”தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் தனியாளுமைக்கும் எழுத்தில் உள்ள ஆளுமைக்கும் தொடர்பிருப்பதில்லை. சிறந்த உதாரணம் அசோகமித்திரன். அவருடை பேச்சில் நகைச்சுவையே இருக்காது.”
June 16th, 2011
அடப்பாவி!
லோலோவென்று கதையிலும் பேச்சிலும் கத்திக்கொண்டே இருக்கற ஆளுக்கு அசோகமித்திரனின் சன்னமான நேர்ப்பேச்சு நக்கல் பிடிபடக்கூடும் என்று எதிர்பார்ப்பது மூடநம்பிக்கை. போகவும் நாகர்கோவில்காரரான ஜெயமோகன் எவ்வளவு நேரத்தை அசோகமித்திரனுடன் உரையாடி செலவிட்டிருக்க முடியும்? அதுவும் போக நம் பேச்சே ஒன்வே ட்ராஃபிக் ஆச்சே?
எவன் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பிதற்றலாம் என்கிற இணையத்தின் சுதந்திரமும் எந்த வாந்தியையும் அபிஷேகத் தீர்த்தமாய் ஆரவாரித்து உறிஞ்சி உச்சியில் தடவிக் கொள்ள பெருங்கூட்டம் திரண்டு நிற்பதான பாவனைத் தோற்றத்தை உருவாக்கி அதில் பெருகிற சுய மயக்கத்தின் கிறக்கமுமே இப்படியான உளறல்களுக்கெல்லாம் காரணம்.
*****
80களின் ஆரம்பத்தில்
நான்: (கொதித்தபடி) *****நடந்த மீட்டிங்குல *****(வெகுஜன அச்சுபிச்சு முற்போக்கு எழுத்தாளர்) உங்களை மாதிரி கலைகலைக்காக எழுத்தாளர்களை ஒதைக்கணும்னு சொன்னார்.
அமி: ஆமா அவர் ஸ்கூல்ல படிக்கறச்சையே ஃபுட்பால் நன்னா வெளையாடுவார். அந்த பலம் இன்னும் கால்ல அப்டியே இருக்கு. (முன்னும் பின்னும் ஆடியபடி பலத்த சிரிப்பு)
அதெல்லாம் கூட்டத்துக்காக சொல்றது. உண்மைலப் பாத்தேள்னா (ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தட்டச்சிக்கொண்டிருந்த, அரசாங்கக் காகிதங்களைக் காட்டி) இதெல்லாம் அவர் நெனச்சா யாருக்கு வேணும்னா அசைன்மெண்டாக் குடுக்கலாம். ஆனா எனக்குக் குடுத்துருக்கார்?
*****
இரண்டாயிரங்களிலாக இருக்க வேண்டும்
மோட்டார் பைக்கில் அழைத்துப் போக அவர் வீட்டிற்கு வந்த கடற்கரையிடம்,பைக்கில் ஏறும் முன்னால் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்டமுறை,
பைக் நன்னா இருக்கு. நீங்க நன்னாவும் ஓட்டுவேள் இல்லையா? பத்திரமா கூட்டிண்டு போய் சேத்துடுவேள்தானே!
என்கிறவிதமாக அசோகமித்திரன் படுத்திய பாட்டை அப்படியே நடித்துக் காட்டி கூட்டமே வயிறுவலிக்க சிரித்து, கடைசியில் தெருவோர நாடோடிகள் விற்ற, தமக்குத் தேவையேப் படாத பொம்மை ஒன்றைத் தான் வாங்க நேர்ந்த காரணத்தைச் சொல்ல அதுவரை சிரித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் குறிப்பாக அம்பை நெகிழ்ந்து கண்கலங்கிவிட்டார் - கூட்டத்தில் பங்கேற்ற சுகுமாரன் சிலகாலம் முன் கூறியது. புத்தகக் கண்காட்சியில் இவர்தான் கடற்கரை என்று அறிமுகப் படுத்தப்பட்டபோது பொறாமையுடன் முதலில் என் நினைவில் எழுந்ததே இந்த சம்பவம்தான்.
திலீப்குமாருக்கு வழங்கப்பட்ட விளக்கு விருது விழாவில் அசோகமித்திரன் பேசப்பேச முதல் வரிசையில் இருந்தவர்கள் குறிப்பாக நான் குதூகலித்தது கூட்டத்தின் பின்வரிசையில் இருந்தோரை மட்டுமின்றி அருகிலிருந்த ரவிக்குமாரையும் சரியாகப் பதிவு செய்யமுடியாதவாறு படுத்திவிட்டது.
அன்று அசோகமித்திரன் பேசத்தொடங்கிய முதல் நொடியே இருபத்து ஐந்துவருட இடைவெளியைக் கடந்து, தாமோதர ரெட்டித் தெருவில் இருந்த அவர் வீட்டுக் கீக்கிடமான நடையில் இருக்கும் பழைய மர நாற்காலியில் கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டது.
*****
<நான் அசோகமித்திரன்னை முதலில் சந்தித்தது அவரது சொந்தவீடான தாமோதரரெட்டிசாலை வீட்டில்தான். பழைய ஓட்டுவீடு. அசோகமித்திரன் அவர் அப்பாவை இழந்து சிறுவனாக குடும்பத்துடன் சென்னைக்கு வந்து பல இடங்களில் வாடகைவீடுகளில் தங்கியிருந்து பின்னர் வாங்கிய வீடு. நானும் ஆராவமுதன் என்ற நண்பரும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். வீட்டுமுன் திண்ணையில் வேட்டிமட்டும் கட்டி நின்றிருந்தார். ”என்னத்துக்காக பாக்கணும்?” என்றார். ”நாங்க உங்க வாசகர்கள்”
‘அதுக்காக?’ என்ற பாவனை அசோகமித்திரன் முகத்தில் தெரிந்தது. ”இங்கேயே ஒக்காந்து பேஷலாமே…உள்ளேயெல்லாம் ஒரே நெரிசல்” என்று முற்றத்திலேயே அமர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பாராட்டு, வியப்பு, இலக்கியக் கருத்துக்கள் எதையுமே அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. பத்து நிமிடம் கழிந்ததும் ”சரி கிளம்புங்கோ” என்று சொல்லிவிட்டார்.>
அசோகமித்திரன் சந்திப்பு (ஜெயமோகன்)
November 5th, 2008
<வீட்டுமுன் திண்ணையில் வேட்டிமட்டும் கட்டி நின்றிருந்தார்>
இதைப் படித்ததும் எனக்கு ஒரே ஆச்சரியம். அசோகமித்திரன் அவர்களின் தாமோதர ரெட்டி தெரு வீட்டில் திண்ணையா? கல்லூரிப் பரீக்ஷா நாட்களில் தொடங்கி 1984-85 வரை பல மதியங்களைக் கழித்த ’நடை’ ஆயிற்றே. அந்த வீட்டிற்கு ஏது திண்ணை?
சுண்ணாம்பு காணாத வெளி மதிலுக்கு இருந்த இரும்பு பட்டைத் தலைக் கொக்கியைக் கொண்ட (மரக் கட்டைகளால் ஆன?) கதவைத் தாண்டி உள்ளே கால்வைத்தால் பிரதான வீட்டின் இரண்டு மூன்று படிகளை இணைக்கும் ஏழு எட்டு அடி நீள சிமெண்டுப் பாதை. பாதையின் இருபுறமும் கொஞ்சமாய் பூச்செடிகள். பாதிக்கு மரத்திலும் மீதிக்கு சட்டத்திற்கு இடையில் நீளவாட்டில் இரும்புக் கம்பிகளுமாய் செருகப்பட்ட, வெயிலில் நீலச்சாயம் வெளுத்த மரக்கதவு. அந்தக் கதவின் காலடியில் இருந்த இரண்டு மூன்று படிகளை ஒட்டி பக்கவாட்டில் ஒரு அடி அகலத்தில் பெஞ்சுபோல சுவரோடு பொறுத்தப்பட்டக் கடப்பைக் கல்(?)தானே உண்டு! திண்னை எங்கே?
<வீட்டுமுன் திண்ணையில் வேட்டிமட்டும் கட்டி நின்றிருந்தார்>
அதுவும் போக குழந்தை என்றால் சரி. வளர்ந்த மனிதர் திண்ணைமேல் நின்றிருந்தார் என்றால்? ஒருவேளை அசோகமித்திரனுடன் நாம் நேரடித் தொடர்பில் இல்லாத பிற்காலத்தில் கட்டியிருப்பாரோ என்கிற குழப்பத்தில் ஞாநிக்கு ஃபோன் அடித்தேன்.
அது திண்ணை இல்ல மாமல்லன். வெளி கேட்டைத் தாண்டி உள்ள வந்தா....பெஞ்சுபோல இத்தினியூண்டு சரியா ஒக்காரக் கூட முடியாதபடி நீளமா இருக்குமே...
முதல் சந்திப்பில் பார்த்த கல்பெஞ்சு திண்ணையாகத் தெரிகிற நுண்மையான கவனிப்பு. சூரியனுக்குக் கீழே உள்ள சகலத்தைப் பற்றியும் கருத்து சொல்ல வல்ல, தமிழின் ஒரே எழுத்தாளரும் அசோகமித்திரனின் பால்யகால அத்யந்த சிநேகிதருமான ஜெயமோகனே அவரது நகைச்சுவைக்கும் சான்றிதழ் வழங்கத் தகுதி வாய்ந்த தாஸில்தார்.
*****
சமீப காலத்தில் மிகவும் உடம்பு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்தேறி வீடு வந்த அசோகமித்திரனுடன் ஒரு தொலைபேசி உரையாடல். அநேகமாக காலச்சுவடு தேவிபாரதியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
சார் எப்படி இருக்கீங்க. உங்களை வந்து பாக்கலம்னுட்டு இருக்கோம். வரலாமா?
ஏன் உங்குளுக்கு உடம்பு செளக்கியமில்லையா?
*****
சமீப காலத்தில் மிகவும் உடம்பு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்தேறி வீடு வந்த அசோகமித்திரனுடன் ஒரு தொலைபேசி உரையாடல். அநேகமாக காலச்சுவடு தேவிபாரதியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
சார் எப்படி இருக்கீங்க. உங்களை வந்து பாக்கலம்னுட்டு இருக்கோம். வரலாமா?
ஏன் உங்குளுக்கு உடம்பு செளக்கியமில்லையா?