11 August 2011

இருமை

சந்தோஷப்பட
வாய்ப்பு கிடைப்பது
சாதாரண விஷயமில்லை

ஆசீர்வதிப்பின் அர்த்தம்
சபிக்கப்பட்டவனுக்குத்தான் புரியும்

*

இரைதேடும் வாழ்வில்
இறைதேட நேரமில்லை
நேரமொதுக்கித் தேடிப்போனாலும்

பிரார்த்தனையெல்லாம்
இரை பற்றித்தான்

*

பணம் பெரிதில்லை என்று
பணம்சேர்ந்தபின்
எவனும் சொல்லலாம்

ஆனால் 
தத்துவார்த்தமாய் சொல்லி
தாகம் தீர்த்துகொள்பவெனெல்லாம்
தடுமாறிக்கொண்டிருப்பவன்தான்

*

பணம் வாழ்க்கையில்லை
என்று போதிக்க
டிக்கெட் போடுகிறார் சாமியார்.

குற்றவுணர்வையும் ஓம் சாந்தியாய்
பண்டமாற்றிக்கொள்கிறான்
பணக்காரன்

*
தட்டுத்தடுமாறித்தான்
தெரிந்துகொள்ள முடிகிறது
ஒளி, உள்ளேதான் இருக்கிறதென்று

*

தேடப்போனவன்
தொலைந்து போனான்

*

கிட்டிய பிறகு
எதுவும் பெரிய விஷயமில்லை 
என்பது சுலபம்

ஆனால் பெரிய விஷயம் எதுவும் 
சுலபத்தில்
கிட்டிவிடுவதில்லை

*
பி.கு: கவிதை என்பதற்குக் கஷ்டமாயிருந்தால் இஷ்டப்பட்ட லேபிள் போட்டுக் கொள்ளவும்.