அய்யா அ.முத்துலிங்கம் அவர்களே! விஷயமே இதுதான். எதையும் அநாயாசமான முறுவலுடன் எழுதக் கைவந்த நீங்கள், வலிந்த எழுத்தையும் மொக்கை எழுத்தையும் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதைக்கூட, சுய எள்ளலுடன் எவ்வளவு பிரமாதமாக சொல்லி விட்டீர்கள் பாருங்கள்.
ட்யூலிப் பூ வைப் போல
<சமயம் வரும்போது முழுவீச்சோடு மண்ணை உதறி மேலே வரும் >
<அது அதற்கு ஒரு காலம் இருக்கிறது. நேரம் கூடவேண்டும்.> எழுத்தாளனையும் மீறி இப்படி உண்மை வெளிவருவது என்பது என்ன சாதாரண விஷயமா?
.23 சதம் (சிறுகதைகள்) இப்படியான கதையை எழுத முடிந்த ஒருவரால் ’அறம்’ போன்ற அதீத அசட்டுணர்வுக் கதையை <ஜெயமோகன் எழுதிய அறம் என்ற சிறுகதை. சகல அம்சங்களும் பொருந்திய சிறந்த சிறுகதை அது.> என்று எப்படிச் சொல்ல முடிந்தது. ஒருவேளை அ.முத்துலிங்கம் என்கிற பெயரில் எழுதுவது நீங்கள் இல்லையோ? சுகஜீவிதம் என்பதால் ஆள் வைத்துக் கதை எழுதி வாங்கி போட்டுக் கொள்கிறீர்களோ?
<1982ல் வழக்கம் போல் 11.30 வாக்கில் இரவு சிறப்புப் பேருந்தைப் பிடிக்க அவரது டிடிகே சாலை மடத்தில் இருந்து ஆழ்வார் பேட்டை திருப்ப பஸ் ஸ்டாப் நோக்கி சகல போதைகளுடனும் தளர் நடையில் பேசிக்கொண்டு செல்கையில் ஜெயகாந்தனிடம் ஒரு கேள்வி கேட்டேன். ((மே மாதத்தில் நான் BSA சைக்கிள் வாங்கும் முன்னால் நடந்தது இது. வாங்கியபின் பல இரவுகள் 12 அல்லது 1ஐத்தாண்டிவிடும். சைக்கிள் கேரியர் அவருடையது)
ஜேகே! ரசிக்கையில் உயர்ந்த விஷயங்களைக் குறிப்பிடுபவர்கள் படைக்கையில் எப்படி சாதாரணமாகி விடுகின்றனர்.
வழக்கம் போல மின்னலாய் வந்தது பதில்.
நாம் எதை ரசிக்கிறோம் என்பதும் என்னவாக இருக்கிறோம் என்பதும் இருவேறு விஷயங்கள் அல்லவா!>
அன்று ஜெயகாந்தனிடம் கேட்டதை அப்படியே தலைகீழாய் மாற்றி உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது.
படைக்கையில் உயர்ந்த விஷயங்களைக் படைப்பவர் ரசிக்கையில் எப்படி சாதாரணமாகி விடுகிறார்.
என்ன ஆச்சரியம்! அன்று ஜெயகாந்தன் சொன்ன அதே பதில் அட்சரம் மாறாமல் இந்தக் கேள்விக்கும் அப்படியேப் பொருந்துகிறது!