17 October 2011

உம்மாச்சி காப்பாத்து

மொட்டை மாடியில்

புத்தகத்தை மூடி, எழுந்து
விளக்கணைக்கவும்
கணத் தாமதமுமின்றி
என் அருகே வந்தமர்ந்து
புன்னகைத்த
நிலவைக் கண்டு அதிர்ந்தேன்;
விளக்கைப் போடவும்
அது விருட்டென்று முகஞ்சுளித்தபடி
வானேறிக் கொண்டதும்
நான் கவனிக்கத் தவறியதும்
வேதனையாய் மனதிலாட.

தேவதேவன்

கவித் தமிழுக்கு இணைய அத்தாரிட்டியான இலக்கிய குருஜி ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களின் பஸ்ஸில் இருந்து, நா தழுதழுக்கும் நன்றியுடன் https://plus.google.com/115511813610845200164/posts/aqx8wYMgXxJ

<புத்தகத்தை மூடி, எழுந்து 
விளக்கணைக்கவும்
கணத் தாமதமுமின்றி
என் அருகே வந்தமர்ந்து>

கவிஞர்தான் புத்தகத்தை மூடி, எழுந்து விட்டாரே அப்புறம் எப்படி நிலவு வந்து “அருகே” அமர முடியும்?

<தாமதமுமின்றி>

நல்ல மொழி முன்னெடுப்பு. உரைத் தமிழுக்கு நல்ல கொடை. அருமையான கவி மொழி. மனைவிமார் செய்யும் வெல்லச்சீடைக்கு இது பரவாயில்லை.

கவிதையை இப்படியெல்லாம் அக்குஅக்காய்ப் பார்க்கக்கூடாது என்றால், மூடினேன் எழுந்தேன் விளக்கணைத்தேன் என்று சவச்சவவென எழுதிய கவிதையை வேறெப்படித்தான் துவைப்பதாம்?

<புன்னகைத்த
நிலவைக் கண்டு அதிர்ந்தேன்;>

அதிரும் அளவிற்கு நிலவு என்ன அஞ்சுகண்ணனாகவா தோற்றமளித்தது? அதுவும் புன்னகைத்த நிலவு அது, ஐயோ பாவம்!

<விளக்கைப் போடவும்
அது விருட்டென்று முகஞ்சுளித்தபடி>

சரி அப்பால,

<வானேறிக் கொண்டதும்>

<நான் கவனிக்கத் தவறியதும்>

கவனிக்கத்தவறியதையே இவ்வளவுபெரிய கவிதையாய் ஆக்கமுடிகிறது என்றால், கிட்டத்தட்ட மகாகவி என்றறிவிக்காத குறையாக ஜெயமோகனால் விதந்தோதப்படும் தேவதேவன் மட்டும், ’கவனித்து’ கவிதை எழுதினால் தமிழின் கதி என்னாவது?அந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அது உலகமொழிகளின் உச்சத்தில் அல்லவா போய் ஏறிக்கொள்ளும். அப்புறம் என்னைப்போன்ற சித்திரக்குள்ளர்களெல்லாம் எப்படி எழுதுவது?

<வேதனையாய் மனதிலாட>

புல்லரிப்பில் எஸ்.ராவையே இடதுகையால் புறந்தள்ளிவிடுவார் போலும். 

இதைப்போன்ற மகாகவிகளின் காப்பியங்களை மட்டுமே ரசிக்கமுடியும் ஜெயமோகனுக்கு பாரதி வெறும் மக்காகத்தானே தோற்றமளிப்பார். சில நல்ல கவிதைகள் எழுதியவர் என்கிற குழும குருபரரின் ஷொட்டே பாரதிக்கு அதிகபட்சம் அல்லவா? மேலதிகமாய் விஷ்ணுபுர விருது வேண்டும் என்றால் பாரதி இன்னொரு பிறவியெடுத்து வந்து தேவதேவன், யுவன் போல எழுதிக்காட்டட்டும். அவர்களைப்போல் மேதமை பளிச்சிடாவிடினும் விருதுக்கு நிச்சயம் பரிசீலிக்கப்படுவார்.

இணைய இலக்கிய பூச்சாண்டிகளிடமிருந்து உம்மாச்சி காப்பாத்து.