21 September 2011

வெசாவும் பிரமிளும் திமிர் பிடித்த சண்டைக்காரர்களா?

06 JulyRamji Yaho

ஆனாலும், உங்களின் வாசிப்பு ஆர்வம், முயற்சிகள் பிரமிக்க வைப்பவை சார். இன்னொரு மனிதரால் இந்தச் சாதனையை முறியடிக்க முடியுமா என்பது ஐயம்.
புத்தகம், நாடகம், சினிமா, பாவைக்கூத்து, தோல்கூத்து, மெலட்டூர் பாகவத பஜனை ....

06 JulyVenkat Swaminathan

வயசு என்ன ஆகிறது என்பதையும் கவனியுங்கள். 79. 39வய்சு பாரதிய நினைத்துப் பாருங்கள்.எவ்வள்ப்வு படித்து எவ்வளவு எழுதியிருக்கிறார். சோத்துக்கு வழியில்லாத காலத்திலேயே கூட். நாமெல்லாம் ரொம்ப சின்னவங்க ராம்9/20 (edited 9/20)


***

வெங்கட் சாமிநாதனை வெசா என்பார்கள். தழைந்த குரலில் வெஸ்ஸா (திட்டினார்) என்போரும் உண்டு. 

***

80களில்,ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் தளர் நடையில் சென்றுகொண்டிருக்கையில், பிரமிளிடம் ஒருமுறை கேட்டேன்.

”உங்களால இங்கிலீஷ்லையே எழுதமுடியும்போது, நேரடியா அதுலையே எழுதி இருக்கலாமே. ஏன் தமிழ்ல எழுத வந்தீங்க?”

ஓய்! இங்கிலீஷ்ல எழுதினா ஓஸில இங்லேண்டு போகலாம் அமெரிக்காவுலப்போயி செட்டில் ஆகிடலாம்னு கனவு காண்றீரா? 

கெக்கெக்கே என்று சர்வ அங்கமும் நெளிய நடுத்தெருவில் அமேடியஸ் சிரிப்பு சிரித்தார். போனவன் வந்தவன் எல்லாம் வினோத ஜந்துக்களைப் பார்ப்பதுபோல் எங்களைப் பார்ப்பதாய் எனக்குப் படவும் கொஞ்சம் நெளிந்தேன். அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பது என் ரத்தத்தின் உட்கூறுகளில் ஒன்றுதான். நான் இருந்தபடி இருந்தாலே போதும் உலகம் எப்படி என்னைப் பார்க்காமல் இருக்கமுடியும் என்கிற அளவிற்குத் திமிரும் உண்டு.  அதற்காக இப்படிப்பட்ட திருஷ்டிப்பூசணிக்காய் பார்வை அவசியமா? இந்த வேதாளத்தைக் கட்டிக்கொண்டால் எந்த மரமாய் இருந்தாலும் ஏறித்தான் ஆகவேண்டும் என்று பொறுமையுடன் இருந்தேன். சிரிப்பு அடங்கியபின் தீவிரமான குரலில் கூறினார் பிரமிள்,

வேல்டு லிட்ரச்சர்லக் கூட்டம்கூட்டமா இருக்கற ராக்ஷசனுங்களுக்கு நடுவுல நமக்கு ஏது ஓய் எடம்?

தமிழின் தலைசிறந்த கவிஞனின் வார்த்தை.

பணிவு, பெரும் சம்பத்து. பெரிய பொக்கிஷம். புதையல் எல்லோருக்கும் எளிதாய்க் கிடைத்துவிடக்கூடுமா என்ன? அடக்கம் நம்மிடம் இருப்பதுபோல் சும்மா நடிப்பதுகூட எதிர்காலத்தில் அதை நம் இயல்பாக்கிக்கொள்ள உதவக்கூடும்.