அணியாத பூணூலை எனக்கு அணிவித்த ரெண்டுங்கெட்டான் 1917லேயே நான் எழுதியதாய் ஒரு துணுக்கைப்பிடித்துத் தொங்கியதைப் பார்த்தன்மூலம் எனக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் http://www.thamizham.net/ இந்த தளம்.
எழுத்து இலக்கியம் பத்திரிகை போன்ற செயல்பாடுகள் எல்லாம் இரத்தத்தில் இருக்கவேண்டியவை. புவ்வாவுக்காக எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார் ரேஞ்சில் பத்திரிகையாளர்களாக இருப்பவர்களிடம் எதை எங்கிருந்து எடுத்துக் கொடுக்கிறோம் என்கிற குறைந்தபட்ச நன்றியுணர்வு நாகரிகம் போன்றவற்றையெல்லாம் எதிர்பார்ப்பதென்பது அதிகம்.
சுட்டியில்லாத செய்தி எனில் அதன் ஆதாரம் என்ன எந்த பத்திரிகையில் வந்தது என்று ரீஷேர் செய்த ஆறில் ஒருவரோ அல்லது விரும்பிய இருபத்து சொச்சம் பேர்களில் ஒருவரோகூட ஒரு பத்திரிகை கூறுகிறது என்று வந்திருக்கும் பத்திரிகையின் மூலத்திற்கான சுட்டியைக் கேட்பதில் அக்கறைகாட்டவில்லை. ஆனால் அரசியல் சரிகளுடனான விவாத கண்டணங்களுடன் விளாசத் தொடங்கிவிட்டனர். அப்போதைக்கு வேண்டியதெல்லாம் பரபரவென சொறிந்துகொள்ள ஏதேனும் ஒரு அரிப்பு.
தில்லுதுரையாகக் காட்டிக்கொள்ளும் திராவிட மரை 1917லேயே நான் பிராமனர்களுக்கு சார்பாய் எழுதியதாய் ஒற்றைவரியில் கிண்டலடித்துப் போஸ்டும் போட்டதாலேயே இந்த தளம் என் பார்வைக்கு வந்தது. அந்த விதத்தில் அதற்கு நன்றி. என்மேல் சேறு வாரி அடிக்கப்பட்டது என்கிற ஒரே காரணத்தால் என்ன ஏது என்கிற கேள்வி இன்றி நக்ஸலைட் பூச்சாண்டிஅதை ரீஷேர் செய்ய எலும்புத்துண்டம் பார்த்த நாய்களாய் பைத்தியங்கள் நாலுகால் பாய்ச்சலில் நக்க வந்தது தனிக்கதை.
முதல் பஸ் விடப்பட்டது 17.08.2011 4.31PM மறுநாள் ஆனால் 18.08.2011 12.50 PMக்குதான் அதன் சுட்டியை முதல்முதலாக ஒருவர் பதிகிறார்.
சொன்னதாகச் சொல்லப்படுவது பத்திரிகை எனில் அதன் மூல ஆதாரத்தைத் தேடுவதும் உறுதி செய்தபின் கருத்து சொல்வதுமே அடைப்படை நேர்மை.
இணையத்து மண்டூகமந்தைகளுக்கு இதெல்லாம் என்னவென்றுகூடத் தெரிந்திருக்க நியாயமில்லை. தெரியவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவார்த்த மடமையுமாகும்.
தேடல் என்றுமே தெவிட்டாதது. 1917ன் பத்திரிகை எங்கே உள்ளது யார் அதைப் பதிப்பித்திருப்பவர், வலையேற்றியவர் யார் என்பதைத் தேடிப்போய்ப் பார்த்தால் ம.நடேசன் ( பொள்ளாச்சி நசன் ) தமிழ்க்கனல் என்கிற தனிமனிதர் அச்சில் வந்த பத்திரிகைகளையும் நூல்களையும் PDF ஆக வலையேற்றிக்கொண்டிருக்கிறார். பழைய சிறு பத்திரிகைகளைக் குறிப்பாக அஃ பத்திரிகையைப் பார்த்ததும் நெஞ்சு விம்மத் தொடங்கிவிட்டது. இலக்கியம் எனத் தான் நம்பிய ஒன்றுக்காக அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்த மனிதர் பரந்தாமன்.
அஃ முதலாவது இதழ் - கி.ராஜநாராயணனின் - ஜீவன்
அஃ இரண்டாவது இதழ் - வெங்கட் சாமிநாதனின் - சில கேள்விகள், வண்னதாசன் சிறுகதை
அஃ மூன்றாவது இதழ் - அட்டையிலேயே பிரமிள் எழுதிய - ஒரு வானம்பாடி கும்பலுக்கு
அஃ ஐந்தாவது இதழ் - பிரமிளின் - கோணல்கள் - ஜெயகாந்தன் எழுத்துக்கள் பற்றி விமர்சிக்கும் பகுதிகள்.
தான் ஏதோ சுயம்பு எனத் தம்பட்டமடிக்கும், இன்றைய கதாகாலட்சேபங்களுக்கும் எப்படிப் பொருந்தி இருக்கிறது. அதில் இருந்து பிரமிள் காட்டும் ஒரு மேற்கோள் இது.
”பத்து பிரஷ்கள் கையிலிருந்தால் மூன்றை மட்டும் பயன்படுத்து. பத்து விஷயங்கள் ஒரு ஓவியத்துக்குக் கருவாகத் தென்பட்டால் அவற்றில் மூன்றை மட்டும் பயன்படுத்து. இதனால் உனக்கு ஒரு உள்ளடக்கிய பலம் - strength in reserve - இருக்கும்” என்றான் பாப்லோ பிக்காஸோ.