Les Mistons (The Brats) by François Truffaut 1957
நேற்று வெங்கட் சாமிநாதன் விழாவிற்கு சென்றிருந்தபோது அரங்கிற்கு வெளியில் வண்ணநிலவனை சந்தித்தேன். தற்செயலாக இந்தப் படம் பற்றி நினைவுக்கு வந்தது. மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் வெகுகாலம் முன்பு Alliance Française நடத்திய த்ரூஃபோ திரைப்பட விழாவில் பார்த்தது. http://en.wikipedia.org/wiki/Les_Mistons பெரிய திரையில் இந்தக் கன்னி முயற்சி ஏற்படுத்திய பிரமிப்பு அசாதாரணமானது. இந்தப் படத்தை இயக்கியபோது த்ரூஃபோவுக்கு 25 வயது.
கலைப்படைப்புகளைப் பார்த்தே ரசனை, பார்வை கூர்மையடைகிறது. அவை மனதில் உண்டாக்கும் மோகப் பிரளயத்தில் அடித்து புரண்டு கரையொதுங்கியவன், படைப்பாளியெனில் தனது பாதையைக் கண்டடைய காதலின் அலைக்கழிப்பே உத்துதலாகிறது. சிருஷ்டிகரத் தீண்டலின் எல்லைக்கு அப்பாலிருக்கும் வன்புணர்ச்சிக்காரன் போலி செய்கிறான்.
படத்தின் தொடக்க ஷாட்களில் சைக்கிளோட்டும் வண்ணத்துப் பூச்சி. கடைசி ஷாட்டில் வற்றிய முகம். நல்லவேளையாக மேரியிடம் த்ரூஃபோ பால் குடிக்காத காரணத்தால் அசட்டுணர்ச்சியை வைத்து அல்லோல கல்லோலப் படுத்தி உலுக்கியெடுத்துவிடவில்லை. பார்வையாளர்களாக இருக்கும் பசங்களும் மரணத்தின் வலி தாக்கி குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி ஆன்மீகத் தேடலுக்குள் இறங்காமல், தம் வயதிற்குத் தக்கபடி இயல்பாக அடுத்த கிளுகிளுப்பிற்குத் தாவுகிறார்கள்.
கெகியே து சினிமா என்கிற பத்திரிகையில் அப்போதைய சமகாலப் படங்களைக் கடுமையாகக் கிழித்துத் தோரணம் கட்டிக் கொண்டிருந்தவர் எடுத்த படம் என்பது கூடுதல் சுவாரசியம்.
காதலர்கள் திரும்பத் திரும்ப சந்திக்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் நமக்கு ஓவியங்களாகின்றன.
கேமராவை சிமெண்டு போட்டுப் பூசிவிட்டு முழித்துப் பார்த்துக்கொண்டு மூவே ஆகாமல் (ஏதோ ஒரு படத்தின் கதை அப்படி, என்றில்லாமல் ஷ்டைலே சமாதி நிலைதான்) அயலான் மூவியை சுடுவதே சினிமாவிற்கு செய்யும் தூபதீப ஆராதனை என்று,க்ரேன் ட்ராலி ஆட்கள் பாட்டா செலவின்றி சுருட்டுபவருக்குக் கேமராவில் கவிதை எழுதிக் கொண்டிருப்பதாக மாலை மரியாதை.
இளம் பெண் சைக்கிளில் வருவது செல்வது திரும்புவது எனத் தொடக்க ஷாட்களிலேயே ஃப்ரேம் ஃப்ரேமாக எவ்வளவு ஓவியங்கள்.
பையன்களின் குறுகுறுப்புப் பார்வையாய் நகரும் படம். காதலனின் அறிமுகக் காட்சியிலேயே பின்னணியில் பசங்கள் பின்தொடர்கின்றனர். அவன் வெயிலில் தெருவைக் கடந்து கட்டிட நிழலுக்குள் சுவரை விரலால் தொட்டு உரசி கம்பியைத் தடவியபடி நடப்பது, ஏதும் உயர்ந்த தத்துவ தரிசன கண்டடைவைக் குறிக்கிறதா? பெருத்த ஏமாற்றம். ஃபிகரைப் பார்க்கப் போகிற வெறும் பரபரப்பின் பொறுமையின்மைதானா?
அனைத்தையும் பண்டார மேட்டராக ஆக்கினால்தான் படைப்பு மேன்மையான இலக்கியம் ஆகும் என்று இல்லை. இந்தப் பொருளில்தான் க.நா.சு வெ.சா சுராவென எல்லோரும் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது, கலைகலைக்காகவே என முத்திரை குத்தப்பட்டது. அதற்குப் பொருள் கலை எந்தக் கருத்தையும் சொல்லக் கூடாது என்பதல்ல. வாழ்வின் ஒரு பகுதியாய், இயல்பாகக் காட்டு போதிக்காதே என்பதுதான்.
ஆய் அலம்பிக்கொள்வதிலும் ஆன்மீகம் தேடி, குறியீடாய்க் கழுவித்தள்ளும் கலாச்சார உன்னத சூழலில் த்ரூஃபோ பிறக்காமல் போனது அவரது அதிருஷ்டம்.