Oct15 2011 நான் இந்துவா?
காளிராஜ் என்பவரை முன்னிருத்தி செய்யப்பட்ட மேற்படி மதோபதேச காலட்சேபத்தில்
மதங்களாவன யாவன
இந்துமதம் எப்படித் தொகைமதமாக இருக்கிறது
நாட்டார் தெய்வங்கள் எப்படிக் காலக்கிரமத்தில் எக்ஸாம் எழுதி பெருந்தெய்வங்களாகப் பிரமோஷன் பெருகின்றன
என்று பேசிக்கொண்டே சென்றுகொண்டே இருக்கிறார் ஜெயமோகன்.
<இங்கே ஒரு சிறுதெய்வம் உருவானதுமே அது சைவப் பொதுமரபுடன் இணைய ஆரம்பித்துவிடுகிறது. உதாரணம் சேர்மன் அருணாசல சுவாமி கோயில். ஏரலில் உள்ளது இந்த கோயில். அருணாச்சல நாடார் 1880 அக்டோபர் 2இல் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி-சிவனணைந்த அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். 1906, செப்டம்பர் 5இல் ஏரலில் பஞ்சாயத்துத் தலைவராக [chairman] பதவி ஏற்றார். திருமணம் செய்துகொள்ளவில்லை. மக்களுக்கு நன்மைகள் செய்தார். 1908 ஆடி அமாவாசையன்று இறந்தார். மக்கள் அவரைக் கடவுளாக நிறுவி வழிபட ஆரம்பித்தார்கள்
மெல்லமெல்ல சேர்மன் சாமி வழிபாடு சைவத்துடன் உரையாட ஆரம்பித்தது. சேர்மன் அருணாச்சல சாமி சிவனின் அவதாரமாக ஆனார். இன்று ஒரு முக்கியமான சைவத்தலமாக சேர்மன் அருணாசல சாமிகோயில் உள்ளது. இதுதான் இந்து மதம் உருவாகி வளர்ந்துகொண்டே இருக்கக்கூடிய விதம். இங்குள்ள எந்த வழிபாடும் இந்து மதத்துடன் உரையாடிக் காலப்போக்கில் அதனுடன் இணைந்துகொண்டே இருக்கும். இப்படி இணைவதன்மூலமே இந்துமதம் உருவாகி முன்செல்கிறது. ஒரு நிலத்தில் ஓடும் எல்லா நீரோட்டங்களும் எப்படியோ அங்குள்ள பெரிய நதியில் சென்று சேர்வது போல.>
மாடன் மோட்சம் என்ன சொல்ல வருகிறது? அது எதற்காக மேலோட்டமான வாசகர்களால் இன்றுவரை கொண்டாடப்படுகிறது? நாட்டார் தெய்வங்கள் எப்படி பார்ப்பணர்களால் கபளீகரம் செய்யப்பட்டு பெருந்தெய்வங்களாக உருமாறின என்பதைக் குறியீடாய்ச் சுட்டுகிறது என்பதனால்தானே.
<உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா? நாட்டார் தெய்வங்கள், அதிலும் குறிப்பாக நெல்லைகுமரி மாவட்ட நாட்டார் தெய்வங்கள் மற்றும் குலதெய்வங்கள் அனைத்தையும் நான் விரிவாகவே அறிவேன். நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களுடன் பத்தாண்டுகளாக நெருங்கி உரையாடி வருகிறேன். உங்கள் கிராமத்துக்கு மட்டுமே உரியவை ஒரு சில குலதெய்வங்கள் மட்டுமே. கருப்பசாமியும் மாடசாமியும் கன்னியம்மனும் மதுரைவீரனும் முத்துப்பட்டனும் எல்லாம் தெற்கத்திச்சீமை முழுக்க உள்ள தெய்வங்கள்.>
உன் வரலாறு உன் குடும்ப வரலாறு உன் கிராமத்தின் வரலாறு எல்லாவற்றையும் உனக்குச் சொல்லித்தரவே சோட்டாணிக்கரை பகவதி என்னை ஏவியிருக்கிறாள் என்கிற ரீதியில் கொட்டிக்கொண்டேபோய் சொல்வதுதான் என்ன?
<தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாடு இந்துமதத்துடன் இணைந்ததல்ல, இந்துமதத்துக்கு எதிரானதும்கூட என்ற குரலைப் பகுத்தறிவு பேசிய இடதுசாரிகளும் திராவிட இயக்க அறிவுஜீவிகளும் திடீரென்று வலுவாக எழுப்ப ஆரம்பித்தது தொண்ணூறுகளில்தான்.அதற்கு முன்னால் ஒட்டுமொத்தமாகவே அவற்றை மூடநம்பிக்கை என்றே சொல்லிவந்தார்கள்.>
அதனால்தான்,அந்தக் காலகட்டத்தில் கைத்தட்டல் வாங்கத்தான் மாடன் மோட்சம் எழுதப்பட்டதா? <1989 ல் எழுதப்பட்டது .முதல் பிரசுரம் – 1991 புதிய நம்பிக்கை மும்மாத இதழில். திசைகளின் நடுவே தொகுப்பில் உள்ளது. [கவிதா பதிப்பகம் மறுபிரசுரம் 2002.]>
இலக்கிய எழுத்தாளர் என்பதிலிருந்து, தமிழ் இந்துக்களின் தனிப்பெரும் தத்துவ வித்தகராய் பதவி உயர்வு பெற்றிருப்பதான தோற்றம்காட்டவேண்டிதான், நான்-வெஜிடேரியன் நாட்டார் சிறு தெய்வங்கள் தொடர்ந்து உரையாடி எக்ஸாம் எழுதி பிரமோஷன் பெற்று வெஜிடேரியன் பெருந்தெய்வங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன என்கிற பல்டியா?
மெகா எழுத்தாளர் மற்றும் பசையுள்ள அபிமானிகளைப் பேற்றிருப்பவர் என்பதால், இப்போதைக்குக் குழும தெய்வமாய் தேவ குருவாய் விளங்கும் ஜெயமோகன் அவரது வாழ்நாளிலேயே குறுந்தெய்வமாய் சிலையாக வடிக்கப்படும் வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது.
தமிழின் நிறைய ’முதல்’களுக்குத் தாமே சொந்தக்காரர் எனச்சொல்லிக் கொள்பவர் என்பதால் சிலையாக அடிக்கப்பட்ட முதல் தமிழ் எழுத்தாளரும் தாமே என்று கொண்டாடிக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.
சிலையை வடிவமைக்கையில் என் கோரிக்கையையும் பரிசீலிக்கும்படி குழும தர்மகர்த்தாக்களைக் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
சிலையில் ஜெயமோகனின் தலை இருக்கவேண்டிய இடத்தில் வாய் வடிவ டிவிஎஸ் கீபோர்டும் காலடியில் அறுந்து கிடக்கும் காதுகளுமாய் அமைக்கப்பட்டால் அண்ணாரின் தமிழ்ப்பணிக்கு வரலாற்றைத்தாண்டியக் குறியீடாய் அது விளங்கும்.
தொடர்புடைய பதிவுகள்