இயற்கையின் காவியம் பதிவை ஃபேஸ்புக் தனிச்செய்தியில் பாராட்டி இருந்தீர்கள். கூகுள்+ஸில் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். நன்றி.
உங்களை ஒருமுறை ட்ரைவ்-இன் உட்லண்ட்ஸில் சந்தித்ததாக நினைவு. விமர்சனத்தை சாட்டையாக்கியப் பெரியவர் கூட அங்கு இருந்தார். உங்களிடம் உயிர்த்தெழுதல் புத்தகம் கொடுத்ததாகக் கூட நினவு?
குறுங்குழுபாற்பட்ட குற்றிலக்கியமானது, எழுதி சொந்தமாய்ப் பதிப்பித்த புத்தகத்தை விசிட்டிங் கார்டு போல விநியோகித்தாலும் குறையவேக் குறையாத செல்வம்.
94ல் எழுதுவதை நிறுத்திக்கொண்டு, எழுத்துலகில் இயங்காத காலகட்டத்தில் ஒரு நாள் ட்ரைவ்-இன் வாயிலில் சந்திக்க நேர்ந்த இலக்கிய நண்பர், தமது நண்பருக்காய்க் காத்திருப்பதாகச் சொன்னார். சரி பார்க்கலாம் எனச்சொல்லி என் மேஜை நோக்கி நடந்தேன்.
தலையுருட்டி அரட்டைக் கச்சேரிக்கு, நிரந்தர அங்கத்தினர்களை எதிர்நோக்கிக் காப்பியின் ஆவியாய்க் கரைந்துகொண்டிருந்தது காலம். உங்களை நடுநாயகமாய்க் கொண்டு செல்ஃப் சர்வீஸில் வந்து அமர்ந்தது ஒரு கூட்டம். கூட்டத்தில் தனித்துத் தெரிந்தார் விமர்சக விளாசல். அவரைப் பார்த்து நலம் விசாரிக்க வந்தவன், அறிந்த முகம்போல் தெரிந்தவரிடம், பிரமுகர் யாரெனக் கேட்டேன். அப்போதுதான் உங்கள் பெயரை முதன்முறையாகக் கேள்விப்பட்டேன். வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்கள். சுய அறிமுகம் செய்துகொண்டு, தற்செயலாய்க் கைவசம் இருந்த உயிர்த்தெழுதல் புத்தகத்தைக் கொடுத்ததாகக்கூட நினவு.
அடுத்த பிறவிக்கு முன்பதிவு செய்திருக்கும் வெளிநாட்டுப் பயண பாக்கியத்தைப் புத்தகமேனும் இப்பிறவியிலேயே அடையட்டும் என்பதுதான் எழுத்தாளனாய் உணரும் எவனுடையதுமான எளிய கனவு.
எழுத்தாளனின் இலக்கிய இடம் அவன் வசிக்கும் இடத்தால் தீர்மானிக்கப்படும் குபேர யுகம்.
பிறகொருநாள் சந்திக்க நேர்ந்தபோது, ’நண்பருக்காய்க் காத்திருந்த நண்பரிடம்’ - எழுதுவது இல்லை என்பதால் எழுதியது இல்லை என்று ஆகிவிடுமா அல்லது அவன் எழுத்தாளன் இல்லை என்றுதான் ஆகிவிடுமா? அல்லது வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவருடன் சந்திப்பு எனச் சொன்னால் நான் அங்கு வந்தால் ரசாபாசம் ஆகிவிடக்கூடும் என்கிற அச்சமா?’ - எனக் கோபித்துக் கொண்டபோது, எழுத்தாளருக்கான கூட்டம் இருந்ததைச் சொல்லாமல் மறைத்தது தவறுதான் என வருத்தம் தெரிவித்தார்.
எதைப் பற்றியும் கவலைப்படாதவன் என்று என்னைப் பற்றி நினத்துக்கொண்டு வாழ ஆசைப்படும் எனக்கும் கூட அந்தப் புறக்கணிப்பு வலித்தது. எழுதுவது, குற்றுயிரும் குலையுயிருமாக இழுக்கப் பறிக்கக் கிடந்தாலும் இலக்கிய உலகில் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை அந்நிகழ்ச்சி கூறியது என்றாலும் என் போக்கில் வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்பதுதான் என் பிடிவாதம்.
1983ல் புது தில்லியில் ஒரு முறையும், 85ஆக இருக்கலாமோ என்னவோ திருவல்லிக்கேணி கூட்டத்தில் ஒரு முறையும் விவியை நேரடியாக சந்தித்திருக்கிறேன். அந்த சந்திப்பில் யு.ஸ்ரீனிவாசின் கச்சேரி கிடைக்குமாவென யாரிடமோ அவர் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழ, உற்சாகத்துடன் நான் முயல்வதாய்க் கூறினேன். விமர்சன விளாசலின் பல கட்டுரைகளில் ஞானஸ்நானம் அடைந்ததற்குக் கைமாறு செய்ய ஒரு தருணம் வாய்த்ததன் புளகாங்கிதம் மயிர்க்கால்களில். ஆப்த நண்பனின் அத்யந்த நண்பன் சிறு பிராயத்தில் மாண்டலின் வாசித்ததாகவும் பிரேமையில் யு.ஸ்ரீயின் ஒரு கச்சேரி விடாமல் ஒலிநாடாவாக்கி வைத்திருப்பதாகவும் எப்போதோ கேட்ட ஒட்டு, வேர்விட்டுக் கிளை பரப்பி சைக்கிளில் சாடி காற்றைக்கிழித்து ஓட்டவைத்தது. விமர்சன விளாசலுக்காக வேண்டி என்றதும் அவனும் குஷியாகி நண்பனுக்குத் தொலைபேச அவன் மூன்று நான்கு நாடாக்களை மறுநாளே தனது நந்தனம் அலுவலகத்தில் கையளித்தான். ஓடோடி அவர் தங்கி இருந்த திருவல்லிக்கேணி ஒண்டுக் குடித்தன வீட்டில் சேர்த்தேன். விவிக்கு பரம சந்தோஷம். எப்படித்தான் நன்றி தெரிவிப்பதென நெகிழ்ந்தார்.
இப்படியாக, மிகக் குறைந்த நேரடிப்பரிச்சயமே கொண்டிருந்த விவி, நீங்கள் உட்கார்ந்திருந்த ட்ரைவ்-இன்னின் காப்பிக்கொட்டை நிற மேஜையைச் சுற்றி இருந்த முகமறியா நாற்காலி வட்டத்தைத் தாண்டி ஓரமாய் அமர்ந்திருக்கையில், வணக்கத்துடன் அருகில் சென்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். முகமலர்ந்து அமரவைத்தார். “என்ன இப்பல்லாம் எழுதறதே இல்ல போலிருக்கே, ஆதிமூலம் படம் போட்டது மட்டும்தான் என்கிட்ட இருக்கு” எனக் கூறித் தோளில் கைபோட்டு, மடிப்பாக்கம் முகவரியும் தொலைபேசி எண்ணும் கொடுத்தார். கனகாரியமாய் அவரது இல்லத்தில் அடுத்த நாள் போய் நின்றது டிவிஎஸ் விக்டர். ஆரம்ப விசிட்டிங் கார்டையே பாதுகாப்பாய் வைத்திருந்தவரிடம் பின்னிரண்டும் கொடுத்தேன்.
இரண்டு மூன்று வருடம் முன்பாக இருக்கலாம். இவர் வீட்டில் ஒலிக்கும் இசை என்றேனும் ஒருநாள் நம் வீட்டில் ஒலிக்காதா? இவரது பதிப்பகத்தில் நம் புத்தகம் வெளிவ்ராதா என ஏங்க வைத்த நட்சத்திர இலக்கியப் பதிப்பாளரிடம் இருந்து ஒலித்தது கைபேசி அழைப்பு.
என்ன மாமல்லன் இந்த ஒலகத்துலதான் இருக்கீங்களா? நாங்கள்ளாம் இன்னும் இலக்கியத்தோடதான் மாரடிச்சிகிட்டு இருக்கோம். எங்க ஷோரூம் இப்ப திருவான்மியூர்லதான் இருக்கு. வந்துட்டுப் போறது. அப்பறம் விவி வாண்ட்ஸ் டு டாக் டு யூ. இது அவரோட நம்பர்.
வணக்கம். மாமல்லன் பேசறேன்.
எப்படி இருக்கீங்க? சாகித்திய அகாதெமிக்கு சில கதைகள் செலக்ட் பண்ன வேண்டி இருந்துது. அதுல உம்முதும் ஒண்ணு. ஆனா எடம்பத்தலேன்னோ என்னவோ கட் பண்ன வேண்டி வந்ததுல உம்ம கதை போயிடுச்சி. கொழந்தை அழுமேன்னு சொல்லிட்டேன். அடுத்து அஞ்சு வருஷம் கழிச்சு நானும் உசுரோட இருந்து சகித்திய அகாதெமியும் என்கிட்டியே பொறுப்பை ஒப்படைச்சா பார்க்கலாம்.
ஹிஹி என்னங்க இது தேர்வு செய்யப்பட்டதும் நீக்கப்பட்டதும் இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும். இத்துனை வருஷம் கழிச்சும் என் பேரும் கதையும் உங்க நினைவுல இருக்கே அது போதாதா.
சமீபத்தில் அவருக்கான விழா முடிந்து சந்தித்தபோது, இன்னார் எனச் சொல்லிக் கைநீட்டியக்கால்,
என்னைய்யா எப்படி இருக்கீங்க? பேரச் சொன்னாதான் தெரியுமா? அதான் பாத்தாலே தெரியறதே. தாடி இல்லாட்டா அடையாளம் தெரியாதா என்ன?
ட்ரைவ்-இன்ல, மடிப்பாக்கம் வீட்டுலக்கூடப் பாத்துருக்கேன். அப்பவும் தாடி இல்லே!
அது நெனவில்லே, ஆனா டெல்லிலப் பாத்தது நெனவிருக்கு.
இது நடந்தே ஏழெட்டு வருடங்கள் இருக்குமோ என்னவோ. மின்னித் தெறித்த ட்ரைவ்-இன் சந்திப்பில் பார்த்த என்னை மறந்திருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் அன்று நான் கொடுத்த விசிட்டிங் கார்டு பத்திரமாய் இருக்கிறதா? ஏனெனில் அதுதான் நான்.