17 August 2011

ஜ்யோவ்ராம் சுந்தரின் ‘இலக்கு’ கவிதை பற்றி Tue, Sep 7, 2010 at 9:09 PM


இலக்கு - ஜ்யோவ்ராம் சுந்தர்

இருளால் மூடப் பட்டிருக்கிறது சாலை 
தவளைகளின் இரைச்சல் 
நரம்புகளை ஊடுருவுகிறது 
குடைகளை மீறி மனிதர்களைச்
சில்லென்று ஸ்பரிசிக்கிறது மழை
செடிகளும் மரங்களும் பேயாட்டம் போடுகின்றன 
மின்னல் வழிகாட்டுகிறது உற்ற தோழனாய் 
குறுக்கே மல்லாந்த மரங்களை 
அப்புறப் படுத்தி 
இலக்கை நோக்கிச் சக பயணிகள் 
வேகமாக முன்னேறிச் செல்கின்றனர் 
மழையையும் 
இருட் சாலை அழகையும் 
பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறேன்

மழை பெய்கையில் தவளை சத்தம் போட்டு கேட்டமாதிரி நினைவில்லை. அப்படியே போட்டாலும் மரங்கள் வேறு பேயாட்டம் போடுகையில் இரைச்சலாகவே இருந்தாலும் கேட்பது சந்தேகம்தான்.செடி மரப்பேயாட்டத்தில் மழை அறையவோ அல்லது குத்தவோதான் முடியும்.

மெல்லிய தூரலில்தான் ஸபரிசம் சாத்தியம். மேலும் அகாத இருட்டில் அடுத்தவன் மேல்கூட இல்லை அடுத்தவர்கள் மேல் ஸ்பரிசிக்கும் மழை என்பது யூகமாக மட்டுமே சாத்தியம். அனுபவமாக அல்ல. அனுபவத்திலன்றி கற்பனையில் எழுப்பப்பட்டாலும் யூகம் வாசிப்பில் அனுபவமாவதை மட்டறுக்கவே செய்யும்.


மல்லாந்த மரங்கள் – மரத்திற்கு முதுகு எந்தப்புறம்? அது முடிவானால்தானே மல்லாந்தோ குப்புறவோ அதனால் கிடக்கமுடியும் பாவம்?

கவிதை, தன்மையொருமையில் சொல்லப்பட்டிருப்பதோடு, யாரும் அழகைக் கவனியாது இலக்கு நோக்கி முன்னேறுவதை கண்டணிக்கும் கவி சமூகக்கடமையாகிய வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதில் உதவாதது மட்டுமல்ல அழகை பார்த்தபடி இருக்கிறார். (அதுதான் கவிதையே என்கிறாரோ?)

யாப்பிலா வரிகளின் அபாயம், தோறத்தில்கூட அவை உரைநடையாகவே இருக்கும். கவிதையின் ஏணியில் ஏற்றிவிடுகையில் ஒரு இடைக்கம்பு முறிந்தாலும் தடுமாற்றம்தான். ஏணியே இற்றிருந்தால்?

மழையையும்இருட் சாலை அழகையும்பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறேன்

ஒன்று அங்கே அழகு இருக்ககூடாது அல்லது பார்த்தபடிக்கு பதில் ரசித்தபடி என இருக்கவேண்டும். ஏனெனில் ‘இலக்கு’ அதுதானே?

மொத்தமே முப்பத்தியொன்பது வார்த்தைகள். ஒன்றரை மணிநேரப் படத்தில் ஓரிரு நிமிடங்கள் கண்ணயர்ந்தால்கூட கதையைப் எட்டிப்பிடித்துவிடலாம். முப்பது வினாடி விளம்பரத்தில்? கவிதையின் பரவசத்தில் பாசியின் வழுக்கல் அபாயகரமானது.

கட்டியெழுப்பும் காட்சி கற்பிதமேயானாலும் வாசிப்பில் பல் மட்டுமல்ல கல்லும் நெருடக்கூடாது.

கவிதையில் தர்க்கத்திற்கு இடமில்லையென எதிர் நிலையாடக்கூடும். ஆனால் அது ஒரு கற்பிதப்பொய். தர்க்கமே கவித்துவ நிலைக்கு உயர சாத்தியமிருக்கையில் குறைந்தபட்சம் ஒத்திசைவை எதிர்பார்ப்பது குற்றமா?

தனிப்பார்வைக்கு மட்டும்