15 July 2011

அடுத்து ஒரு விண்ணப்பம்

fromparthasarathi.jayabalan@*****
tomadrasdada@gmail.com
dateThu, Jul 14, 2011 at 12:12 PM
subjectRE: ழார் பத்தாயின் குதிரை
mailed-by*****
hide details 12:12 PM (20 hours ago)
மாமல்லன் சார் - நன்றி என்று ஒரு வார்த்தை சொல்வது பொருத்தமாக இராது.


'சிறு குறிப்புடன்' என்று தான் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் எழுதியதைப் படித்ததும் சட்டென்று கண்களில் நீர் திரண்டு விட்டது. அதீதம் என்று நினைக்க வேண்டாம். நான் சற்று மிகையாகவே உணர்ச்சி வசப்படுவேன்.அது என் இயல்பு.

முளைத்து மூன்று இலை விட்டது என்று கூட என்னைச் சொல்ல முடியாது. இன்னும் முளைப்பதற்காக பூமியை முட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் அதிகபட்சம் என்று பார்த்தால் ராணி,வாரமலர் கதைகளைப் படிப்பவர்கள். அதுவுமே அதிகம். நான் கதையென்று எழுதி யாரிடமாவது காட்டினால் படித்து விட்டு 'நல்லாருக்கு' என்பதோடு முடித்துக் கொள்வார்கள். மிகுந்த அலுப்பாக இருக்கும்.

எத்தனை பெரிய எழுத்தாளர்களுக்கு , ஒரு சிறுவனின் கதையை தங்கள் தளத்தில் பதிந்து , அந்தக் கதையை ஆராய்ந்து அறிவுரை சொல்லி, தெம்பூட்டுவதற்கு மனசு வரும் சார்.

கற்சிலையைப் பார்க்க முடியாத நந்தனுக்கு கடவுள் வந்து காட்சி தந்தது போல் இருந்தது உங்கள் வரிகள்.

அதீதம் என்று நினைக்க வேண்டாம். முட்டிக் கொண்டே இருப்பேன், 'கதையென்றால் இது' என்று நீங்கள் பாராட்டும் வண்ணம் ஒரு கதை எழுதும் வரை.

நன்றியுடன்
பார்த்தசாரதி ஜெயபாலன்

*****

பார்த்தசாரதி ஜெயபாலன்,

ரொம்ப அழுதால் ஜலதோஷம் பிடித்து, சைனஸ் வரக்கூடிய அபாயம்கூட உள்ளது. எதாவது ஒரு வியாதி பீடித்தால்தான் எழுத்தாளன் என்கிற அளவிற்கு இங்கு ஏகப்பட்ட பேருக்கு விதவிதமாய் இருக்கிறது. மனரோகம் பற்றிக் கேட்கவே வேண்டாம். எழுதுவது நோய்போலத் தன்னைப் பீடித்திருப்பதாய்ப் பெருமை கொள்பவர்கள் கூட இருக்கிறார்கள். காடு விளைந்தென்ன முப்பத்தைந்து வருடங்களாய் கையும் காலும்தானே மிச்சம் என்று புலம்பிக்கொண்டே, நாற்பதாயிரம் என்கிற விலை அட்டைதொங்கக் கூலிங்கிளாஸ் அணிந்து, பிச்சை எடுத்தாவது நாய்க்குக் கறி போட்டு இலக்கியப்பணி ஆற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். கலைவெறி இயல்பாகக் கள்வெறிக்கு இட்டுச்செல்லக் கூடியது. கால ஓட்டத்தில் கலை வடிந்து கள் மட்டுமே களப்பணி என்றாகி சாக்கடையில் சாம்ராஜ்ஜியம் நடத்துபவர்களும் இருக்கிறர்கள்.

எழுத்துவெறி பிடித்து உலுக்கியதன் காரணமாய் உண்மையிலேயே வாழ்க்கையை இழந்தவர்கள் இருக்கிறார்கள். இரண்டையும் காப்பாற்றிக் கொள்வது சற்றுக் கடினம்தான் ஆனால் இயலாததல்ல.

உங்களிடம் ஒரு சிறிய கைமாறு எதிர்பார்க்கிறேன். அடுத்து நீங்கள் எழுதும் அனைத்தையும் எனக்கு அனுப்பிவிட வேண்டாம். கதைப் போட்டிகளுக்குத் நடுவராக இருப்பதற்காகவே அவதரித்திருக்கும் நாஞ்சில்நாடன் போன்ற எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கவும். எல்லோருக்கும் இன்புற ஒரு வாய்ப்பு கொடுப்பதுதானே ஜனநாயகம்.

உண்மையிலேயே நீங்கள் எழுத்தை ஆளத் தொடங்குகையில் எவரிடமும் அபிப்ராயம் கேட்கத் தேவை இருக்காது. எழுதி முடித்ததைத் தள்ளி நின்று பார்த்தால் அது போயிருக்கும் இடமும் போகவேண்டிய இடமும் அடுத்தவன் கதை போலத் துல்லியமாய்த் தெரியும். 

அடுத்து ஒரு விண்ணப்பம். நெகிழ்ச்சியைப் பிடிபிடி என வாசகர்களுக்கு விநியோகிப்பதற்காகவே வீட்டு அறையிலும் சினிமா ஆபீஸ்களிலும் இலக்கியத்தைத் தலையில் சுமந்து தேசாந்தரியாகத் திரிபவருக்கு உங்கள் சிறுகதையை அனுப்பி, அவரை நாவல் எழுத வைத்துவிட வேண்டாம் - புக்ஃபேருக்கு இன்னும் அறு மாதங்களே உள்ளன.