உங்கள் கவிதை மொழிபெயர்ப்புக்கு ஒரு கமெண்ட் எழுதினாலும் எழுதினேன் என் தகவல் பெட்டி நிரம்பி வழிகிறது. 'மாம்ஸ்' என்கிறார்கள், 'இன்னாம்மே' என்கிறார்கள் இதுவெல்லாமாவது பரவாயில்லை, ஆனால் 'தல' என்னும்போதும் 'பிரிச்சி மேஞ்சிட்டேங்க' 'சான்ஸே இல்ல' என்று உரையாடும்போதும் என் கண்களில் நீர் மல்கிவிடுகிறது. 'பார்ட்டி' என்று அழைத்துவிட்டால் கதறியே அழுதுவிடுகிறேன். உரையாடல்களின் சாரத்தை உங்களுக்கு சொல்லாவிட்டால் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும் போலிருக்கிறது. சாராம்சம் இதோ:
ஞானப்பழம் என்ற அடைமொழி எனக்குக் கொஞ்சமும் பொருந்தாதாம். நம் காலத்தின் ஞானப்பழம் ஜெயமோகன் மட்டும்தானாம். நான் வேண்டுமானால் 'சைவ மடம்' 'ஸ்ரீலஸ்ரீ' போன்ற அடைமொழிகளை தாங்கிக்கொள்ளலாமாம். கார்க்கி தமிழில் கொல்லப்படுவதற்கு முன்பு கடைசியாக ஞானப்பழத்தின் தளத்தில்தான் காணப்பட்டார் என்பதும் சைவக்கொக்கு கொத்தியதால்தான் செகாவ் மரணமடைந்தார் என்பதும் இவ்வாறாகவே பேயோன் இவர்களின் மரணங்களை துப்பறியக் கிளம்பியிருக்கிறார் என்பதும் இவர்களின் கூரிய அவதானியான உங்களுக்கு நன்றாகத் தெரியுமாம். இருந்தும் ஹோமரும் இலியடும் ஞானப்பழத்தின் தளத்தில் கதகளி ஆடுவதையும், பிரியன் லாரா கம்பராமாயணத்தில் காப்பிய நாயகனாவதையும் சப்புக்கொட்டி ரசிக்கவே துப்பை திசை திருப்பும் முயற்சியாக நான்தான் பேயோன் என்ற பெயரில் எழுதுவதாக நீங்கள் சொல்லிவருகிறீர்களாம். சரி, தப்பிச்சென்று, தாம்பரத்தில் போய் பனிச்சருக்கு விளையாடி வரலாமென்றால் (சார்ல்ஸ் ஃபூயூக்கொவ்ஸ்கி மைலாப்பூரில் அகத்தி கீரைக்கட்டை வாங்கிக்கொண்டு, நௌலி செய்தபடியே, பொடி நடையாய் ராயர் கபேயை நோக்கிப் போய் கொண்டிருப்பது சாத்தியமானால், தாம்பரத்தில் பனிச்சருக்கு விளையாடுவதா பெரிய விஷயம்?) சாத்தான் வேறு டிவிட்டரில் பின் தொடர்கிறார். ஐயா, நான் என்னதான் செய்வேன்?
இதையெல்லாம் உங்களுக்கு எழுதுவதால் என் மேல் கோபித்துவிடாதீர்கள். நீங்கள் வரி ஏய்ப்பு இலக்கிய விமர்சனத்தில் (வரி= Tax இல்லை Sentence) வல்லவர் என்பதையும் நீங்கள் அதை உங்கள் அலுவலகமான வரி விதிப்புத் துறையில்தான் (வரி= Sentence இல்லை Tax) கற்றுகொண்டீர்கள் என்பதையும் உங்களிடம் ஸ்கேன்னர், நாட்காட்டி, ஸ்க்ரீன் ஷாட், i.p. address போன்ற பயங்கரமான ஆயுதங்கள் உள்ளன என்றும் நான் அறிந்து பயந்தே இருக்கிறேன். உங்களிடம் என் வேண்டுகோளெல்லாம் என்னை என் பெயரிலேயே இருக்க விடுங்கள்.
55 minutes ago
55 minutes ago