EZRA POUND (1885 - 1972) பிரமிள் (1939 - 1997)
அதிரடி
அட்டுப் பிடித்த பத்திரிகைகளுக்கு
அரோகரா!
வாய்க்கட்டுப் போடப்பட்ட
விமர்சகர்களின் பாடும் அதோகதி!
அவர்களின் குடல்களை
புழுக்கள் குதறட்டும்.
புத்துணர்வு வேண்டாம் என்றவர்களின்
பிணக்குழிகள் இதோ!
இவர்களின் தொழில்
ஒத்தூதல், கட்சி கட்டுதல்.
ஏய், வேசித் தொப்பை முடக்குவாதி!
உன் கதியும் இதுதான்!
எழுத்தின் சுதந்திரம், உந்நதம்
இரண்டுக்கும் நீ
பரம வைரி!
ஏய் காளானே!
விட்டுக் கொடுக்காத
$
வாருங்கள், புத்தியக்கம் அழைக்கிறது.
முதுகு சொறிகிறவர்களையும்
’தொழில்’ நடத்துகிறவர்களையும்
விரட்டியடிப்போம்.
லாபத்துக்காக
பணத் தொப்பைகளைத்
தடவுவோர் மீது
காறித் துப்புவோம்!
கொஞ்சம் காற்றாட
வெளியே செல்வோம்!
$
ஓகோ! முப்பது வயதிலேயே நான்
செத்துப் போவேன் என்கிறாயோ?
என் ஏழைக் கல்லறையை
மாசு படுத்த நினைக்கிறாயோ?
குஷியாகச் செய்! - அதற்கு
எப்போதும் உண்டு என்
ஒத்துழைப்பு -
நல்ல எழுத்தாளர்களை
ஒழித்துக் கட்டுதல் உன்
பழக்க தோஷம்.
ஒன்று அவர்களை
பைத்தியமாக்குவாய்
அல்லது அவர்களின்
தற்கொலையைப் பார்த்து
கண்கொட்டுவாய்.
அவர்களின் போதைப்பழக்கம்
அத்யாவசியம் என்று சொல்வாய்.
மேதமை - பைத்யம்
என்று அளப்பாய்.
ஆனால் உன் திருப்திக்காக நான்
பைத்யமாகமாட்டேன்.
உன் குஷிக்காக
இளமையிலேயே சாகவும்மாட்டேன்.
ஓ! வாழ்வை நான் சமாளிப்பேன்!
உன்மீதுள்ள தங்கள் வெறுப்பை
வெளியிடப் பயந்தவர்கள் பலர்.
என்னைப் பொறுத்தவரை
உனது வெறுப்புப் புழுக்கள்
என் பாதங்களைச் சுற்றிச் சுற்றி
கிச்சுக் கிச்சு மூட்டட்டும்.
எனது பூட்ஸின் ருசியா வேண்டும்?
இதோ என் பூட்சின் ருசி.
தடவு, நக்கு!
Salutation The Third
Let us deride the smugness of 'The Times': GUFFAW!
So much for the gagged reviewers,
It will pay them when the worms are wriggling in their
vitals;
These are they who objected to newness,
Here are their tomb-stones.
They supported the gag and the ring:
A little BLACK Box contains them.
So shall you be also,
You slut-bellied obstructionist,
You sworn foe to free speech and good letters,
You fungus, you continuous gangrene.
Come, let us on with the new deal,
Let us be done with pandars and jobbery,
Let us spit upon those who pat the big-bellies for profit,
Let us go out in the air a bit.
Or perhaps I will die at thirty?
Perhaps you will have the pleasure of defiling my
pauper's grave;
I wish you joy, I proffer you all my assistance.
It has been your habit for long
to do away with good writers,
You either drive them mad, or else you blink at their
suicides,
Or else you condone their drugs,
and talk of insanity and genius,
But I will not go mad to please you,
I will not flatter you with an early death,
Oh, no, I will stick it out,
Feel your hates wriggling about my feet
As a pleasant tickle,
to be observed with derision,
Though many move with suspicion,
Afraid to say that they hate you;
The taste of my boot ?
Here is the taste of my boot,
Caress it,
lick off the blacking.
*****
நினைவுச் சின்னம்
தற்பெருமையின் அங்கியணிந்து
நடமாடுகிறவன் நானென்கிறாய்.
ஆனால், ஒருசில வருஷங்களில்
இந்தச் சில்லறை டம்பங்கள்
மறக்கப்பட்டுவிடும்.
இந்தக் கோணங்கி விபரம் ஏதும்
நாளைக்கு இராது.
உன் கதையோ வேறு -
நீ பூமிக்கடியில் அழுகுவாய்.
உன் பிணக்குழிமீது முளைக்கும்
புல்லுக்கு உயிர்தரும் சத்து
உன் எருவில் கூட இருக்குமா?
- சந்தேகம்தான்!
Monumentum Aere, Etc.
You say that I take a good deal upon myself;
That I strut in the robes of assumption.
In a few years no one will remember the buffo,
No one will remember the trivial parts of me,
The comic detail will be absent.
As for you, you will rot in the earth,
And it is doubtful if even your manure will be rich
enough
To keep grass
Over your grave.
*****
கண்டவை
எல்லாம் தெரிந்த பெருநிலையில்
அசல் அசெளகரியத்தோடு வாழும்
இன்றைய தலைமுறைக்காரர்களே!
அசுத்தமான குடும்பங்களுடன்
வெய்யிலில் பிக்னிக் நடத்தும்
மீனவர்களைக் கண்டவன் நான்.
பற்கள் நிரம்பிய அவர்களது
சிரிப்பைக் கண்டு
அசட்டு நகைப்பொலியையும்
கேட்டவன் நான்.
உங்களைவிட
நான் மகிழ்ச்சி நிரம்பியவன்.
என்னைவிட
அவர்கள் மகிழ்ச்சி நிரம்பியவர்கள்
குளத்தில் நீந்துகின்றன மீன்கள் -
அவற்றுக்குச் சொந்தமான
உடலில் துணிகூடக் கிடையாது.
Salutation
O generation of the thoroughly smug
and thoroughly uncomfortable,
I have seen fishermen picnicking in the sun,
I have seen them with untidy families,
I have seen their smiles full of teeth
and heard ungainly laughter.
And I am happier than you are,
And they were happier than I am;
And the fish swim in the lake
and do not even own clothing.
*****
சுருட்டுக் கடை
ஆண்டவனே! சுக்கிர பகவானே!
திருடர்களைப் போஷிக்கும் புதனே!
கெஞ்சிக் கேட்கிறேன்,
காலா காலத்தில்
எனக்கொரு
சுருட்டுக் கடை வைத்துக் கொடுங்கள் சாமி!
விதவிதமாகப் பதனிட்டு
கண்ணாடி பீரோவினுள்
அழகான பெட்டிகளில்
அடுக்கப்பட்ட
வெவ்வேறு வெட்பதட்பங்களின்
சுருட்டுக்கள்.
கூடவே, எடைபோட
எண்ணெய்ப் பிசுக்கு
ரொம்பவும் இல்லாத ஒரு
தராசு.
இன்னும் ஒன்று -
கலைந்த தலைமயிரை செப்பனிட்டு.
சிறுவிஷமச் சொற்கள் பரிமாற
அவ்வப்போது சில
வேசிகளும் வரவேண்டும்.
ஆண்டவனே! சுக்கிர பகவானே!
திருடர்களைப் போஷிக்கும் புதனே!
எனக்கு ஒரு சுருட்டுக்கடை வேண்டும் சாமி!
இல்லையானால் வேறு ஏதும் ஒரு தொழில் -
நிரந்தரமும் மூளை தேவைப்படுகிற
இந்த எழுத்துத் தொழில் தவிர.
The Lake Isle
O God, O Venus, O Mercury, patron of thieves,
Give me in due time, I beseech you, a little tobacco-shop,
With the little bright boxes
piled up neatly upon the shelves
And the loose fragment cavendish
and the shag,
And the bright Virginia
loose under the bright glass cases,
And a pair of scales
not too greasy,
And the votailles dropping in for a word or two in passing,
For a flip word, and to tidy their hair a bit.
O God, O Venus, O Mercury, patron of thieves,
Lend me a little tobacco-shop,
or install me in any profession
Save this damn'd profession of writing,
where one needs one's brains all the time.
*****
பரண்
வாருங்கள்,
நம்மைவிட நன்றாக வாழ்கிறவர்களுக்கு
இரக்கப்படுவோம்.
வாரும் நண்பரே! - நினைவிருக்கட்டும் -
பணக்காரர்களுக்கு வேலையாட்களுண்டு நண்பர்களில்லை
நமக்கோ நண்பர்களுண்டு வேலையாளில்லை
வாருங்கள்,
கல்யாணமானோர் ஆகாதோர்
இருவருக்கும் இரக்கப்படுவோம்.
தங்க முலாம் பூசிய நடனக்காரிபோல்
விடிகாலை பிரவேசிக்கிறது.
எனது ஆவலின் நிறைவு சமீபிக்கிறது.
சேர்ந்து விழிப்படையும்
இந்த வேளையின் குளிர்ச்சிதான்
வாழ்வின் மிகச்சிறந்த பரிசு.
The Garrett
Come, let us pity those who are better off than we are.
Come, my friend, and remember
that the rich have butlers and no friends,
And we have friends and no butlers.
Come, let us pity the married and the unmarried.
Dawn enters with little feet
like a gilded Pavlova
And I am near my desire.
Nor has life in it aught better
Than this hour of clear coolness
the hour of waking together.
*****
பண முதலைக்கு
உன்னைக் குற்றம் சாட்ட
நான் யார்?
ஓ, பண முதலையே!
எனக்குக் கசப்பது
வறுமை
உனக்குக் கசப்பது
உபயோகமற்ற உன்
செல்வம்.
To Dives
Who am I to condemn you, O Dives,
I who am as much embittered
With poverty
As you are with useless riches ?
*****
முடிவுரை
ஒரு உந்நத உணர்ச்சியை
உத்தேசித்தே அவன்
ஒத்தூதுவதற்குத் தயாரானான்.
Epitaph
Leucis, who intended a Grand Passion,
Ends with a willingness-to-oblige.
நன்றி: லயம் வெளியீடு
பிரமிள் கவிதைகள் (அக்டோபர் 1998)
@ காலசுப்ரமணியம்.