கடைசிக்கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்.
விக்ரமாதித்யனின் பெரும்பாலான குறுங்கவிதைகள் இதன் நீட்சியாகத் தோன்றும். அவருக்கும் நகுலன் மேல் மிகுந்த காதல் உண்டு.
பாதசாரி பற்றிக் கேட்கவே வேண்டாம். நகுலனின் அறையை அங்குலாங்குலமாக விவரித்திருக்கிறான் 82-83 வாக்கில்.
நகுலன்
விக்ரமாதித்யன்
பாதசாரி
ஓரிழை ஒற்றுமை.
இதில் சேர்ந்திருக்க வேண்டிய இன்னொரு பெயர் கோபி கிருஷ்ணன் ஆனால் அவர் கலைக்கான கச்சாப்பொருள்.
Ayyanar V - மாமல்லன், /கலைக்கான கச்சாப்பொருள்/ இது எனக்குப் புரியவில்லை. நேரமிருந்தால் விரிவாக சொல்லுங்களேன். தனிப்பதிவாக எழுதினாலும் சரி.
***
மிக மிக உண்மையாக சுயசரிதை எழுதியவர் கோபி கிருஷ்ணன்:)
இந்த வகையில் நகுலன் உச்சம்.
நம்பி சுயபுலம்பலின் கவித்துவம்.
பாதசாரியின் ’காசி’ பிரமாதமான பதிவு.
கோபி கிருஷ்ணன் ‘எழுதிய எல்லாம்’ படித்திருக்கிறாயா என்று கேட்காதீர்கள். படித்த வரை, அவருக்கு எழுத்து பிடிபட்டதாக எனக்குத் தோன்றவில்லை. அவர் எழுத்து என்னை இழுத்துக் கொண்டும் செல்லவில்லை.
நேர்ப்பழக்கத்தில் மிக மென்மையான மனிதர். சங்கோஜி. க்ரியாவின் டைப்பிஸ்டாகப் பலகால அறிமுகம். கடும் உழைப்பாளி.
வலி, இலை வெளியான சமயங்களில் தயங்கித் தயங்கி (பேசுவதற்கே தயங்குபவர்) மலர்ச்சியுடன் பாராட்டினார். சில வருடங்கள் கழித்து, காணி நிலம் வேண்டும் (என்கிற அவரது முதல் கதை?) கையெழுத்துப் பிரதியில் வாசிக்கக் கொடுத்தார். இரண்டுமூன்று பத்திகளுக்குமேல் படிக்கமுடியவில்லை என்று திருப்பிக் கொடுத்தேன். வழக்கமானப் புன்னகையுடன் வாங்கிக்கொண்டார். அதன் பிறகு பலமுறை சந்தித்திருக்கிறோம் அவர் கதைகளைப் பற்றி பேசிக்கொண்டதே இல்லை.
அவர் வாழ்வை அதன் முடிவை வைத்து அவரது எழுத்துக்களின் மேல் அதீத அர்த்தங்களைப் போர்த்தி உணர்ச்சிவயத்தோடு கொண்டாடுதல் இலக்கியக் காரியம் இல்லை.