கவிஞர் விக்ரமாதித்யனின் தலைப்பற்ற ஒரு கவிதை.
எல்லாமே
தீக்ஷைபெற்று
பட்டங்கட்டி
பரிபாலனம் செய்துவரும் ஸ்வாமிகள்தாம்
ஆனால்
ஒவ்வொரு ஸ்வாமிகளுக்கும்
ஒவ்வொரு ஸ்வாமிகளிடம்
ஒவ்வொரு வகையில் மனஸ்தாபம்
ஒவ்வொரு ஸ்வாமிகளுக்கும்
ஒவ்வொரு ஸ்வாமிகள்மேல்
ஒவ்வொரு முறையில் விமர்சனம்
ஒவ்வொரு ஸ்வாமிகளும்
ஒவ்வொரு ஸ்வாமிகளுக்கும்
ஒவ்வொரு விதத்தில் ஸ்வாமிகளே இல்லை
தன்னையறிந்து கடந்து
முழுமையடைந்து நின்று
இயற்கை தெளிந்து கண்டு
உண்மையுணர்ந்து கொண்ட
பிரபஞ்ச ஸ்வாமிகள் மட்டும்
பிழைத்தால் போதுமென்று
பிடிபடாமல் போயிற்று தலைமறைவாக
வானத்தில் நக்ஷத்ரமாகி ஜ்வலிக்கிறதென்று
வார்த்தையாடிக் கொண்டன சில ஜனங்கள்
புற்றுக்குள் பாம்பாகி ஒடுங்கிற்றென்று
பரவசப்பட்டுக் கொண்டன சில ஜனங்கள்
- விக்ரமாதித்யன்
(ஊருங்காலம்)
நன்றி: தமிழ்ப்புத்தகாலயம்
டிசம்பர் 1984