13 November 2011

திற்பரப்பில் ஆகா ஓகோ அருவிக் குளியல்

என் அளவுகோலில் பாரதிக்குப்பின் கவிதை எழுதியவர்களில் பிரமிள் முக்கியமானவர். அதன்பின் தேவதேவன். பிரமிள் தன் மனக்குறைபாடுகளால் தேங்கி நின்றுவிட்டவர். தன் கவித்துவத்தை முழுமையாக வெளிப்படுத்தும் தவத்தைச் செய்தவர் தேவதேவன். ஆம், பாரதிக்குப்பின் அவர் ஒருவரையே ‘மாகவிஞன்’ என நான் சொல்வேன்.

[29-05-2011 அன்று தூத்துக்குடி பியர்ல் ஃபவுண்டேஷன் வழங்கும் ‘சாராள் -ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது’ தேவதேவனுக்கு அளிக்கப்பட்டபோது ஆற்றிய உரை]


<என் அளவுகோலில்> 

அந்த அளவுகோல் என்ன என்பது ஆண்டவனுக்காவது வெளிச்சமா?

<பாரதிக்குப்பின் அவர் (தேவதேவன்) ஒருவரையே ‘மாகவிஞன்’ என நான் சொல்வேன்.>

29-05-2011 அன்று மாகவியாக இருந்த பாரதி ஐந்தே மாதங்களில் 06-10-2011 அன்று பாரதியின் இன்றைய மதிப்பு மக்கு கவியாக ஆகிவிடுகிறார் பாவம்.

போகட்டும், என்றைக்குமான மாகவியாக ஜெயமோகனால் விதந்தோதப்படும் தேவதேவனின் தளத்தில் கிடைக்கும் சில கவிதைகளை வாசித்துப் பார்க்கலாம்.

மார்கழியில் தேவதேவன் - ஜெயமோகன்
நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் தேவதேவனின் கவிதைகளுக்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு உண்டு. ஒருவேளை உலக நவீனக் கவிதையிலேயே அது ஒரு அபூர்வமான விஷயமாக இருக்கலாம். அவர் துயரங்களைப் பற்றி எழுதியதே இல்லை. அவரது கவிதைகள் அனைத்துமே பரவசங்களைப் பற்றியவை. மன எழுச்சிகளைப் பற்றியவை. உன்னதங்களை நோக்கி முகம் திருப்பி ஒளி பெற்றுக்கொண்டவை. துயரங்கள் என்றால்கூட அவை மகத்தான துயரங்கள். ஒருபோதும் லௌகீகதுக்கத்தின் சிறுமைக்குள் சிக்கிவிடாதவை.

<நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் தேவதேவனின் கவிதைகளுக்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு உண்டு. ஒருவேளை உலக நவீனக் கவிதையிலேயே அது ஒரு அபூர்வமான விஷயமாக இருக்கலாம். அவர் துயரங்களைப் பற்றி எழுதியதே இல்லை.>

இப்படி ஒரு தடாலடிப் பாராட்டு.

<துயரங்கள் என்றால்கூட அவை மகத்தான துயரங்கள்.>

அதே பத்தியில் உடனே அந்தர் பல்டி.

இப்படியான தமாஷ் ஆசாமியை எப்படி ஐயா இந்த இலக்கிய உலகம் சீரியஸ் எழுத்தாளர் என்று நம்புகிறது?

<ஒருபோதும் லௌகீகதுக்கத்தின் சிறுமைக்குள் சிக்கிவிடாதவை.>

சரி அது அப்படித்தானா என்று பார்த்துவிடலாமா?

சீக்கிரம் சீக்கிரம் படியுங்கள். இல்லாவிட்டால் ஜெயமோகன் போலவே தினத்திற்கு சில என்று ஏகப்பட்ட ம்கா கவிதைகள் சேர்ந்து நம் வாசிப்பு பெண்டிங் ஆகிவிடும். வாசித்தாலோ நம் விலா எலும்பு பெண்டாகிவிடும்.

SATURDAY, AUGUST 6, 2011

அவன் பார்வையின் அழுக்கை உணர்ந்தபடியே
பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தாள் அவள்

வக்கரித்த பார்வை வீசிக்கொண்டிருக்கும்
அவன் நெஞ்சிலேயே
திரும்பத் திரும்ப
முடிவற்ற கண்ணீருடன்
கோலமிட்டுக்கொண்டிருக்கிறாள்

திட்டமொன்றின்படியேதான் இயங்குவது போன்ற
தீர்க்கமும் தீரமும் அவள் உடலெங்கும் ஒளிரக் கண்டேன்
எப்போதும் அவளை நான் அப்படித்தான் பார்க்கிறேன்
அவளே என் அன்பும், நானே அவளுமல்லவா

அக்கறையாய்க் கைநீட்டி ஒரு பூவைப் பறித்து
அவள் சூடிக்கொண்டதன் பொருளை நான் அறிவேன்

கருப்பு வளைகள் குலுங்க
பெருக்குமாற்றைத் தட்டிச் சுருதி சேர்த்துக்கொண்டவள்
குனிந்து வளைந்து
தன் மீதும் தன் பணிகள் மீதும்
வீழ்ந்துகொண்டேயிருக்கும் வக்கிரப் பார்வைகளை
இடுப்பொடியும் வேதனையுடனும்
இயம்பவியலாத் துயருடனும்
பின்வாங்காத் தீரத்துடனும்
இடையறாது பெருக்கிக்கொண்டேயிருக்கிறாள்
(சமயங்களில் சீற்றம் கொண்டு சாத்தியமையும்
இதனுள்ளேதான் அடக்கம்)

<பார்வையின் அழுக்கை உணர்ந்தபடியே>
<வக்கரித்த பார்வை வீசிக்கொண்டிருக்கும்>
<கருப்பு வளைகள் குலுங்க>
<குனிந்து வளைந்து
தன் மீதும் தன் பணிகள் மீதும்
வீழ்ந்துகொண்டேயிருக்கும் வக்கிரப் பார்வைகளை>
<இடையறாது பெருக்கிக்கொண்டேயிருக்கிறாள்>

ஒரு கவிதையில் எத்துனை முறை ‘பார்வை’ வருகிறது. உரைநடையிலேயே ஆயாசத்தை ஏற்படுத்தக் கூடியது கவிதையை என்ன கதியாக்கும்?

ஜெயமோகனின் தளபதிகள் வண்ணதாசனுக்கு ஏற்படுத்தியிருக்கும் வலைத்தளத்தில் இருக்கும் அநாதிகாலத்தில் எழுதப்பட்டு, குமரி அனந்தனால் பின்னெழுபது முன்னெண்பதுகளில் தமிழகத்து மேடைமேடையாய் புதுக்கவிதைக்கு உதாரணமாய் சிலாகித்து பேசப்பட்ட கவிதை.


கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கிப் போனாள்
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு.

- வண்ணதாசன்
இவ்வளவு கச்சிதமான கவிதையிலிருந்து சுட்டு அதைக் கட்டுரையாக எழுதினால் ஜெயமோகனின் அளவுகோல்படி மாகவி போலும்.

<பிரமிள் தன் மனக்குறைபாடுகளால் தேங்கி நின்றுவிட்டவர். தன் கவித்துவத்தை முழுமையாக வெளிப்படுத்தும் தவத்தைச் செய்தவர் தேவதேவன்.>

<பெருக்குமாற்றைத் தட்டிச் சுருதி சேர்த்துக்கொண்டவள்> 

இந்த கவித்துவத்திற்கு முன்னால் பிரமிள் என்ன இனி பிறக்கப்போகிற எல்லோரும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்பதுதான் நியாயம்.

<அவரது கவிதைகள் அனைத்துமே பரவசங்களைப் பற்றியவை. மன எழுச்சிகளைப் பற்றியவை. உன்னதங்களை நோக்கி முகம் திருப்பி ஒளி பெற்றுக்கொண்டவை.>

THURSDAY, JULY 28, 2011

வாசல் விட்டிறங்கி
இரண்டு எட்டு கிழக்கே நடந்தால்
காய்கறிச் சந்தை! அவ்வளவு பக்கம்!
நாம் எதற்கு வாசல்தோறும் வந்து கூவும்
கூடைக்காரிகளைச் சார்ந்திருக்க வேண்டும்?

எத்தகைய செல்வம் இது!
இத்துணை பசுமையும் தூய்மையுமான
காட்சி வேறுண்டோ உலகில்?
காலையில் இவை முகத்தில்
முழிப்பதுதான் எத்தனை இன்பம்!

வெறுமே வாய்க்கும் வயிற்றுக்குமாய்
உண்பதற்கு மட்டுமே எனில்
இத்தனை வண்ணங்களில் இயற்கை ஏன்
இவற்றைப் படைத்திருக்க வேண்டும்?
நம்மைக் கொஞ்சி மகிழப் பீரிய
பித்துவெறிவேகத்தின்
பிரியப் பிதற்றல்கள்தாமோ இவ்வண்ணங்கள்?

அங்கு சென்றுவரும்போதெல்லாம்
காதலால் தீண்டப்பட்டவன்போல்
நான் வருவதை என் துணைவி பார்க்கிறார்
ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்தப்போவதுபோல்
காய்கறிப் பையைத் தலைகீழாய்க்
கூடம் நடுவே கொட்டுவேன்
ஆ! எத்தனை அழகு ஓவியம்!
என் மனைவிக்கு அந்த வேலையை
விட்டுக் கொடுத்துவிடாமல்
ஒவ்வொன்றையும்
பிரியம் பிரியமாய் நானே பிரிப்பேன்.
சமையலறை மேஜைமேல் ஒரு பாத்திரத்தில்
பூக்குவளை மலர்கள்போல் அமைத்து
அவற்றைப் பார்த்துப் பார்த்து நெகிழ்ந்தபின்தான்
பதனப் பெட்டிக்குள் பத்திரப்படுத்துவேன்

சோயாபீன்ஸை உரித்து உரித்து
பருப்புகளைக் கைகளில் அள்ளி
அந்த மெஜந்தா விழிகளைப்
பாத்துக்கொண்டிருப்பதற்காகவே
நான் வாழ்வேனே இப்பூமியில் பல்லாண்டு காலம்!

<நாம் எதற்கு வாசல்தோறும் வந்து கூவும்
கூடைக்காரிகளைச் சார்ந்திருக்க வேண்டும்?>

மனிதத்தின் மீது என்னமாய் அன்பு பெருக்கெடுத்து ஓடுகிறது. கூடைக்காரிகளைப்பார்த்து முகஞ்சுளிப்பவரின், பரவசம்  இயற்கையைப் பார்த்து என்னமாய் வழிகிறது. இயற்கையை ரசிக்க, கவிஞர் போவது எங்கே பரந்து விரிந்த தோட்டத்திற்கா? இல்லை இரண்டு எட்டு கிழக்கே நடந்தால் வரும் காய்கறி மார்க்கெட்டுக்காம்.

<அங்கு சென்றுவரும்போதெல்லாம்
காதலால் தீண்டப்பட்டவன்போல்
நான் வருவதை என் துணைவி பார்க்கிறார்>

காதலால் தீண்டப்பட்டவன்போல இவர் வருவதை, மனைவி பார்ப்பதாய் இவருக்குத் தெரிகிறது. முடிதிருத்தக கண்ணாடிக் காட்சி கண்ணெதிரில் தெரிகிறதா? என்ன இண்டர்ப்ரடேடிவ் கவித்துவப் பார்வை.

சென்று வந்தது உண்மையிலேயே சந்தைதானே சுவாமி.

அடுத்து, இயற்கையைக் கண்டு கண்ணீரும் கம்பலையுமாய் எஸ்.ரா அளவிற்கு உருகுபவர் என்பதனால், 

<வாசல் விட்டிறங்கி
இரண்டு எட்டு கிழக்கே நடந்தால்
காய்கறிச் சந்தை! அவ்வளவு பக்கம்!>

இவ்வளவு பக்கமாய் இருக்கும் சந்தைக்கு சென்று வீட்டிற்கு வந்ததும், 

<ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்தப்போவதுபோல்
காய்கறிப் பையைத் தலைகீழாய்க்
கூடம் நடுவே கொட்டுவேன்
ஆ! எத்தனை அழகு ஓவியம்!
என் மனைவிக்கு அந்த வேலையை
விட்டுக் கொடுத்துவிடாமல்
ஒவ்வொன்றையும்
பிரியம் பிரியமாய் நானே பிரிப்பேன்.
சமையலறை மேஜைமேல் ஒரு பாத்திரத்தில்
பூக்குவளை மலர்கள்போல் அமைத்து
அவற்றைப் பார்த்துப் பார்த்து நெகிழ்ந்தபின்தான்>

என்று காய்கறிகளை ரசித்துச் சிலிர்க்கும் மகாகவி அவர்கள் தினம் தினம் ரசிப்பதற்காகவே சந்தைக்குச் செல்வார் என்றுதானே எதிர்பார்ப்போம். லேது.

<பதனப் பெட்டிக்குள் பத்திரப்படுத்துவேன்> 

இதைத்தானே ஐயா எங்களைப்போன்ற சாதாரண ஜந்துக்கள் எல்லாம் செய்கின்றன. ஒரு வாரத்திற்கு ஒருமுறை சந்தைக்குப் போய்வந்து பதனப்பெட்டியில் பத்திரப்படுத்துவதற்கே இயற்கை பற்றி இத்துனை வழிசலா?

ரிலையன்ஸ் ஃப்ரெஷ்ஷுக்குப் போனேன் 
காய்கறி வாங்கி
ரெஃப்ரெஜிரேட்டரில் வைத்தேன்.

என்று எழுதினால் அட்லீஸ்ட் ரைமிங்காகவாவது இருக்கும்.

அப்புறம் அடுத்த வாரம் 

<வாசல் விட்டிறங்கி
இரண்டு எட்டு கிழக்கே நடந்தால்
காய்கறிச் சந்தை!>

போய் இயற்கையை ரசித்துக்கொண்டால் போயிற்று.

காலையில் 90 ரூபாயை தின வட்டிக்குக் கடன்வாங்கிய பணத்தில், சந்தைக்குப் போய் காய்கறி வாங்கி, தலையில் சுமந்து தெருத்தெருவாய்க் கூவி விற்று இரவு வட்டியுடன் நூறு ரூபாயாகத் திருப்பித் தரும் கூடைக்காரி நம்மைப்போல் இயற்கையை இலக்கியத்தை ரசிக்கிறேன் பேர்வழி என்கிற மொண்ணையல்ல. தலைச்சுமை விற்றுத்தீர்ந்தால்தான் அன்றிய சாப்பாடு, ஆகவே அவள்,

சந்தை விட்டிறங்கி
இரண்டு எட்டு மேற்கே நடந்தால்
கவிஞர் வீடு 

என்றால் கவிஞர் போன்ற மிடில் கிளாஸ் மாதவன்கள் எல்லோரும் பத்து இருபது பைசாவுக்கேக் கணக்குப் பார்த்து சந்தைக்கே சென்றுவிடுவார்கள்  என்கிற யதார்த்தக் கணக்கு தெரிந்தவள் என்பதால் சந்தைக்கு அடுத்த தெருவில் வந்து காய்கறி விற்கவும் மாட்டாள் அதைப் பற்றி மொக்கையாய்க் கவிதை எழுதவும் மாட்டாள்.

தேவதேவன் கவிதைகள் <உன்னதங்களை நோக்கி முகம் திருப்பி ஒளி பெற்றுக்கொண்டவை.>

MONDAY, JULY 25, 2011

உன் இரத்தத்தில் ஒலிக்கவில்லையா
”தர்மம் போடுங்க சாமீ!” என்றபடி
பிட்சா பாத்திரத்துடன் ஒரு பரதேசி
வீடு வீடாய் ஏறி இறங்கும் காட்சி?

அதைத்தானோ
”நீயே கடவுள்
தர்மமே உன் கடமை!” என்று
கம்பீரமாய்ப் பாடுகிறான் கவிஞன்?

இப்போது பரதேசி கையில் இருக்கும் பிட்சா பாத்திரத்துடன் ஒரு நாள் நானும் வருவேன் நீயே கடவுள் என்று சொல்லுவேன் ஆகவே தர்மமே உன் கடமை என்று பிட்சா பாத்திரத்தை கம்பீரமாய்ப் பாடி இன்ஷூர் செய்கிறதோ இந்தக் கவிதை. அறச்சீற்ற ஜெயமோகன்தான் பெரிய மனது வைத்து விளக்க வேண்டும்.

பி.கு: பீட்ஸ்ஸா பாத்திரம் என்கிற சிறிய திருத்தம் மட்டும் செய்யப்பட்டால்,காலத்தைப் பிரதிபலிக்கும் கவிதையாகவும் இது மிளிரக்கூடும்.

SUNDAY, JULY 10, 2011

விடுதலையானாற் போல் சிறகடித்தாள்
விதவையான பிறகும் மல்லிகா
எழுதுவது அதிகமானது மட்டுமின்றி
கருத்தரங்குகளிலும் மனிதரிடையே ஜொலித்தாள்

ஆண்கள் ஜொலித்தால்
அது அவர்கள் ஆற்றலின் விகசிப்பு
பெண்கள்தாம் முன்வந்தால்
அது காமத்தின் தந்திரப் பரிதவிப்பா?

ஃபிராய்டியம் நாறும்
சில ஊத்தை வாய்களை மூடியபின்தான்
மல்லிகாதன் கட்டுரையை வாசித்தாள்:
மனிதர்களாகிய நாம்
இன்னும் எந்த ஒன்றையும்
சரியாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கவில்லை
முதலில் நம்மைநாம் அறிந்து கொள்ளவில்லை
பெண்கள் முன்னே ஒரு ஆணும்
ஆண்களிடையே ஒரு பெண்ணும்
ரொம்ப அலட்டிக் கொள்வதைப் போலவே
ஆழமற்றிருக்கின்றன நமது தாபங்கள்.
பொழுது போகின்றது காலம் காலமாக
ஆழமற்ற வேட்கைகளும் வேட்கையடங்கல்களுமாக.
வலியும் துயரும் உணராக்
கேளிக்கைகளும் துய்ப்புகளுமாக

இப்போதும் மல்லிகாவை
ரொம்ப அலட்டிக் கொள்வதாகச் சொல்பவர்கள்
யாரிடையே எவ்வேட்கை கொண்டென்ற
விசாரணையினைத் தொடர்கிறார்களா?

இஸ்கூல் பேச்சுப்போட்டிக்கு எழுதப்பட்டதாக இருக்குமோ இந்தக் கவிதை?

WEDNESDAY, JUNE 29, 2011

எனது துப்புரவுப் பணியாளரே!
கொலை வெறிபோலும்
வெறுப்பையும் கோபத்தையும்
தன்னை நோக்கிக் குரைத்த
நாயின்மேல்
காலியான குப்பைக் கூடையால்
அதன் சிரசில்
ஓங்கி ஓங்கி
அறைந்து காட்டிவிட்டுச் செல்கிறீர்.

ஒவ்வொரு முறையும்
தணியாத உமது வெறுப்பும்
ஆத்திரமும்
உமது கண்களை மறைத்துள்ளது
அறிகிலீர்.

பளீரென்ற வெண்மயிர் மின்ன
பழகுவதற்காகவே குரைத்த வாலாட்டும் அதனிடம்
நீவிர் இயல்பான முகமலர்ச்சியையும்
மெய்வருடலையும் காட்டியிருப்பீர் எனில்
உண்மை உமக்குப் புரிந்திருக்குமே
ஓநாயிலிருந்து
பல இலட்சம் ஆண்டுகள் தூரம்
பிரிந்து வந்த்து இந் நாய்க்குட்டி.
பார்ப்பதற்குத்தான்
அச்சந்தரும் பற்களுடையது.
தன் உணவுவேளையின் போதுமாத்ரமே
இன்னும் தன் விலங்குக்குணம் மாறாதது.

அன்புப் பெருக்கால் அதிரும் அதன் மூச்சையும்
ஆரத்தழுவும் கைகளாய்த்
தவிக்கும் அதன் முன்னங்கால்களையும்
அச்சமூட்டும் பற்களுக்கிடையே
இளகித் தவிக்கும் நாவையும்
மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் வாலசைவையும்
தனது உணவுமாமிசத்தை அரிவதற்காய்
அதன் வாயிலேயே வடிவமைக்கப்பட்டுவிட்டதால்
தோன்றும் கொடூரத்தைச் சமன்செய்ய விழையும்
அதன் விழிகளையும்
உற்றுக் கவனியுங்கள் நண்பர்களே,
நிதானியுங்கள்.
வெறுப்பிலும் கோபத்திலுமாய் வீணாகலாமோ,
பேரளவான நமது அன்பும் ஆற்றலும்?

இட்டலி கட்டிவந்த பொட்டலப்பேப்பரில் இருந்த இந்தக் கவிதையைத் துரதிருஷ்டவசமாய்ப் படிக்க நேர்ந்துவிட்ட சென்னை மாநகரின் துப்புரவுப் பணியாளர் கவிஞருக்கு பதிலிறுப்பாய் எழுதிய எதிர் விமர்சனம்.

யோவ் கஸுமாலம் கவிதையா எய்த்ற கவித!

<எனது துப்புரவுப் பணியாளரே!>

ஓவூட்டு வேலக்கார்னா நானு? 

மாநகராட்சி ஊளியர்! மருவாதியாப் பேசு அஆங்!

ஏம்பா! தமிழ் வாத்திதானே நீயி! கவிதயெல்லாம் எய்தற பண்டிதரே! இன்னாத் தமில் எய்தறே நீயி?

<தன்னை>

எமது துப்புரவுப் பணியாளரேன்னு, கவிதய என்னப்பாத்துதானே எயுத ஆரம்பிச்சே அப்பிடீன்னா ‘உம்மை’ ‘உன்னை’னு இல்லியா அட்ரஸ் பண்ணீருக்கணு, அப்பாலிக்கா நடுவாந்துரத்துல இது இன்னா தமில் எய்த்தாளன்களாட்டமா மாறி மெர்ஸலாக்கறே.

<வெறுப்பையும் கோபத்தையும்
தன்னை நோக்கிக் குரைத்த
நாயின்மேல்
காலியான குப்பைக் கூடையால்
அதன் சிரசில்
ஓங்கி ஓங்கி
அறைந்து காட்டிவிட்டுச் செல்கிறீர்.>

இந்த டகால்டி வேலதானே வேணாங்கறது. கொரைக்கிற நாயப்பாத்தா, நீ மட்டும் இன்னா கொஞ்சுவியா? கைலியத் தூக்கிக் கவட்டையிலப் புட்சிகிணு மறு கையால உஸ்ஸு உஸ்ஸுனு வெரட்ட மாட்டே? இப்பக் கொரைக்கிறது எப்ப எகிறும்னு எவனுக்குத் தெரியு? காலங்காத்தால அதுங்கிட்டக் கடி வாங்கச் சொல்றியா?

<காலியான குப்பைக் கூடையால் 
அதன் சிரசில் 
ஓங்கி ஓங்கி 
அறைந்து காட்டிச் செல்கிறீர்>

இப்ப இன்னாத்தான் சொல்றே? நாய் தலையில ரெண்டு காட்டு காட்னேன்னு சொல்றியா இல்லே அடிக்கிறாப்புல டகால்டி பண்ணினேன்னு சொல்றியா? எம் மேல போட்ற எப்பைஆர்தான் இன்னா?நைனா பிரியிறாப்புல சொல்லுவியா அத்த உட்டுட்டு...

<ஒவ்வொரு முறையும்
தணியாத உமது வெறுப்பும்
ஆத்திரமும்
உமது கண்களை மறைத்துள்ளது
அறிகிலீர்.>

டெய்லி இந்த நாயோட இதே ரோதன. கோட்டு சூட்டு போட்டவனப் பாத்துக் கொரைக்கிதா இந்தக் கயித? அயிக்கு ஒடம்போட மொயங்கால் தெரிய காக்கி டவுசர் போட்டவனப் பாத்துதான வாள்வாளுங்குது. அதுவும் நானும் ஒரே லெவல்ல ரோட்டோரம்தாங் கீறோம். இதுல இன்னா அறிகிலீர் புரிகிலீர்னு ஒம் பஞ்சாயத்து?

<ஓநாயிலிருந்து
பல இலட்சம் ஆண்டுகள் தூரம்
பிரிந்து வந்த்து இந் நாய்க்குட்டி.
பார்ப்பதற்குத்தான்
அச்சந்தரும் பற்களுடையது.
தன் உணவுவேளையின் போதுமாத்ரமே
இன்னும் தன் விலங்குக்குணம் மாறாதது.>

தோடா வந்துட்டாரு லெமூரியாப் பார்ட்டி. 

<தன் உணவுவேளையின் போதுமாத்ரமே
இன்னும் தன் விலங்குக்குணம் மாறாதது.>

இன்னாபா, நாஷ்டா ஆயிர்ச்சா இல்லியான்னு கேட்டுக்கிணா அதுங்கிட்டப் பொவச்சொல்றியா? குப்பத்தொட்டிகிட்டப் போவ உடுவனாப்பாருன்னு கொரைக்கிறதைப் பாத்து மீச செரைச்ச பெரிய மனுசாளாட்டம் சிடிகை உட்டுக் கொஞ்சி எட்டப்போனு சொல்லச் சொல்றியா? ஐயே! ஏதோ இந்தக் குப்ப அள்ற தொயிலாச்சியும் கெட்சுதேன்னு இர்ந்தா அதுலையும் மண்ணள்ளிப்போட மலேசியா சிங்கப்பூர் கம்பேனிங்குளுக்குக் காண்ட்ராக்ட் உட்ராணுங்கோ. இந்த வகுத்தெரிச்சல்ல எது ஓநாயி எது பீநாயின்னு ஆராச்சி பண்ணிகிணு இர்ந்தா எம்பொயப்பு நாறிடும். அதெல்லாம் பின்ஜினு வாங்க்கிணு பொய்து போவாம கவித எய்தறவனுங்குளுக்குதான். எங்குளுக்குத் தெர்ஞ்சதெல்லாம் தெருநாய் கட்சா தொப்புள சுத்தி ஊசி குத்திக்கணும்.

<தனது உணவுமாமிசத்தை அரிவதற்காய்>

மாட்டப்போவுறது எங்க கெண்ட காலுதான, நீ எயுதலாம் கவித, உனக்கின்னாப் போச்சு. 

SATURDAY, JUNE 25, 2011

தொடர்வண்டி ஒன்றில்
ஒரு நீண்ட இரவு கடந்து
பாரமும் களைப்புமாய் 
இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்

முழுசாய் எங்களுக்கே எங்களுக்கென
வந்ததொரு பேருந்து
அழைத்துச் சென்றது எங்களை
அவ்விடத்திலிருந்து
போர் விரித்தாடும் இடத்திலிருந்து
பாதுகாப்பான இடத்திற்கோ என
புகைந்தது புண்கள் நிறைந்த நெஞ்சு
தவறான இடத்திலிருந்து
சரியாக இடத்திற்கு
என்றது பேருந்து.

இதுவரை இருந்ததைவிட
இன்னும் மேலான இடத்திற்கு
அவ்வளவே என்றனர் தோழர்கள்.
ஆனால் ஆனால்
வழியெல்லாம் கிளைகளசைத்து
உயரமான மரங்களும் விண்ணும் 
உரக்க உரக்க கூவினவே
புறப்படும் இடத்தையே மன்னித்தும்
மறக்கவும் செய்திடும் 
சொர்கத்திற்கு என்று!

எங்களுக்காகவே கட்டப்பட்டிருந்தாற்போன்ற 
ஓரொற்றைவிடுதி வந்து சேர்ந்தோம்
எக்காலத்தும் அங்கு வந்துசேர்ந்தார் 

யாருமில்லை என்பதுபோல
புத்தம் புதிதாய் இருந்த விடுதி.
எங்களைக் கண்டதும் ஒளிர்ந்த 
அதன் காந்தப் புன்னகைதான் எத்தனை அழகு!
காலம் தோறும் அது தன் இன்மை காத்து வந்தது
தித்திக்கும் இவ்வினிமைக்காகத் தானோ ?

அவ்விடுதியை மையம்கொண்டே 
விண்ணும் மண்ணும்
எண்ணற்ற நட்சத்திரங்களும்
சூழ்திருப்பது கண்டு திடுக்கிட்டோம்.
இவ்வண்டத்தின் அத்தனை உயிர்களையும்
ஏற்று அரவணைக்க இயலும்
அத்தனை பெரும் பரப்புடையதாயிருந்தது
அந்த இடம் .

விடுதியின் மொட்டைமாடியிலிருந்தபடி
எங்கள் இன்பதுன்பங்கள் குறித்த
எங்கள் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்த
எங்களை எழுப்பி நடத்தியது
இடையறாது பொழியும் மழைபோலொரு குரலோசை
எங்கோ ஊற்றெடுத்த ஓர் அன்புதான்
ஏகமாய் பரவி ஆங்காங்கே
தன் உருக்காட்டி எம்மை அழைத்ததுவோ ?

சூழ்ந்துள்ள ரப்பர் தோடங்களுக்கு நடுவே
இன்னும் அழிக்கப்படாதிருக்கும் காடுகளுக்கு நடுவே
பல்லாயிரம் கோடி வயதுடைய பாறைப்படுகைகள்மீது
ஓய்விலாது கலகலத்தபடி
ஓடி ஆடி தவழ்ந்து குதித்து புரண்டு சிலிர்த்துச்
சிரித்து களித்துக் கொண்டிருந்த நதி
ஓரிடத்தில் கொட்டியது அருவியாய்!

எம் நடை தடுத்தாட்கொண்ட
குன்றாப் பெருங்கொடை நிதியம்!
முடிவிலா இன்பத் தேடல்களால் வாழ்வைத்
துயர்களமாக்கிக் கொண்டிருக்கும் மனிதத் தலைகளுக்கும் 
தன் இன்பம் ஊட்டி மகிழ்ந்துகொண்டிருக்கும
பெருங்கருணை 

திற்பரப்பில் நடந்த தேவதேவன் கவிதை அரங்கிற்கு வந்து திரும்பிய பின் கவிஞர் எழுதியது ,ஜீன் 11 உங்கள் நூலகம் இதழில் இருந்து .

திரற்பரப்பு அல்லது டேங்ஸ் கவுஜை

<தொடர்வண்டி ஒன்றில்>

ஃபஷ்ட் க்ளாஷ் டிக்கெட் புக் பண்ணிக் குட்தாங்கோ! 

திற்பரப்புக்கு செல்வதை இங்கே எண்டர் தட்டி தேவதேவனால் கவிதை என்று எழுதப்பட்டிருப்பதையும் எண்டர் தட்டாமல் கட்டுரையாய் ஜெயமோகனால் எழுதப்பட்டிருப்பதையும் படித்துப் பாருங்கள் காவியானுபவம் அல்லது காவி அனுபவம் கிடைக்கக்கூடும். ஜெயமோகனின் திற்பரப்பு கட்டுரையைப் படிக்க கீழே சொடுக்கவும். 


<இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்>

அப்புறம் போர்ட்டரைக் கூப்பிட்டோம் என்பதை வார்த்தைகளில் கூறாமல் எப்படிக் கவிதையில் தாவலை நிகழ்த்திக் காட்டுகிறார் பாருங்கள் கவிஞர். அதனால்தான் இவரை மகாகவிஞர் என்று அழைக்கிறார் மகா எழுத்தாளரான ஜெயமோகன்..

<முழுசாய் எங்களுக்கே எங்களுக்கென
வந்ததொரு பேருந்து>

ஆம்னி பஸ் புக் செஞ்சிருந்தாங்கோ!

<போர் விரித்தாடும் இடத்திலிருந்து>

நாகர்கோவில் ஸ்டேஷன் என்ன பாகிஸ்தான் பார்டரிலா இருக்கிறது?

<பாதுகாப்பான இடத்திற்கோ என
புகைந்தது புண்கள் நிறைந்த நெஞ்சு>

பாதுகாப்பான இடத்திற்குப் போகிறோம்னா புண்கள் நிறைந்த நெஞ்சு சந்தோஷமில்லே படணும்? ஏன்யா புகையணும்? ஓ! கவிதெ கவிதெ. கவிதென்னாலே இப்புடியிப்புடி புவன்னாவுக்குப் புவன்னாப் போடணுமே?

<தவறான இடத்திலிருந்து
சரியாக இடத்திற்கு
என்றது பேருந்து.>

ஓ இதெல்லாம் இப்ப பஸ்ஸோட போர்டுலையே போட்டுடறாய்ங்களோ?

<இதுவரை இருந்ததைவிட
இன்னும் மேலான இடத்திற்கு
அவ்வளவே என்றனர் தோழர்கள்.>

மொத்தம் இருபத்தி எட்டுபேர் ஜாக்கி வைத்து ஏற்ற முடிந்த அளவிற்கு, மேலான இடமோ?

<ஆனால் ஆனால்
வழியெல்லாம் கிளைகளசைத்து
உயரமான மரங்களும் விண்ணும் 
உரக்க உரக்க கூவினவே
புறப்படும் இடத்தையே மன்னித்தும்
மறக்கவும் செய்திடும் 
சொர்கத்திற்கு என்று!>

நாம் எழுதிய மொக்கைக்கு நாலுபேர் இண்டர்பிரடேஷன் என்பதன் பேரால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏற்றிவிட்டால் எவனுக்குத்தான் சொர்க்கமாய் தோன்றாது?

<எங்களுக்காகவே கட்டப்பட்டிருந்தாற்போன்ற 
ஓரொற்றைவிடுதி வந்து சேர்ந்தோம்>

இங்கேதான் தேவதேவன் தம்மை ஒரு கவிஞர் என்று ஐயம் திரிபற நிரூபிக்கிறார். 

இதே ஓட்டலைப் பற்றி ஜெயமோகன் என்ன சொல்கிறார் பாருங்கள்.


<எக்காலத்தும் அங்கு வந்துசேர்ந்தார்>

கவுஜைக்கு நடுவுல வுட்டார் பாருபா கபால்னு.

எக்காலத்தும் எழுத்தாளரான ஜெயமோகன் அங்கு வந்து சேர்ந்தார் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமோ? 

<யாருமில்லை என்பதுபோல
புத்தம் புதிதாய் இருந்த விடுதி.
எங்களைக் கண்டதும் ஒளிர்ந்த 
அதன் காந்தப் புன்னகைதான் எத்தனை அழகு!>

கம்பெனி பேலன்ஷீட்ல ஏறப்போகிற செலவுக்கணக்குதானே அழகாத்தானிருக்கும். கைக்காசா என்ன? இன்கம்டாக்ஸும் கொறஞ்சாப்புல ஆச்சி இலக்கியமும் வளத்தாப்புல ஆச்சி.

<காலம் தோறும் அது தன் இன்மை காத்து வந்தது
தித்திக்கும் இவ்வினிமைக்காகத் தானோ ?>

இன்மை இனிமை அடடா சிந்திக்க வைக்கும் மகாகவியின் சிலிர்க்க வைக்கும் மகா-கவிதை.நிகழும் தருணம் இதுதான்.

<அவ்விடுதியை மையம்கொண்டே 
விண்ணும் மண்ணும்
எண்ணற்ற நட்சத்திரங்களும்
சூழ்திருப்பது கண்டு திடுக்கிட்டோம்.
இவ்வண்டத்தின் அத்தனை உயிர்களையும்
ஏற்று அரவணைக்க இயலும்
அத்தனை பெரும் பரப்புடையதாயிருந்தது
அந்த இடம் .>

<திடுக்கிட்டோம்> திற்பரப்பில் என்ன திகில் படமா ஓடியது. 28 மகாஜன நட்சத்திரங்கள் ஒற்றைச்சூரியனைச் சுற்றினு வைரமுத்துவா இருந்தா கூச்சப்படாம சொல்லி இருப்பாரு. என்ன இருந்தாலும் நாம் லக்கியவாதிகளல்லவா கொஞ்சம் குறியீடாகத்தான் சொல்ல வேண்டும்.

<விடுதியின் மொட்டைமாடியிலிருந்தபடி
எங்கள் இன்பதுன்பங்கள் குறித்த
எங்கள் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்த
எங்களை எழுப்பி நடத்தியது
இடையறாது பொழியும் மழைபோலொரு குரலோசை
எங்கோ ஊற்றெடுத்த ஓர் அன்புதான்
ஏகமாய் பரவி ஆங்காங்கே
தன் உருக்காட்டி எம்மை அழைத்ததுவோ ?>

ஜெயமோகன் ஒருவரின் அன்பால் நடந்த கூட்டம் என்பதைத்தான் ஓர் அன்பு எனக் குறியீடாய் உணர்ந்த்துகிறாரோ கவிஞர்?

<சூழ்ந்துள்ள ரப்பர் தோடங்களுக்கு நடுவே
இன்னும் அழிக்கப்படாதிருக்கும் காடுகளுக்கு நடுவே>

கவலையே வேண்டாம். அசோகவனம் அத்துனை பாகங்களும் ஒருசேர அச்சுக்குப் போகும்போது எல்லாக் காடுகளும் அழிந்துபடும்.

<எம் நடை தடுத்தாட்கொண்ட
குன்றாப் பெருங்கொடை நிதியம்!>

இதனுடன் ஒப்பிட்டால் கருணாநிதியைப் பாராட்டி எழுதப்படும் மேடைக் கவிதை, எந்த விதத்தில் தாழ்ந்தது? இதன் உயர்வு, அருவியை சொல்வதுபோல் ஜெயமோகனை சொல்கிறது என்பதாலா?

அப்படி எல்லாம் இல்லை. கவிதை அருவியைப் பற்றி மட்டுமே பேசுகிறதோ என்று எவருக்கேனும் இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் முற்றாகத் துடைத்து விடுகிறது மடக்கி மடக்கி எழுதப்பட்டிருக்கும் கடைசி வரி. 

<முடிவிலா இன்பத் தேடல்களால் வாழ்வைத்
துயர்களமாக்கிக் கொண்டிருக்கும் மனிதத் தலைகளுக்கும் 
தன் இன்பம் ஊட்டி மகிழ்ந்துகொண்டிருக்கும
பெருங்கருணை >

இருபத்தியெட்டுபேர் கலந்துகொண்டு ஒரு ஓட்டலில் பாராட்டியதற்கே இப்படிக் குப்புற விழுந்து நன்றி சொல்வதை எந்த லஜ்ஜையுமின்றி ஏற்றுக்கொள்ளும் இலக்கியவாதிகள்தான் அறச்சீற்றத்துடன் அரசியல் தலைகளின் கால்களில் கட்சித்தொண்டன் விழுவதை நையாண்டி செய்கிறார்கள். 

<ஒருபோதும் லௌகீகதுக்கத்தின் சிறுமைக்குள் சிக்கிவிடாதவை.>

புல்லரித்த தொண்டனைப்போல் ஆகா ஓகோவென அருவியாய் நன்றி தெரிவிப்பதற்குக் கவிதையை உபயோகிப்பதைவிட லெளகீகம் வேறென்ன இருக்க முடியும்?

தத்துபித்தெனப் பேத்தி வை
ஜெயமோகனின் கடைக்கண் 
கரிசனம் கிடைத்தால்
உன் எழுத்திலும்
மிளிரக்கூடும் தரிசனம்.