18 August 2011

நனை

நடந்து தீராத மலைத்தொடர் இருந்த ஊரில்
காற்றோடு சுழன்றடித்தது கனமழை.
மனிதர் போல் ஒதுங்க முடியா மரங்கள்
மரணகிலியில் ஓலமிட்டன.
சிலிர்த்துக் கொண்டன
ஜீவனற்றுக் கிடந்த
சாலையோரச் செடிகள்.

*

வேலையின் களைப்பு உடலை வெட்டிற்று
எனினும்
மழைமணம் சுமந்ததில் மலர்ந்தது மனம்.
கொசுறுபோல் கூடவே வந்தது
ஜலதோஷ பயம்.
நேரத்தில்,
கான்க்ரீட் கூடடையும் கவலையோடு பறக்க,
வண்டிவிட்டு வண்டி தாவியதில்
தொலைக்க நேர்ந்தது மலர்ந்த கணம்

*

பைநனையும் கவலையற்ற பள்ளிச் சிறுவனாய்
மழைக்குள் முண்டியடித்துக்கொண்டிருந்தது
மின்தொடர் வண்டி.

*

ஈரமாகிவிடாதிருக்க கண்ணாடி
இறக்கப்பட்டிருந்த ஜன்னல்வழி
கண் அகட்டி மனம் நெகிழ்ந்து பூரித்தும்
வழிந்த தாரைகளுக்கிடையில்
நெளிந்து போய்க்கொண்டிருந்தது
தலைகுளித்த பெண்மையாய்
தளதளத்த இயற்கை.