ஆத்மாவை சுத்தி கரித்தால்தான் ஏடிஎம்மிலிருந்து டாலராக எடுக்கலாம்.
பெரும்பாலும், புரட்சி என்று உட்கார்ந்த நாற்காலியில் இருந்தே புட்டத்தைத் தூக்குவதன் காரணம் வசதியாக வாழ்வதன் குற்ற உணர்வுதான்.
ஐயோ பாவம் ஏழை என்று சில எழுத்துகளை இலவசமாய்க் கிடைக்கும் இணையத்தில் வீசினால் போச்சு குற்ற உணர்வைத் தலைமுழுகி ஆச்சு.
மேலே மேலே போவது, ஆவியா? ஆன்மீக விடுதலையா? உச்சிக்குச் சென்று தலைகுப்புற குதி. நிச்சயமாய் விடுதலை கிடைக்கும் - உன்னிலிருந்து உனக்கும் உலகுக்கும்.
ஆபாசம் என்பது துணியவிழ்த்துக் காட்டுவது இல்லை. ஆசாபாசம் என்று முகத்திற்கு எதிரில் இளித்து முதுகு மறைந்ததும் வெறுப்புடன் முணுமுணுப்பதுதான் உண்மையான ஆபாசம்.
பொதுவாக மனிதர்களைப் பிடிக்காதவர்களே மனிதத்தைப் பற்றி ஓயாமல் போதிக்கிறார்கள்.
ஆன்மீகத்தின் உச்சம் அதைப் ’பற்றி’ப் பேசுவதல்ல. எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளமல், பேசாதிருப்பது.
பெயரை பிம்பமாக்கத்தான் எத்துனைப் பிரயத்தனம்.
ஆன்மா அழியாதுதானே அப்புறம் ஏன் அதன் விடுதலை பற்றி இத்துனை அலப்பறை? அழுகிவிடாது, சும்மா ஆணியில் மாட்டி வை.
எழுதுகிறபடி எல்லாம் வாழ முடிவதில்லை. வாழ முடிந்தவனுக்கெல்லாம் எழுதும் வேட்கை இல்லை.
கேட்டதெல்லாம் கொடுக்க இதென்ன கிட்டங்கியா? கொடுப்பதில் பிடிக்காததைப் புறக்கணி!