15 August 2011

இரண்டு கவிதைகள்

பிடி

பிடி நழுவ நீளக் காயாய்
கண்ணெதிரில் விழுந்தது ஓணான்.
கணத்தில் கடந்த
எதிர்ப்புற வாகனம் ஏற
அதற்குக் கபால மோட்சம்.

அய்யோ என்றது இதயம்
அட! நல்ல சகுனம் என
மனதிற்குள்
கணக்குபோட்டு துள்ளிற்று
கலாச்சார மூளை.

***

நோக்கு

ஐயா அம்மாவுக்கடுத்து
ரட்சிக்க வரப்போகும்
அவதாரம் எதுவென்று
மண்சோறு தின்று
மனச்சோழி உருட்டிற்று
சந்துக்குள் சம்மணமிட்ட
திராவிடக் குலக்கொழுந்து

விந்துக்குள் உயிராய்
கண்டம் கடக்கத் துடித்தது
வளரும் தலைமுறை

***