08 June 2011

ஜெயமோகனின் எழுத்தை ஆராதிப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

தலித்துகளின் உற்ற நண்பர் என்று ஜெயமோகன் அவர்களால் பாராட்டப்படும் ஜெயமோகன் அவர்களின் ‘பல்லக்கு’ கதையை யாரேனும் தட்டச்சு செய்துதர இயலுமா?


<அதிலும் இந்த மாதிரி மாற்றுக் கருத்தைப் பீராய்ந்து அதில் தலித் விரோதத்தைக் ’கண்டுபிடித்து’ தர்மத்தின் தலைமகனாகக் கொந்தளிப்பது தமிழக நடுநிலைச் சாதிகளைச் சேர்ந்த சாதி வெறியர்கள் பல காலமாகச் செய்து வரும் ஒரு கேவலமான உத்தியே அன்றி வேறல்ல. அந்த பருப்பு,சென்ற சில வருடங்களாக வேகாமலாகி விட்டிருக்கிறது. இந்த மனிதாபிமானக் கொந்தளிப்புகளுக்குப் பின்னால் உள்ளது வெறுப்புக்குரிய சாதி வெறியும், அதிகார நோக்கும் மட்டுமே என அவர்களுக்கு இன்று தெரியும்.


ஒரு போதும் ஒரு தலித், என் வரிகளை இப்படிப் பொருள் கொள்ள மாட்டார். இன்று வரை தமிழக தலித் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் நட்புக்கும், மதிப்புக்கும் உரியவனாகவே, அந்தரங்க நண்பனாக இருந்து கொண்டிருக்கிறேன் என்பதே அதற்குச் சான்று. ஏனென்றால் நான் என்ன சொல்கிறேனோ அதுவே நான். அது முற்போக்கோ, பிற்போக்கோ ஒருபோதும் பாவனை இருக்காது. தலித் நண்பர்களைப் பொறுத்தவரை அவர்கள் அருவருப்பதே இந்த வகையான போலிக் கரிசனங்களுக்குள் இருக்கும் அரசியல் சதிகளைத்தான் என்பதைக் கண்டிருக்கிறேன்.>

<நான் தாராவியில் வாழ்ந்திருக்கிறேன். சென்னை குடிசைப் பகுதியிலும் இருந்திருக்கிறேன்.>

பழநி பிச்சை வாழ்வு. விஷ்ணுபுரத்தில் ஆன்மீகக் கச்சேரி என்று ஜெயமோகனைப்போல் இவ்வளவு சேரிகளில் வாழ்ந்த இன்னொரு தமிழ் எழுத்தாளனைப் பார்க்க இயலாது. பாடச்சேரி அப்பியின் மீது அவரது அன்புக்கண்ணீர் பெய்து சேறான கதைதான் சுஜாதாவால் சிறந்தது எனப் பாராட்டப்பட்ட பல்லக்கு கதை.

1988ல் ஜெயமோகன் எழுதிய பல்லக்கு கதையையும் இந்தக் கட்டுரையையும் அடுத்தடுத்துப் படிக்க நேர்ந்து புல்லரித்த பரவச நிலையில் இருப்பதால் என்னால் தட்டச்ச முடியவில்லை. 

வெகுஜனப் பத்திரிகைகளில் பிறந்து, ஞானசிசுவாய் இலக்கியத்திற்கு அவதரித்ததிலிருந்தே, கிறித்துவத்திற்கு மாறிய தலித்துகள் மேல் ஜெயமோகனுக்கு இருக்கும் வாஞ்சையே அலாதியானதுதான்.

ஜெயமோகன் எழுத்துக்களில் ஆர்வமிருப்போர் தட்டச்சு வடிவத்தை madrasdada@gmail.com க்கு மின்னஞ்சலில் அனுப்பவும். கைவசம் புத்தகமற்றோர் கவலைப்பட வேண்டாம். மெய்ல் முகவரி அனுப்பினால், சுகுமாரனிடம் சுட்ட 12.04.94 என்று அவரால் கையெழுத்திடப்பட்ட, திசைகளின் நடுவே புத்தகத்தின் பிரத்தியேகப் பிரதியில் இருக்கும் ’பல்லக்கு’ கதையின் ஸ்கேன் வடிவம், தட்டச்ச உதவியாய் அனுப்பி வைக்கப்படும். 

ஜெயமோகனின் எழுத்தை ஆராதிப்பவர்களுக்கு, எழுத்தெழுத்தாய் வருடிக்கொடுக்க இது ஓர் அரிய வாய்ப்பு! தவறவிடாதீர்கள்.