22 June 2011

மூன்று கவிதைகள்

வழி

ஊழல் பேர்வழிகளை
உள்ளே தள்ளு
சட்டமும் சமூகமும்
வாழ வேண்டாமா?

செய்பவன் சிக்க வில்லையா?
ஊழலைச் செய்யவை
வசமாகச் சிக்கவை

தார்மீகப் பிரச்சனையா?
கவலைப் படாதே
இருக்கவே இருக்கு
தமிழ் வேதம்

”பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்நத
நன்மை பயக்கும் எனின்” - நமக்கு


தரிசனம்

சாமி கும்பிடப் போனேன்
சட்டையைக் கழற்றென்று
தடுத்தது தட்டி.

நின்ற இடத்தில் இருந்தே
தெண்டனிட்டேன்,
இடையில் தரிசனம் தந்த
சுவாமிகளின்
புட்டங்களுக்கும் சேர்த்து.


குருமா

பொறுக்கித் தின்னும்
கிழட்டுச் சேவல்
விசிறப்பட்ட தானியத்தின்
புதுமினுக்கைப் பார்த்துத்
தாவியதில்
தடுமாறி விழுந்த இடம்
கொதித்துக் கொண்டிருந்த குருமா.

கொட்டைக்கும் பெட்டைக்கும்
ஒரே கொதி.