உர்ரென்று முறைத்த கோட்டோவியத்தை
திருஷ்டிப்பூசனி, படிகாரம்போல்
இருந்துவிட்டுப் போகட்டுமென்று
உபரியாய்க் கிடைத்தது,
ஓவியம் மாட்டிய வீடென்ற அடையாளம்.
ஏதோ ஒரு கணத்தில்,
வரவேற்பறையை அலங்கரித்த,
நவீனக் கருவிகள் எடுத்த வண்ணப் புகைப்படங்கள்,
மங்கிப்போனது கண்டு திகைத்தேன்.
வெளியில்வந்து பார்க்க
முறைத்த ஓவியம் மங்கலாய் முறுவலித்தது.
படிந்திருந்த புழுதியைத் துடைத்தேன்.
காலத்தின் தூசு உள்ளேயும் போயிருந்தது.
கண்ணாடியைக் கழற்றித் துடைக்கத் தொடங்கினேன்.
துடைக்கத் துடைக்க
முண்டாசு முறுக்குமீசை கனலும் கண்கள்
கோட்டு சட்டை வேட்டி என்று
கொஞ்சம் கொஞ்சமாய்
கலையத் தொடங்கின.
கோடுகள் அழிய அழிய
அழிக்கும் விளையாட்டில் உற்சாகம் பெருகிற்று.
அனைத்தும் அழித்தபின்
வெற்றிக்களிப்பில் நான் முறுவலிக்க,
வெற்றிக்களிப்பில் நான் முறுவலிக்க,
விட்டு விடுதலையாவதற்காய்த்
துடித்துக்கொண்டிருந்தது வெற்றுத்தாள்.