14 November 2011

ரைட்டராவது எப்படி?

On Mon, Nov 14, 2011 at 6:24 PM, Chandra Sekhar. <***@ymail.com> wrote:

Dear Writer Mamallan,

I enjoy reading your blog. Though I've not read your stories, some of your writings (about Prameel, Jeyakanthan, latest Ramani camera) are very informative. Your language is very good.

I want to start writing in Tamil. Can you point me to some of the young writers in blogging now or people who write well in internet. Can you please list down people who you think are budding bloggers/writers in Tamil?

I hope I'm not wasting your time. Thanks in advance.

Thanks
Chandra Sekhar.
என்னைக் கவர்ந்த எழுத்தாக இருக்கும்பட்சத்தில் இப்படிக்கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் எழுதியே இருக்கிறேனே. என் பிரச்சனை என்னவென்றால், பட்டை பட்டையாய் அள்ளித்தின்பதைவிட வைரப் பருக்கையைத் தின்று செரித்து இளைப்பாறிவிடுவதுதான்.

நீங்கள் இருப்பது ஃபாரீனா? புக்கு வாங்கி விமானத்தில் கொண்டுவருவது மும்மடங்கு செலவா? இணையத்திலேயே அனைத்தையும் படித்துவிட்டால், என்னை விடுங்கள், முழுநேர தொழில்முறை எழுத்தாளர்கள், புவாவுக்கு என்ன செய்வார்கள்?

புதிதாக எழுதுபவர்களைப் பார்த்து எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறீர்கள். நல்லது. எழுத முயற்சிக்கையில், புதியவர்களில் நன்றாக எழுதுபவர்களைவிட மொக்கையாய் எழுதுபவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு நாம் அவ்வளவு மோசமில்லை என்று தேற்றிக்கொள்வது, உற்சாகம் அளிக்கவல்ல நல்ல உத்தி.

முதலில் தமிழ் எழுதப் பாருங்கள். அப்புறம் தமிழில் எழுதப்பாருங்கள்.

கொடுக்கிற லிஸ்டை வைத்துப் படித்துப் பண்டிதனாவதல்ல, தேடித்திரிந்துத் தெருவில நிற்பதுதான் தீவிர எழுத்து. தெருவில் நின்றதை உண்மையாக எழுதினால் இலக்கியமாகலாம். புக்கு எழுதுவதற்காக பழநிக்குப்போய் பிச்சைக்காரர்களோடு பிச்சைக்காரனாய் பிச்சையெடுத்துத் திரியவேண்டும் என்கிற அவசியமில்லை. நாசூக்கு வாசகர்களிடம் சுவாரசிய பிரமிப்பாய்ப் பெரிய  பிம்பத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமானால் அது உபயோகப்படலாம். ஆனால் வாழ்வும் சரி அதைப் பிரதிபலிக்கும் இலக்கியமும் சரி சர்வே செய்து புரிந்துகொள்ளக் கூடியவையல்ல. முன்தீர்மானத்துடன் திணிக்கப்பட்டு வாழும் வாழ்வு வலிந்த எழுத்தையே உருவாக்கவல்லது.

உங்களைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட என்னுடைய எழுத்தெல்லாம் சர்ச்சை இல்லாததாகவே இருப்பதைக் காண்கையில், நீங்கள் மிகுந்த சாதுர்யவான் என்றே தோன்றுகிறது. முடிந்தால் தமிழ் வாழ்வை ஆங்கிலத்திலேயே நேரடியாய் எழுதப் பாருங்கள். அதிர்ஷ்டமும் கூடி வந்தால், யார்கண்டது அடுத்த புலிஸ்டர் பரிசு உங்களுடையதாகவேக் கூட இருக்கலாம். சாத்வீக சைவ பட்சிணியாய் இலக்கியம் படைக்க வேண்டுமா? கோட்டு சூட்டுக் கோமானாய் இருந்துகொண்டு உருவாக்க  இருக்கவே இருக்கிறது இங்கிலீஷ் ரைட்டிங்.

திடீர் எழுத்தாளர் ஆவதற்கு இணையம் கண்ட எளியவழி பெயருக்கு முன்னால் ரைட்டர் என்கிற பொதியை சுமத்திக் கொள்வது. டீ காபி சிகரெட்டுக்கு அழைக்கும் நண்பர்களைக்கூட அவர்களே அறியாமல் நம்மை எழுத்தாளராய் அங்கீகரிக்க வைத்துவிடுகிற புத்திசாலித்தனம். இரண்டாம் தாரத்துக்குப் பிறந்த பிள்ளைகள் பாதுகாப்பின் நிமித்தம் அப்பா பெயரை பின்னால் சுமந்துகொண்டே திரிவதில்லையா அதுபோல.

இதைப் படித்து உங்களுக்குக் கோபம் வந்து குறைந்தபட்சம் மனதிற்குள்ளாகவேனும் தேர்ந்தெடுத்த வசவுககளால் என்னைத் திட்டுவீர்களேயானால் உங்களால் எழுதமுடியக்கூடும். ஏனென்றால் பதினாறுவருட இடைவெளிக்குப் பின் நான் திரும்ப எழுத நேர்ந்தது அப்படித்தான்.

போராடத் துணிந்தவனுக்கே பூமி சொந்தம்.