Royal Collection, St. James' Palace, London
சுவரில் சரிவாய் நிற்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் அனைத்தையும் அவற்றின் கோணங்களோடு பார்க்க முடிகிறது. கொசுறாய் 1/3 ஓவியம் சுவரில்.
Woman in Blue Reading a Letter
c. 1662-63; Oil on canvas, 46.5 x 39 cm; Rijksmuseum, Amsterdam
பொதுவாக எழுத்தாளர்களைப் பற்றி எழுதப்பட்ட கதைகள் எழுச்சியற்று சூம்பிப் போய்விடும் உங்கள் கதை மட்டுமே தேம்பிக்கொண்டு உசரமாய் நிற்கிறது. (ஜேஜே சிலகுறிப்புகள் என்பது என்ன? ரங்கநாதன் தெரு நெரிசல் பற்றிய அறிக்கையா?)
Young Woman with a Water Pitcher
c. 1664-65; Oil on canvas, 45.7 x 40.6 cm; Metropolitan Museum of Art, New York
c. 1664-65; Oil on canvas, 45.7 x 40.6 cm; Metropolitan Museum of Art, New York
பொதுவாக எழுத்தாளர்களைப் பற்றி எழுதப்பட்ட கதைகள் எழுச்சியற்று சூம்பிப் போய்விடும் உங்கள் கதை மட்டுமே தேம்பிக்கொண்டு உசரமாய் நிற்கிறது. என்ன காரணம்? உங்களைத் தொந்திரவு செய்வதாகத் தோன்றினால் பதில் சொல்ல வேண்டாம்.
(எலேய் எத்தனைக் கடுதாசியத்தான் நானே எழுதிக்கறது. ஏதோ ஒருத்தன் மெய்யாலுமே சந்தேகம் கேக்குறே எட்டுப்பக்கம் எழுதக் கெடச்ச வாய்ப்பை நழுவ விட முடியுமா? இரு தண்ணி குடிச்சிட்டு வந்து வெச்சிக்கிறேன். மினிம்மா அந்த ஜக்கக் குடு)
Girl with a Pearl Earring
c. 1665-1666; Oil on canvas, 44.5 x 39 cm; Royal Cabinet of Paintings Mauritshuis, The Hague
இந்த ஓவியத்தில் ஒரு சிறப்பு. ஒளி வரும் இடம் காட்டப்படவில்லை. இருந்தும் நிழலில் சிறு பிசிறுகூட இல்லை.
The Concert
c. 1665-66; Oil on canvas, 72.5 x 64.7 cm; Isabella Stewart Gardner Museum, Boston
இரண்டு ஓவியங்கள் சுவரில். போகவும் பியானோ மேல்மூடியின் உட்புறம் என ஒரு ஓவியத்திற்குள் எத்துனை ஓவியங்கள்.
The Girl with the Red Hat
c. 1665-67; Oil on panel, 22.8 x 18 cm; National Gallery of Art, Washington
ஒரு ஓவியத்தில் கூட சிறியதொரு உபன்யாசம் கூட இல்லாத இவை எல்லாம் உயர்ந்த கலையா? கடவுளை நேரடியாகச் சென்று தொடக்கூடியவையா? வாயைத் திறந்தாயிற்று பின் பேசாதிருந்தால் பெரும்பாவம் நம்மை வந்து சூழாதோ கங்கையின் சுழல்தான் இதற்கு விடை சொல்ல வேண்டும்
Mistress and Maid
c. 1667-68; Oil on canvas, 90.2 x 78.7 cm; Frick Collection, New York
அற உணர்வே கிஞ்சித்தும் அற்ற ஓவியம்
The Geographer
c. 1668-69; Oil on canvas, 52 x 45.5 cm; Stadelsches Kunstinstitut, Frankfurt am Main
ஆழ்வார்க்கடியான் எழுதிய பாஷ்யம்
ஒவ்வொருவர் புரிதல் ஒவ்வொரு விதம். எழுதியவன் புரிதலிலேயே எல்லோருக்கும் புரியவேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லையே. இப்படிப் புரிந்துகொள்வதே எனக்கு சுக ம்ம்ம்ம்ம்.
The Art of Painting
c. 1666-73; Oil on canvas, 130 x 110 cm; Kunsthistorisches Museum, Vienna
இலக்கியக் குழும விவாதம்
அன்புள்ள ஜா.வெ. குருவணக்கம். என் ஐயத்தை நீங்கள்தான் அகற்றவேண்டும். ஓவியம் வரைவதை ஓவியமாய் வரைந்திருக்கும் இந்த ஓவியத்தில் ஓவியம் என்று எதைக் கொள்வது? உங்கள் சிருஷ்டிபூர்வ நேரத்தை வீணடிப்பதற்கு மன்னிக்கவும்.
(அம்மாவீட்டிற்குப் போய்விட்டால் எல்லா வீட்டிலும் முஷ்டிபூர்வம்தான்) நமது கலைக்கல்லூரிகள் கலை என்கிற பெயரில் கணிதம் பொருளாதாரம் போன்றவற்றைக் கலைகளாக போதிக்கும் வரையில் இது போன்ற ஐயங்கள் கிளம்பிக் கொண்டேதான் இருக்கும்.
(கேள்வி என்ன? பதில் என்னன்னு எவனுக்காச்சும் புரிஞ்சிதா?)
The Lacemaker
c. 1669-70; Oil on canvas transferred to panel, 23.9 x 20.5 cm; Musée du Louvre, Paris
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பாட்டாளி மனிதனாவது எப்படி இருந்தான் என்பதைக் காட்டாத இது எப்படிக் கலையாகும். எல்லோரும் உயர் ரக ஜவுளியே உடுத்தி இருக்கின்றனர் நிச்சயம் மேட்டுக்குடி கலைதான் இது. மேட்டிமைவாதத்தில் உறையும் அற்பவாதம்.
The Love Letter
c. 1669-70; Oil on canvas, 44 x 38.5 cm; Rijksmuseum, Amsterdam
இப்படியா ஒரு ஓவியத்தை பார்ட் பார்ட்டாய் பிரித்துப் பார்ப்பது. இப்படி அதிகறார்த் தனத்துடன் பிரித்துப் பார்க்கத் தொடங்கினால் நாம் க்ளாசிக் எனப் போற்றுபவையே தேறாது.
இதில் குறியீடுகளாய்க் குறிக்கப்பட்ட குறிகள் எனக்குப் பிடித்து இருந்ததை இங்கு பதிவு செய்வது என் கடைமைகளில் ஒன்றாய்க் கருதுகிறேன். அந்த காதல் கடிதம் எந்த ஆளுமையால் எழுதப்பட்டது என்கிற தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த ஆளுமைகள் பற்றி நம் மனம் கட்டமைத்திருக்கும் பிம்பங்கள் நொறுங்கக்கூடும். (நல்லவேளை அந்த குண்டம்மா எங்கம்மாவாக இல்லாதது)
Lady Writing a Letter with Her Maid
c. 1670-72; Oil on panel, 72.2 x 59.7 cm; National Gallery of Ireland, Dublin
கலை இலக்கியம் அனைத்துமே அந்தந்தக் காலத்துக் கலாச்சாரத்தின் பதிவுகள். கற்பனைதானே என யதார்த்த ஓவியத்தில் கண்டதையும் வரைந்து வைத்தால் அவன் ஓவியனா? அப்படிச் செய்யாத இந்த மேதை மூடனா?