ஓர் இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தனது கையெழுத்துப் பிரதியில் திருத்திக் கொண்டிருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி.திடீரென்று யாரோ கதவைத் தட்டினார்கள். இந்த நேரங் கெட்ட நேரத்தில் எந்த விருந்தாளியும் வருவது வழக்கமில்லை. தனக்கோ ஒரு வேலையாள் கூடக் கிடையாது. பிறகு இந்த அகாலத்தில் யாராக இருக்கும்?
ஆனால் குரலில் கொஞ்சம் கூடப் பரப்பரப்பைக் காட்டாமல் சாதாரணமாகச் சொன்னார். '' வாருங்கள், உள்ளே, வாருங்கள்''.
மடக்குக் கதவுகள் மெதுவாகத் திறக்கப்பட்டன. அறை முழுவதையும் அசாதாரண ஒளியால் நிறைத்துக் கொண்டு ஓர் உருவம் தோன்றியது. முதற் பார்வையிலேயே அது சாதாரண மனிதனல்ல என்று விளங்கியது. நீண்ட தாடியும், கறுத்த மேலங்கியும் தொய்ந்த காலுறைகளும் உணர்த்திய அசாதாரணத்தன்மையை தாஸ்தயேவ்ஸ்கி மனப்பூர்வமாகப் புறக்கணித்தார். விநோதமான எதிலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்று வாழ்க்கை அனுபவங்களிருந்து இதற்குள் அவர் கற்றுக் கொண்டிருந்தார். எனவே எந்த வார்த்தையும் பேசாமல் அறைக்குள் நுழைந்து தன் முன் நிற்கும் விசித்திர உருவத்தைப் பார்த்தும் கூட இதில் இயல்பை மீறியதாக எதுவுமில்லை என்பதுபோல உணர்ச்சியற்றவராக இருந்தார்.
அறிமுகமற்றவரின் தோற்றத்தில் தெரிந்த அசாதாரணத்தன்மையை ஒதுக்கி விட்டு நெடுநாள் பழகிய நபரிடம் சொல்வதுபோலச் சொன்னார் '' உட்காருங்கள், உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?''
அந்தப் பரிச்சயமற்ற மனிதர் அறை நடுவில் ஒரு நடன் ஆசிரியரின் கால் அசைவுகளை நினைவுபடுத்துவதுபோல நின்று கொண்டிருந்தார். தன்னுடைய எதிர்பாராத வருகையும் தோற்றமும் ' குற்றமும் தண்டனையும்' எழுதிய ஆளிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவர் கவனித்தார்.
திடீரென்று ஞானோதயம் உண்டானவர்போல முதல் வாசகத்தை உச்சரித்தார். '' நான் காப்ரியேல் தேவதூதன்''.
''சொர்க்கத்துக்கும் பூமிக்கும் அதிபதியானவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்''
சிரமமான எதையோ செய்து முடித்ததைபோல மௌனமானார் அவர். நீண்ட நேரத்துக்குப் பிறகு பின்வருமாறு சொன்னார்:
''அவருக்கு உங்களுடன் சில முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேச விருப்பம். அதற்காக உங்களை அழைத்துச் செல்வது என் கடமை''
தாஸ்தயேவ்ஸ்கி இருக்கையிலிருந்து எழுந்து கோட்டைச் சரி செய்து கொண்டே சொன்னார் '' நான் எப்போதுமே தயார்''
கடவுள் தன்னுடைய அடர்ந்த வெண்நிறத் தாடியை வருடிக் கொண்டே தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் சொல்ல ஆரம்பித்தார்.
'' நண்ப, இங்கே இருக்கும் நாங்கள் எல்லாரும் உன்னதத்தை நோக்கி உங்கள் திறமை பறந்து உயர்வதை அக்கறையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்''
தாஸ்தயேவ்ஸ்கி அந்தப் பாராட்டுக்குப் பணிவுடம் தலை வணங்கினார்.
''ஆனால்... எனக்கு அதை எப்படி விளக்குவதென்று புரியவில்லை. நான் சொல்ல விரும்புவது... அதாவது... நீங்கள் காட்டுகிற உலகம் இருண்டே இருக்கிறது. நீங்கள் வாழ்க்கையின் கருமையான பக்கத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். அதன் நன்மைகளைப் பார்ப்பதே இல்லை... அதுமட்டுமல்ல... இவற்றையெல்லாம் வெறும் ஆறே நாட்களில் சிருஷ்டித்தேன் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்... கவனக் குறைவால் ஒருவேளை பிசகுகள் நேர்ந்திருக்கலாம்... ஆனாலும்...''
கடவுள் தன்னுடைய நிலைமையை விளக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டி ருந்தார். எனினும் அதற்கிடையிலும் எழுத்தாளரின் மேதைமையைப் பாராட்ட மறந்து விடவில்லை. 'அதிகாரியின் தொனியில் அல்ல; ஆலோசகனின் பரிவுடனேயே இதைச் சொல்கிறேன்' என்பதைப் புரியவைப்பதில் அவர் பிரத்தியேக அக்கறை கொண்டிருந்தார்.
கடவுளின் பரிதாபமான நிலைமை தாஸ்தயேவ்ஸ்கியை சங்கடப்படுத்தியது. அவருக்கு என்னால் என்ன செய்ய முடியும்? அவருக்கு நிச்சயம் ஒரு துணை தேவை.
வீட்டுக்குத் திரும்பிய உடனேயே 'கரமசோவ் சகோதரர்க"ளை எழுத ஆரம்பித்தார் தாஸ்தயேவ்ஸ்கி.
***
தமிழில்: சுகுமாரன்
கல்குதிரை 1991 தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ்