01 September 2011

தட்டிக் கேளுங்கள் ஊழல் ஒழியக்கூடும் குல்லாபோட்டு ஒழியாது

ஒரு சம்பவம் (என்று நானல்ல சொன்னது நண்பர்)

2005. என் தங்கைக்கு அண்ணா பல்கலையில் இடம் கிடைத்திருந்தது. கல்விக்காக லோன் பெறும் முயற்சியில் இருந்தேன். அப்போது நிதி அமைச்சர் சிதம்பரம் அனைத்து வங்கிகளுக்கும் கல்விக்காக லோன் கேட்டு விண்ணப்பிபவர்களுக்கு கட்டாயம் லோன் வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாக பேப்பரில் செய்திகள் வந்தன. சரி அண்ணா பல்கலை க்கழகம் என்பதால் லோன் ஈசியாகக் கிடைக்கும் என்று நினைத்து இந்தியன் வங்கி மதுரையில் அப்ளை செய்தோம்.

அதற்கு முன்பெ கவுன்சலிங் - தியாகராஜா கல்லூரியில் நடந்தபோது அனைத்து வங்கிகளும் ஸ்டால் போட்டிருந்தார்கள். மிகக் கனிவாக விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டவர்கள்.
 
நேரில் போனபோது லோன் தர மறுத்தார்கள்.
 
பிறகு ஒரே ஒரு மெயில் சிதம்பரத்திற்கு ஆர்பிஐ கவர்னர் என்று யார் யார் மெயில் ஐடி கிடைத்ததோ எல்லோருக்கும் ஒரு சிசி 

அடுத்த நாள் மேனேஜரிடமிருந்து போன் உடனே வாங்க சார் லோன் தரோம்னு 
:-) 

அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை என்னதான் நடந்தது என்று.

வாய்ப்பிருக்கும்போது கூட துரும்பைக் கிள்ளி போடாதவர்கள் வெட்டி ஜம்பம் அடிக்கக்கூடாது. 

முயற்சியே பண்ணாமல். இதை ப்ளாக்மெய்ல்னுகூடச்                          சொல்லிக்கிடட்டும் பரவாயில்லை. இதைத்தான் நான் சொன்னேன். இது லஞ்சம் கேட்டு மிரட்டும் காலம் இல்லை. லஞ்சம் கேட்பவனை மிரட்டும் காலம் என்று! 

அமைச்சர் கேட்டு விடுவாரோ, நம்மீது ஆக்‌ஷன் எடுத்துவிடுவாரோ என்றே காரியங்கள் நடந்துவிட வாய்ப்பிருக்கிறது. சும்மா ஊழல் ஊழல் என்று பிலாக்கிணம் வைக்காமல் சட்டத்தின் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள நாமும் முன்வரவேண்டும். 

அப்படித்தான் நடந்தது.
 
மேனேஜர் ஏறக்குறைய கெஞ்சும் தொணியில் ஏன் அப்படியெல்லாம் மெயில் அனுப்பினீர்கள் என்றாராம். 

அந்த மெய்லை அமைச்சர் பாத்துருக்ககூட மாட்டாரு:))) ஆனா வங்கி அதிகாரிக்குத் தண்ணியில்லாத பிராஞ்ச் எல்லாம் கண்ணுலத் தெரிய ஆரம்பிச்சுட்டு இருக்கும்:))) 

நானும் முயற்சி ஏதும் எடுக்காமல் இந்த அரசாங்கம் வெறுமே சொல்கிறது எல்லாம் பித்தலாட்டம் என்று எழுதலாமே? 

உண்மையாகவே அந்த சம்பவம் எனக்கு ஒரு தூண்டுதலாகவே இருந்தது. சில விஷயங்கள் கணிணி மயமாக்கப்பட வேண்டும்.
 
அதிகாரிகளுக்கு தாம் வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்ற பிரமை இருக்கிறது.
 
நந்தன் நிலகேனியின் தீர்வுகளாக முன்வைப்பவை ஹசாரே கோஷ்டியின் ஜன்லோக்பாலை விட எஃபக்டிவாக இருக்குமென்றுதான் நினைக்கிறேன். ஆனால் அவரைக் காய்ச்சி எடுத்துவிட்டது ஹசாரே கும்பல் 

லஞ்சம் வாங்குவதைத் தடுக்க அதிகாரிகளுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் உண்டு என்று நினைக்கிறீர்கள். அதையும் மீறி அவர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுக்கத்தான் ஆன்லைனே கொண்டுவரப்பட்டது. நிறைய எழுதலாம் - புனைவு என்கிற பெயரில்:))) 

அன்னா ஹசாரே சொல்வது நல்லவழியாக இருக்கும் என்று கொண்டாலும் கூட அது தொடர்ந்து சரியாக நடப்பதற்கு தம்பி ஹசாரே, கடைக்குட்டி ஹசாரே என்று வந்துகொண்டேயிருக்கவேண்டும் :-) 

அவர் ரொம்ப மேலோட்டமா அரசு அதிகாரிய அடக்கிட்டா லஞ்சம் ஊழல் ஒழிஞ்சிடும்னு நடைமுறை அறிவே இல்லாம நெனைக்கிறாரு. உண்மையான விஷயம் என்னான்னா ஊழல் மனப்பான்மை எங்கையும் விரவிக்கிடக்கு என்பதுதான். 

லோடு அடிச்சிகிட்டுப் பொற எத்தனி லாரில ஒரிஜினல் இன்வாய்ஸ் இருக்குன்றீங்க? சேரவேண்டிய இடம் போய்ச் சேந்ததும் சேந்துடுச்சினு ஒரு ஃபோன் அனுப்பினவனுக்கு வரும் அதோட சேர்ந்த எடத்துல அந்த இன்வாய்ஸ் கிழிக்கப்பட்டுவிடும். தெருவுல நின்னு எந்த வ்ண்டி எங்க போவுதுன்னு இன்வாய்ஸை எடுத்து நோட் பண்ண ஆரம்பிச்சாலே ஃபோன் வ்ரும். ஒன்னா, எவ்ளோ சார் வேணும்னு சரக்கு அனுப்பினவன் கிட்டேந்து ஃபோன் வரும் இல்லேன்னா ஏன் ரோட் பெரோல் செய்யறேன்னு மேலேந்து ஃபோன் வரும். 

நேரடிக் கண்காணிப்பில் ஏகமாய் லஞ்சம் புரண்டது என்பதால்தான் எங்கள் துறையில் ஃபிஸிக்கல் கண்ட்ரோல் நீக்கப்பட்டு செல்ஃப் ரிமூவல் ப்ரொசீஜர் எனும் உற்பத்தியாளரே கணக்கு வைத்துக் கொண்டு வரி கட்டி பொருட்களை வெளியில் அனுப்பும் முறை கொண்டுவரப்பட்டது.

இது அதிசயம் நிகழ்ந்தது ஹசாரேவால் அல்ல 91-96ல் திரு.நரசிம்மா ராவ் பிரநிதியமைச்சராய் இருந்த தற்போதையப் பிரதமர் அவர்களால். 

91-96ல் ஒவ்வொரு ’துறை சீர்த்திருத்தமாய்’ அடுக்கடுக்காய் வர வர அதிகாரத்தின் சங்கிலிக் கன்னிகள் தெறிக்கத் தெறிக்க கைப்பு முறுவலுடன் ’அசாக சூரர்’ என அறியப்பட்ட இன்ஸ்பெக்டர் கூறியது.

”யோவ் மினிஸ்டர் பக்கத்துல எவனோ ஒரு இன்ஸ்பெக்டர் ஒக்காந்துருக்கான்யா. எங்கெல்லாம் துட்டு வருமோ எதுக்கெல்லாம் பர்மிஷன் வாங்கணும்னு இருந்துதோ அது எல்லாத்தையும் கம்பெனி லெட்டர் ஹெட்ல இண்டிமேஷனாக் குடுத்தாப் போதும்னு கழட்டி உட்டுகிட்டே இருக்கான்யா”

96க்குப் பிறகு ஆட்சி மாற்றம் அப்போது இன்னொரு இன்ஸ்பெக்டர் கூறியது. 

”துட்டெல்லாம் எங்கப் போயிடப்போகுது. நாம அங்க போகக்கூடாது இல்லை அவன் இங்க வரவேத்தேவையில்லேன்னு சட்டம் வரவரைக்கும் கவலையே இல்லை மால் மேட்டர் இருந்துகிட்டேதான் இருக்கும்”.

91க்கு முன்னால் கேட்பாஸ் என்றபெயரில் ஒவ்வொரு சேல்ஸ் இன்வாய்சிலும் இன்ஸ்பெக்டர் கையெழுத்து இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது. அதை வாங்க நிறுவன ஆட்கள் அலுவலகத்திற்கு வந்து மணிக்கணக்கில் காத்துக் கிடப்பார்கள். ”அதெல்லாம் ஒரு பொற்காலம்” சவரனும் 450க்கு விற்ற காலம் என்று அப்பொதிருந்தே அதிகாரியாய் இருக்கும் பெருசுகள் சில ’நினைவில் தோய்ந்து’ புறநகர் பகுதிகளைக் கடக்கையில் வறட்டுப் புன்னகை பூத்து இங்க எதுனா லேண்ட் வாங்கிப்போட்டு இருந்திருக்கலாம் என்று ஜல்சாவில் விட்ட காசை சப்புகொட்டிக்கொள்ளும்.  

வருடாவருடம் நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்கள் காரணமாய் அஸஸி எனப்படும் தொழில் நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியம் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

இப்போது 
மாதாந்திர வரி செலுத்துதல் ஆன்லைனில் இ -பேமண்ட் 
மாதாந்திர ரிடர்ன் எனப்படும் உற்பத்தி - விற்பனை விபரங்கள் ஆன்லைனில் http://www.aces.gov.in/

சில வருடங்கள் முன்னால்வரை பட்ஜெட் உரையைக் கேட்டவர்களுக்கு குறிப்பாக ”இன்ஸ்பெக்டர் ராஜ்” ”லைசென்ஸ் ராஜ்” என்கிற வார்த்தை நன்கு பரிச்சயப்பட்டிருக்கும். தொழில் நிறுவனங்களின் மீதான அரசு அதிகாரியின் ‘பிடி’யைத்தான் அப்படி குறிப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். எதற்கெடுத்தாலும் பர்மிஷன் வாங்க வேண்டும் என்கிற லைசென்ஸ் ராஜ் இப்போது அறவே இல்லை. உயர் அதிகாரிகளின் முன் அனுமதி இல்லாமல், காபி டீ குடிக்கப் போவது போல் நினைத்தபோது தொழிற்சாலைகளுக்குள் நுழைய முடியாது.

அப்படியென்றால் லஞ்சம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டதா? 
இல்லை. ஆனால் அரசின் சுதந்திரமயமாக்கல் கொள்கையின் காரணமாக நிச்சயமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. 

நீண்ட விடுப்பில் போவதற்கு சில மாதங்கள் முன்பாக சேவை வரித்துறையில் வரி ஏய்ப்பு-தடுப்புத் துறையில் இருந்த போது ஒரு நிறுவனத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ந்த உரையாடல்.

சார். குட்மார்னிங். நான் ***லேந்து *** இன்ஸ்பெக்டர் பேசறேன்.
வெரி குட்மார்னிங் சொல்லுங்க சார்
உங்க கம்பெனியோட 5 வருஷ பேலன்ஸ் ஷீட் வேணும் சார்.
இந்த வருஷம் போன வருஷம்னா இருக்கும். தர்றோம். அதுக்கு முன்னாடின்னா ஆடிட்டர் கிட்டக் கேட்டுப் போட்டுதான் குடுக்கணும்.

5ந்து வருடங்களாக சேவை வரி கட்டாத ஒருவர் அலுவலகத்தில் இருந்து கேட்கிறார்கள் என்றதும் இனிமேல் போட்டு கொடுக்கிறாராம். சேவை வரித்துறையில் இருந்து கேட்கிறார்கள் என்றதும் கம்பெனியில் இல்லாத  பேலன்ஸ் ஷீட் புதிதாக எப்படித் தயாரிக்கப்படும் என்று தெரியாதா என்ன? 

அதிகாரியின் முன்னால் சட்டப்படி இருக்கிற எளிய வழி தனக்குக் கொடுக்கப்பட்ட பேலன்ஸ் ஷீட்டின்படி கணக்கிட்டால் கட்டப்பட வேண்டிய வரி இவ்வளவுதான் என்று கட்ட வைத்து நீட்டப்படுகிற தட்சனையை வாங்கிக் கொள்வது.

இன்கம்டாக்ஸ் அலுவலகத்திற்குக் கடிதம் எழுதி மேலதிகாரி கையெழுத்துடன் சொந்த பெட்ரோல் போட்டுக்கொண்டு நேரில் போய் பழைய பேலன்ஸ் ஷீட்டுகளை வாங்கி (அதற்குள் தாவு தீர்ந்துவிடும். அப்போது ஆன்லைன் வச்தி இல்லை என்பதால் அவர்களும் தேடி அல்லவா கொடுக்க வேண்டும்) நிறுவனம் சமர்ப்பித்த பேலன்ஸ் ஷீட் மோசடி என நிரூபிக்கப்பட்டதும் அந்த எம்டி அதுவரை ஹசாரேவுக்காக ஆட்டிக்கொண்டிருந்த கொடியை மடக்கிக் கொண்டு குழையத் தொடங்குவார். 

சார், எங்க மீட் பண்னலாம்? அப்ஸலூட்லி நோ ப்ராப்ளம் சார். கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க சார்.ரெண்டு பேருக்கும் ப்ராப்ளம் இல்லாம ஹாப்பியா ஸ்மூத்தா முடிச்சிக்கலாம் சார். 

தட்டிக் கேக்க ஆளில்லேன்னா தம்பி பெரிய சண்டப் பிரசண்டன்.

தட்டிக் கேளுங்கள். தயவுசெய்து தட்டிக் கேளூங்கள். தட்டிக் கேட்க சட்டத்தில் ஏகப்பட்ட வழிகள் ஏற்கெனவே இருக்கின்றன. கேட்கத்தான் ஆட்கள் இல்லை.