பெரும்பாலும் மாமிகள். கிட்டத்தட்ட 50 வயதைத் தாண்டிய மாமிகள். அலங்கார பூஷிதைகளாக தலைமுதல் கால்வரை நகை நட்டுகளுடனும் உயர்ந்த உடைகளுடனும் இருந்த மாமிகள். அநேகமாக எல்லோருக்குமே சுகஜீவனம். வாரம் ஒருமுறை கூடி அளவளாவுவதற்காக ஒரு அமைப்பு. இவர்களுக்கு நடுவில் நரைத்த தலையுடன் ஒருவர். கழுத்தில் ஒற்றை மஞ்சள் கயிறு. ஆரம்ப காலங்களின் தயக்க இறுக்கம் தளர்ந்தபின் காதும் மூக்கும் மூளியாய் இருந்தவரைப் பார்த்து ஒரு பெண்மணி கேட்டார்.
கேக்கறனேன்னு தப்பா நெனச்சுக்காதேள்! நீங்க ஏன் நகையே போட்டுக்கறதில்லே?
’மூளி’யாய் இருந்தவர் சிரித்துவிட்டார்.
இந்தக் கேள்விய நான்னா, உங்களண்டைக் கேட்ருக்கணும்?
என்ன சொல்றேள்? புரியலையே?
இல்லை, நீங்கள்ளாம் ஏன் நகை போட்டுண்டு இருக்கேள்னு கேக்கறதுதானே நியாயம். நகை போட்டுக்கறதுதானே அன்நேச்சுரல்?
கலங்கடித்த இவரது இன்னொரு கேள்வி. இம்முறை என்னிடம்.
குஷ்ட ரோகின்னு எப்படி ஒரு ரைட்டரால எழுத முடியும்?
குஷ்ட ரோகின்னு எப்படி ஒரு ரைட்டரால எழுத முடியும்?
பொது விவரணைல தானே வருது. இழிவா சித்தரிக்கப்படலையே?
குஷ்ட ரோகின்னு எழுதறதே அதானே?
குஷ்ட ரோகின்னு எழுதறதே அதானே?
எழுத்தாளரிடம் தெரிவித்தபோது அவர் கேட்ட கேள்வி,
குஷ்ட்ட ரோகியை வேற எப்படி எழுதணும்னு சொல்றாங்க?
திரும்ப இவரிடம் அதைச் சொன்ன போது,
ரைட்டிங்ல அதை எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியாது ஆனா, ஒரு மாடர்ன் மைண்ட் அப்படி சொல்லாதுன்னு மட்டும் தெரியறது. மன்னார்குடில பாத்துருக்கேன்.திண்ணைல ஒக்காந்துண்ட்ருக்கறவா அந்த நொண்டி வந்தானான்னு ரொம்ப சாதாராணமா கேப்பா. அத ஏதோ பேர் மாதிரி ரெஃபெர் பண்ணுவா. இது ஒரு ஃப்யூடல் மைண்டுக்குதான் சாத்தியம்.
இல்லைங்க அங்க இது சரி. அதுக்காக, நாவல்ல ஒரு கேரெக்டர் பேசறப்பவோ இல்லை ஆத்தர் நரேஷன்லயோ எழுதினதுக்காகல்லாம் ஒரு ரைட்டரை ஃப்யூடல் மண்டுன்னு ப்ராண்ட் பண்றது ரொம்ப அநியாயம்.
உங்குளுக்கு சுந்தர ராமசாமியைப் புடிக்கும் அதனால இதை ஏத்துக்க முடியலை. இதையே ஜானகிராமனும் சாதாரணமா செய்வார்னுதான் தோண்றது. இது இவாளோட லிட்ரெரி மெரிட்டைப் பத்தினதில்லை. ஆனா இவாள்ளாம் மன்னார்குடித் திண்ணைல ஒக்காந்துண்ட்ருக்கறவா மாதிரிதான். சரி இத விடுங்கோ. ஏன் இவாளுக்காக இவ்ளோ பேசறேளே! நொண்டி, ஊமைனு நீங்க கதைல எழுதுவேளா?
ஏன் எழுதி இருக்கேனே! முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்னு டைட்டிலே வெச்சிருக்கேனே!
அதான் சொல்றேன். முடவன்னுதான வெச்சிருக்கேள். நொண்டின்னு ஏன் சொல்லலை. இது பொலிடிகல் கரெக்ட்னஸ் இல்லே. சிலருக்கு அப்படி சொல்ல வாயே வராது. எங்காத்துக்காரர் ஜலம் குடிக்கறாப்ல சாதாரணமா ஊமைனு சொல்வார். மலடின்னு சொல்ல முடியும்.அந்த ஒன்றக் கண்ணுக் காரிதானேம்பார். முண்டைனு சொல்றதுக்கும் வெதவைனு சொல்றதுக்கும் வித்தியாசம் இல்லையா? ஒரு சென்ஸிடிவ் பர்ஸ்ஸனால இப்படிச் சொல்ல முடியாதுன்னு சொல்றேன் அவ்ளோதான்.
இலக்கியம் இமோஷணல் விஷயம். இண்டன்ஷனைப் பாக்காம அதை இப்படி ரேஷ்ணலா அப்ரோச் பண்றது சரியில்லை. கேரெக்டர்தான் முக்கியம் அதைத் துல்லியமாப் போர்ட்ரே பண்ண எப்படி எழுதினாலும் தப்பில்லே.
கேரெக்டர் பத்தி இல்லே. நான் சொல்றது என்னான்னு உங்குளுக்கு நன்னா புரியறது. ஆனா ஒத்துக்க முடியலை. இவாமேல இருக்கற அபிமானம் தடுக்கறது. என்ன சொன்னாலும் இது மகா மட்டமான ஆட்டிட்யூட்தான்.
அப்பிடில்லாம் இல்லே!
சரி விடுங்கோ!
*****
பேரக் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டுவிடும் சைக்கிள் ரிக்ஷாக்கார இளைஞன் எங்கே இருக்கிறான் என்பதும் அது வாடகை ரிக்ஷா என்பதும் தெரியவற எவ்வளவு பணம் இருந்தால்...
சரி வேண்டாம். 84ல் நேரில் கண்டது. கதையாக எழுத கைவசம் வைத்திருக்கும் ஏராளத்தில் ஒன்று. இங்கே சுருக்கமாகச் சொன்னால்கூட நாவலாய் புக்ஃபேரில் நாமே படிக்க நேரிடும். ஆலாய்ப் பறக்கும் விருது எழுத்தாளர்களுக்கு இருப்பது அகோரப்பசி. நாமாகப் பார்த்துத் தள்ளி நடப்பது நல்லது.
*****
*****
பரீக்ஷா நாடகத்திற்குப் பார்வையாளராய் வந்து நண்பர்களானவர்களில் முதன்மையானவர் இவரே. இரண்டாமவர் காலம் சென்ற எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்கள். பஸ் பாஸ் மட்டுமே சொத்தாயிருந்த, காசற்ற கல்லூரிக் காலப் பல மதியங்களின் உணவை, ஜம்மி பில்டிங் பின்புறம் இருந்த இவர்களின் புராதன வீட்டிலேயே உண்டிருக்கிறேன்.
இவர் ரைட் ஹானரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்களின் பேத்தி. கர்நாடகப் பாடகரும் புகழ்பெற்ற வழக்கறிஞர் வி.பி.ராமன் அவர்களின் மனைவியுமான கல்பகம் ராமன் அவர்களின் தமக்கை.
இவருக்கு, என் அம்மாவின் வயது. திருமணமான புதிதில், அம்மா என் மனைவியைப் படுத்திய படுத்தலை சமாளிக்க முடியாமல், வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப் படுத்துவதாய் போலீசில் புகார் கொடுப்பேன் என மிரட்டப்போய், அத்தை வீட்டுக்குப் போனவள், பிறகு அண்ணா நகர் குடியிருப்பிற்கு அருகிலேயே தனிக்குடித்தனம் வந்து சேர்ந்தாள். அந்த நேரம் மட்டும் அவள் சுயேட்சையாக நின்றிருந்தால் எல்லா கட்சி வேட்பாளரும் டெப்பாசிட் இழந்திருப்பார்கள். அவளது வாய் நோட்டீசிலேயே என் மானம் கப்பலேறிக் கொண்டிருந்த நேரம். என்ன இருந்தாலும் என்னைப் பெற்றவளல்லவா! என்னைப் போலவே விடாக்கண்டீ. உலகமே ஒன்று சேர்ந்து என மனைவிக்கு குற்ற உணர்ச்சியை ட்ரிப்ஸ் போல ஏற்றிக் கொண்டு இருந்த நேரம்.
பத்மினி கோபாலன் வீட்டிற்குச் சென்ற போது, அவளிடம் ரொம்ப சாதாரணமாய்ச் சொன்னர்.
வயசுலப் பெரியவாளால வளைய முடியாது. அவா இஷ்டப்படி எங்க இருக்க முடியறதோ அங்க இருந்துட்டுப் போகட்டும். அவாளுக்கும் நிம்மதி நமக்கும் நிம்மதி. உன்னால அவா போனான்னு நீ ஏன் நெனைக்கறே?
இல்லே அக்கம்பக்கத்துல இருக்கறவங்க...
அட்ஜஸ்ட் பண்ணிண்டு ஒரே ஆத்துல இருங்கோன்னு சொல்றா... அதானே?
ம்.
அவாளுக்கென்ன ஒண்ணா இருந்தாதானே ஃப்ரீயா ட்ராமா பாக்கலாம்.
*****
க்ஷணச்சித்தம் க்ஷணப்பித்தம் என்பதால் யாரையேனும் சந்தித்தால் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருப்பேன் இடவெளி விழுந்தால் மாதங்கள் சமயங்களில் வருடங்களாயும் நீண்டுவிடும். இவரைக் கடைசியாக சந்தித்தது திருச்சியில் இருந்து அம்மாவுடன் திரும்பி வந்த பிறகு. 2003ஆ 2004ஆ என்று நினைவில்லை.
இன்று காலை, சமீபத்தில் படித்து முடித்த ஜெயமோகனின் ரப்பர் நாவலின் தட்டச்சு வடிவம் இணையத்தில் எங்கேனும் கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது,
குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி (9840969940) – ஒரு அறிமுகம்) லதா ராமகிருஷ்ணன் படிக்க நேர்ந்தது.
பிறப்பையும் நிறத்தையும் வைத்து சாணி அடிப்பதையே சமூக விழிப்பின் அறிவுதீபம் ஏந்துதல் என செருக்குடன் திரியும் தீவட்டிகள் ஒருபுறம்.
’நல்ல ஜாதீல நல்ல குடும்பத்துலப் பொறந்துட்டு’ இது எப்புடி இருக்கு பாரு எனும் முதுகில் விழும் பாதுகைகள் மறுபுறம்.
எல்லாம் பாப்புலாரிட்டிக்காக அடிக்கிற ’அரசியல் சரி’ ஸ்டண்டுப்பா என்கிற எகத்தாள அறிவுஜீவிப் புறந்தள்ளல்கள் இன்னொருபுறம்
என எந்த நெருக்கடிகளுக்கும் கலங்காமல், எந்த கும்பலையும் சாராமல் முடிந்தவரைப் போராடி, தனிமனிதனாய் இருந்து சாக நினைக்கும் எவருக்கும் வாழ்க்கை இனியதுமில்லை எளியதுமில்லை ஆனால் அர்த்தபூர்வமானது - குறைந்தபட்சம் அவனுக்கு.
’நல்ல ஜாதீல நல்ல குடும்பத்துலப் பொறந்துட்டு’ இது எப்புடி இருக்கு பாரு எனும் முதுகில் விழும் பாதுகைகள் மறுபுறம்.
எல்லாம் பாப்புலாரிட்டிக்காக அடிக்கிற ’அரசியல் சரி’ ஸ்டண்டுப்பா என்கிற எகத்தாள அறிவுஜீவிப் புறந்தள்ளல்கள் இன்னொருபுறம்
என எந்த நெருக்கடிகளுக்கும் கலங்காமல், எந்த கும்பலையும் சாராமல் முடிந்தவரைப் போராடி, தனிமனிதனாய் இருந்து சாக நினைக்கும் எவருக்கும் வாழ்க்கை இனியதுமில்லை எளியதுமில்லை ஆனால் அர்த்தபூர்வமானது - குறைந்தபட்சம் அவனுக்கு.