20 July 2011

கோயிலை இடிக்கறதுங்கறது...

 rozavasanth 

@ 
பொதுவாகவே ஒன்பது மணிக்கே சூரியனைக் காண்பவன். ஞாயிறு எனில் காலைக் காப்பியே மதியம் ஒரு மணிக்குத்தான். ஆகையால் திரைப்பட சங்கக் காட்சிகள் இருந்தால் தவிர ஞாயிறு பகல் ட்ரைவ்-இன்னுக்கானது அல்ல. 

நன்றாக நினைவிருக்கிறது. அதிசயமாய், டிசம்பர் 6 1992 அன்று எதற்கென்றே தெரியாமல் ’சீக்கிரமாய்’ எழுந்து வீட்டைவிட்டுக் கிளம்பி, ட்ரைவ்-இன் வந்து எட்டிப் பார்த்தால் நட்பு வட்டார ஈ காக்காய் காணாமல் இருக்கவே, எம்80யில், பதினோரு பதினொன்றரைமணி வாக்கில் ட்ரைவ்-இன் நண்பன் ஒருவனின் பெட்டிக்கடைக்கு - சுவாகத் ஓட்டல் வளாகத்தில் இன்னமும் இருக்கும் பெட்டிக்கடைக்கு வந்து சேர்ந்தேன். ஏற்கெனவே அங்கு ஜமா களைகட்டி இருந்தது. எல்லோரும் வயதில் எனக்கு ஐந்தாறு வருடங்களாவது இளையவர்கள். பார்வைக்கு ஒல்லியான பல்லிபோல் இருந்தாலும் என்னை எல்லோருமே சார் அடைமொழியியேலே அழைத்துவந்தனர். எல்லோரும் பிராமணப் பையன்கள். வாயைத் திறக்காதவரை கம்யூனிட்டி  சர்ட்டிஃபிகேட்டில் எந்தக் குழப்பமும் இல்லை. எல்லோருமே அக்னிஹோத்ரர்கள். சந்தியாக்காலம் ஆனால் ஏதாவது ஓரிடத்தில் தவறாமல் சந்தி செய்யக் கூடியவர்கள். என்ன, பஞ்சோத்ரை உத்தரிணி ஜலத்திற்கு பதிலாய் பாட்டிலும் கிளாஸுமாய் தீர்த்தவாரி. அதில் ஓரிருவர் சொண்டி சோறு கூட ருசி பார்த்தவர்கள். 

எல்லோருமே பரபரத்த உற்சாகத்தில் இருந்தனர். 

சார் அடிச்சி நொருக்கிட்டாங்க சார்.

தரை மட்டம்.

ஓத்தா காலி. ஒரு கல்லுகூட முழுசாத் தேறாது.

முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகுதான் உறைத்தது. மசூதி இடிப்பு. உடைத்தே விட்டார்களா? நிஜமாகவே தரைமட்டமாக்கிவிட்டார்களா?மெட்ராஸ் சண்டை போல வெற்றுச் சவடாலாக மட்டுமே படம் ஓட்டுவார்கள் என்று உதட்டுச் சுழிப்புடன் ஜடாமுடி சங்கமத்தைப் பல நாட்களாய்ப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பயங்கரமான அதிர்ச்சி. மரத்துப் போன உணர்வுடன் சும்மா உட்கார்ந்திருந்தேன். 

என் மெளனம் கண்டு ஓரிருவர் எப்படிக் கடிப்பானோ என்று அமைதியாயினர். சினிமா இடைவேளையிலேயே தன் அபிப்ராயம் கூறாமல் பரபரத்து அடுத்தவன் முகம் பார்த்து அபிப்ராய சாயல் கண்டுகொண்டு, சொல்பவனுக்கு ஆதரவு அதிகமா குறைவா என சீர்தூக்கி அதன்படி ஒட்டியோ வெட்டியோ பேசும் அந்தப் பெட்டிக் கடைக்காரன், பீடா மடித்து அடுக்கியபடி சுறுமுற்றும் பார்த்து என் முகத்தில் வந்து நிற்பதை உணர்ந்தேன்.

கோத்தா நாடு நாஸ்தியாவப்போவுது.

சார் சும்மா உடாதீங்க. எழுத்தாளர்னாலே முற்போக்காக் கம்யூனிஸ்டு மாதிரி பேசணுமா. உண்மையிலேயே எவ்ளோ பெரிய விஷயம் நடந்துருக்குது...ஆயிரம் வருஷத்து அவமானம் சார்...

ஏன்யா நீ திமுககாரன்னு வேற சொல்லிக்கற, உன்னால எப்பிடிய்யா இதைப்போயிக் கொண்டாட முடியுது? 

சார் நாங்கள்ளாம் திமுகவுல இருக்கற ஆர்.எஸ்.எஸ்காரங்க. தலைவர் ஓட்டுக்காக அப்பப்ப எதுனா பேசுவாரு. அதெல்லாம் கண்டுக்கறதா?

யோவ் இதோட விளைவுகள் எதிர்காலத்துல எப்பிடி இருக்கும்னு தெரியுமா?

சார் சொம்மா மைனரிட்டி மைனாரிட்டின்னு பம்மிகினேக் கெடக்கணுமா? இது இந்து நாடு. மத்தவந்தான் இனிமேல பயப்படணும் நாம இல்லே. 

இது சரி இல்லை. மகாக் கேவலமான விஷயம். சரி இதைப் பத்திப் பேசினா ரசாபாசமாகும். வாய்லவந்ததைப் பேசிட்டு வருத்தப்படறாமாதிரி ஆயிடும் வேணாம்.

விதியிடம் விழுந்திருந்த நம்பிக்கை கடவுளிடம் வந்திராத காலம். கடவுள் நம்பிக்கைக்கும் மசூதி இடிப்புக்கும் சம்பந்தமில்லை என்பதாகவே இருந்தது என் நினைப்பு. இது ஏட்டிக்குப் போட்டி. சீண்டிவிட்டு சீறிக் காட்டுதல். வஸ்தாத்து மனப்பான்மை. கண்னாடியில் முண்டாதட்டிக் களித்தல்.

அங்கிருந்து கிளம்பி, எதிர் விவாதம் செய்து கொண்டிருந்தவனின் வீட்டிற்கு மதியச் சாப்பாட்டிற்குப் போனோம்.

ஹாலில் உட்கார்ந்திருந்த நண்பனின் அம்மா, ஐய்யங்கார் மாமி, என் முகம் பார்த்ததும் சொன்ன வார்த்தைகள்,

என்ன சார் இது. என்னதான் சொன்னாலும் இது தப்பு சார். யாரா இருந்தாலும், அவாளோடக் கோவில் அது. கோயிலை இடிக்கறதுங்கறது சாமி கும்புட்றவன் செய்யற காரியம் இல்லை. என்ன சொல்றீங்க?