17 November 2011

வளையம்

இளைப்பாறலின்றி
எத்துனைக் காலம்தான் சுமந்து திரிவது?
மனதின் புலம்பல் மடிய மறுத்தது.

துடுக்கு நாக்கு சொல்லிற்று
முடிந்தால் திருப்பிக் குத்து
இல்லையேல் சும்மா குந்து.

குத்துவது மனிதப் பண்பல்ல
நாகரிகத்தின் மூக்கைக்
காப்பாற்றவேனும்
அக்குள் மயிர் தெரிய
முஷ்டி உயர்த்தலாகாது.

சும்மா குந்துவது
சுரணையின்மையின் அடையாளம்
ரணம் ஆறியும்
குடைச்சல் நின்றபாடில்லை.

வளையத்துள் வந்து நின்றும
கத்தாமல் குத்தாமல் 
கமுக்கமாய் நிமிண்டப்போய்  
புள்ளியின் மூக்கில் விழுந்தது
முற்றுப்புள்ளி.

நாளாவட்டத்தில்
புள்ளிக்கு வால் வளர
வவ்வவ்வே காட்டி ஆட்டத்தொடங்கிற்று,
அடுத்த குத்துக்கு அச்சாரமாய்.