மராத்திய பக்தியை நண்பா நீயும் கொஞ்சம் அனுபவியேன்.
ரஞ்சனி காயத்ரி என்னும் இரண்டு பெண்களும் ராமா என்னும் இரண்டு எழுத்தும்
by Samayavel Karuppasamy on Sunday, August 7, 2011 at 7:49pm
ரஞ்சனி & காயத்ரி
பக்தியை இசையிலிருந்து பிரிக்கவே முடியாது என்பதை இரண்டு மராத்தியப் பெண்கள், ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், நேற்று மாலை மதுரை பாண்டியன் ஹோட்டலில் நடந்த ராகப்ரியா ஆண்டு விழா கச்சேரியில் நிரூபித்து விட்டார்கள்.
நண்பர் சுரேஷ்குமார் இந்த்ரஜித் தனது பட்டியலில், சஞ்சய் சுப்ரமணியத்திற்கு அடுத்த இடத்தில் வைத்திருக்கும் இந்த சகோதரிகளின் கச்சேரிக்குள் நுழைவது என்பது இசையின் மூலஸ்தானத்திற்குள் நுழைவது போலத்தான். அவர்களது பாட்டு என்பது வித்தை என்பதைத் தாண்டி, ஒப்புமையற்ற குரல் வழியாக ஒரு மீவெளிக்குள் நம்மைச் செலுத்துகிறது. அவர்களது ஆலாபனையின் சிறகுகளில் நாம் தொற்றிக் கொள்ள முடிந்தால் நாம் சென்றடையும் இடம் ஒரு பேரணுபவ வெளி தான். ஒவ்வொரு கமகத்திலும், வகை வகையான பிருஹாக்களிலும், விதம விதமான தாள நடைகளைக் கொண்ட சொற்கட்டுமானங்களிலும் நாம் மூழ்கி மூழ்கி சாஹித்யகர்த்தாவின் இதயத்தின் மூச்சையே கேட்கத் தொடங்குகிறோம். பிறகு அந்த சாஹித்யத்தின் பிடிக்குள் சிக்கி, பெரும் மயக்கத்தில் அதன் பயணத்தோடு கலக்கிறோம். அது சென்றடையும் மீப்பெரு வெளிக்குள் நாம் மித்தக்கத் தொடங்குகிறோம். ராமா ராமா என்னும் ஈரெழுத்தில் அந்தப் பெண்கள் துடிக்கும்பொழுது எத்தகைய நாத்திகரின் இதயமும் துடித்துப் போகும் வல்லமை மிக்க சங்கீதம் அவர்களுடையது. இவர்களது பாட்டு முறையின் வசீகரம் அவர்கள் அறிந்த இந்துஸ்தானிய இசையின் மெல்லிய சாயலை எவரும் அறியாவண்ணம் கர்நாடக இசையில் இழைக்க முடிந்தது என்று நினைக்கிறேன். சஹானாவில் தொடங்கிய ராகம் தாளம் பல்லவியில் பெரிய பெண் ரஞ்சனி பாடிய பஸந்தில் சபை கிறங்கிப் போனது. கச்சேரி தொடங்கியதிலிருந்து அவர்களது விதம் விதமான பாடல்களில் சபை மயங்கிச் சரிந்து கொண்டிருந்தது. மராத்திய சகோதரிகளின் சிறப்புப் பாடல்களான அபங்கை விரும்பிப் பாடச் சொன்னார்கள். துர்காவின் குருவைப் போற்றும் அபங்க்கில் சபையும் சேர்ந்துகொண்டது. அபங்க் என்பது ஒருவகை பஜன் என்பதால், அதில் பழக்கமுள்ள சபையளவுக்கு என்னால் ஒன்ற முடியவில்லை. மார்கழி மாத பஜனையில் தரப்படும் நெய்ப்பொங்கல் சுண்டலுக்காக, ஒன்பது, பத்து வயதில் கலந்து கொண்ட பஜனைக்குப் பிறகு வேறு எந்த பஜனையிலும் கலந்து கொண்டதில்லை.
(மார்க்சிய பஜனை?). நிற்க.
இசையின் அடிப்படையே பக்தி என்பதாகத்தான் இருக்கிறது. எல்லா செவ்வியல் சங்கீதங்களும் பக்தியை அடிப்படையாகக் கொண்டிருப்பது குறித்து கொஞ்சம் யோசித்தேன். சங்கீதத்தின் பௌதீகம் ஒலி. பலவகையிலும் பாடிப்பாடி அல்லது ஒலிக்கருவிகளை வாசித்து வாசித்து எழும் ஒலிக்கோர்வைகள் அல்லது இசைக்கோர்வைகள் இறுதியில் அடைவது ஒளியற்ற பேரமைதியைத் தான். இதைத் தேடித்தான் ஆன்மீகக் காடுகளில் பலரும் அலைந்து திரிகிறார்கள். மதம் சாராத அல்லது மதவழிக் கடவுள்கள் சாராத ஆன்மீகம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ராமா என்ற இரண்டெழுத்து என்பது தசரதன் மகன் ஸ்ரீராமனில்லை. ரகுப்ரியா ராகத்தில் ரஞ்சனி & காயத்ரி சகோதரிகள் பாடியபோது எனக்குக் கிடைத்த அந்த இரண்டெழுத்து நிச்சயம் ஸ்ரீராமனில்லை. ஆனால் நான் அடைந்த ஆனந்தம் அளவற்றது. அதிலும் இரண்டு பெண்குரல்கள், ஒரு வயலின் என மாற்றி மாற்றி பொங்கி வழிந்த பாட்டில், இசையில் திக்குமுக்காடிப் போனேன்.
சமயவேல் 07-08-2011