10 July 2011

முடிச்சு

நீளமாய் இருந்த நூலில்
முடிச்சு போட்டு வளையமாக்கினான்.
பையனின்
இரண்டு கை விரல்களிலும்
குறுக்குமறுக்காய் மாட்டிவிட்டு,
விளையாட்டின் விதிகளையும்
சொல்லிக் கொடுத்தான்
அப்பன்காரன்.

விளையாடத் தொடங்கிய
கொஞ்ச நேரத்திலேயே
சிடுக்காக்கிக் கொண்டான் சிறுவன்.

அப்பனில்லை,
அவனுடைய அப்பனாலும்
அவிழ்க்க முடியாதபடிக்கு
விழுந்திருந்தது சிடுக்கு.

எனினும்,
எதுவுமே நடக்காததுபோல்
புதிய நூலெடுத்து முடிச்சு போட்டு
மகனுக்கு
மாட்டிவிட்டுக்கொண்டிருந்தான்
சிறுவனாய் இருந்த அப்பன்.