17 August 2011

விசிலடிச்சான் குஞ்சு!

தொங்கிக்கொண்டிரு
எதையேனும் பற்றித்
தொங்கிக் கொண்டே இரு

ஜாதி 
மதம்
கட்சி
கொள்கை
தலைவன்
பணம் 
புகழ்
நிறம்

என்று
எதையேனும் பற்றிக்கொண்டு
சிலந்தியாய்த் தொங்கிக்கொண்டே இரு.

தொங்கும் சிலந்திக்கு 
வலை பின்னியே ஆகவேண்டிய 
வாழ்வாதாரக் கட்டாயம்.

மனிதர்க்கோ
தொங்குதல் பழக்கதோஷம் 

நேற்றொரு துடைப்பக்கட்டை
இன்றொரு விசிறி மட்டை
நாளையொரு காய்ந்த விட்டை

பழக்கம் விடுபடல்
சாமான்ய விஷயமில்லை.
தொங்குதலே சாராம்சம் 
என்றாகிப் போனவனுக்கோ
தொங்காதிருத்தல் உயிர்வாதை.
எனவே தொங்கு. பாதகமில்லை.

இனி எதையேனும் 
பிடிக்கும் முன்
பிடிமானமுள்ள சாமானா
என்று மட்டும் 
சரிபார்த்துக்கொள்.