20 November 2011

நீரில் மிதக்கும் நிலவு - கடிதம்

pasupathi pasupathi ***@gmail.com 12:04 PM (2 hours ago) to me

நீரில் மிதக்கும் நிலவே ஆயினும் தொட்டுப் பார்த்திட ஆசை
வணக்கம்.
அன்பு, பண்பு போன்ற வார்த்தைகளை உபயோகிக்க பயந்தவனாக எழுதும் என் பெயர், த.பசுபதி. திரு. பாலு மகேந்திரா அவர்களிடமும், திரு. வெற்றி மாறன் அவர்களிடமும் சினிமா பயின்று, தற்போது என் முதல் திரைப்படத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

கடந்த ஆண்டு சென்னை உலகத் திரைப்பட விழாவில் நானும் என் நண்பரும் கலந்து கொண்ட பொழுது எங்களை தொடர் தொல்லைக்காட்படுத்தினார் ஒருவர். தன் வயதுக்கேற்ற ஆடையினை அணியாமல் ,' Attention Seeking Maniac' - போல், வாசகங்கள் நிறைந்த T-Shirt, Shorts, Canvas, Coolers, தொப்பி சகிதமாக வளாகத்தினுள் வலம் வந்து அரங்கத்தினுள்ளும் புறமும் அலப்பறை செய்து கொண்டிருந்தார் அவர். நிற்க.

என் பெயரை மாமல்லன் என மாற்ற எத்தனித்த பொழுது நண்பர் ஒருவர் தங்களைப் பற்றி கூறினார்.

" விமலாதித்த மாமல்லன்னு ஒருத்தன் இருக்கான். சினிமா எடுக்கறேன்னு சுத்திகினு இருந்தான். இலக்கியம் அது இதுன்னு பேசுவான்..."

அவர் கொடுத்த அறிமுகத்தில் அப்பெயரே வேண்டாம் என விட்டு விட்டேன்.

இரண்டு மாதத்திற்கு முன்பு என் பால்ய சிநேகிதன், ( ஆராய்ச்சியாளன், மருத்துவன். இலக்கியம், சினிமா, கணிதம், காப்பி என அனைத்திலும் Expert ) தங்கள் வலைத்தளத்தை அறிமுகம் செய்தான்.

இன்று வரை தங்களைப் பற்றியும், உங்கள் எழுத்தைப் பற்றியும் பேசாத நாட்கள் வெகு சிலவே. ' முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் ' - வாசித்து, அதனை குறும்படமாக எடுக்க வேண்டுமென பேசிக்கொண்டிருந்தோம்.

' நந்தலாலா ' - விமர்சனக் கட்டுரையை படித்த பிறகு தங்களைப் பற்றிய எண்ணம் என் மனதில் 'குறியீடாக' , 'படிமமாக' ஆழப் பதிந்துள்ளது.

திரைப்பட விழா ஒன்றில் நீங்கள் பார்த்த படங்களைப் பற்றிய பதிவுகளை வாசித்தேன். தங்களுக்கு பிடித்த படங்கள் எனக்கும், எனக்குப் பிடித்த படங்கள் உங்களுக்கும் பிடிக்கவில்லை. ஆயினும், நம் இருவருக்கும் பிடித்த, அத்திரைப்பட விழாவின் உச்சத் திரைப்படம் ஒன்றே ( HOW I SPENT LAST SUMMER ) என்ற ஒத்திசைவில் நீச்சல் தெரியாத போதும் கிணற்றில் மிதக்கும் அந்நிலவினை தொட்டுவிடத் தவிக்கிறேன்/ துடிக்கிறேன்/ நினைக்கிறேன்.( வார்த்தை..! வார்த்தை..!!, பயமாக உள்ளது.)

பின் குறிப்பு :
( கடிதத்தின் , துவக்கத்தில் குறிப்பிட்ட அத்திரைப்பட விழாவில்,என்னையும் என் நண்பனையும் அலைக்கழித்த அந்நபரின் பெயர் ' விமலாதித்த மாமல்லன்'.)

நன்றி.

CONTACT :
E-mail : ***@gmail.com
Mobile : ***

அன்பான பசுபதி,
நல்ல வார்த்தைகளுக்கு நன்றி.
முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.