மின்னல்
ககனப் பறவை
நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை
கடவுள் ஊன்றும்
செங்கோல்
பேச்சு
கேள், அழகு கதைக்கிறது
பச்சைச் சதையுதடு
ரத்தப் பளபளப்பு
கண்ணின் இமைக்கரங்கள்
மெல்ல அருகழைக்கும்
பார்வைச் செவிப்பறையில்
பருவம் முரசறையும்.
பூவின் இதழ்ச்சுவருள்
வண்டுக்குரல் ஒலிகள்
மோதி மடிகிறது
முத்தத்திரை மறைவில்
பேச்சுப் புதைகிறது
ஆனால், ரத்தம் கதைக்கிறது
மவுனம் அதிர்கிறது.
திரையும் படமும்
காலம் விரித்ததிரையா?
வாழ்வு ஓடும் படமா?
தீக்கண் திறந்தால்
தீக்குத் திரையா?
படம்?
திரைதப்பித் திசையுள்
எறியப்பட்டுவிடுமா?
- தரும சிவராமு
பிரமிள் (20.04.1939 - 06.01.1997)