Siva Sankar ***@yahoo.in 10:37 AM (6 hours ago) to me
மாமல்லன்.
தங்களுடைய இலை கதை சிறுகதையாக தோன்றும் எனக்கு இந்த பயம் சிறுகதையை எப்படி சிறுகதையாக புரிந்துகொள்வது. அது பதிவாகத்தானே தோன்றுகிறது.
இலை . தி.ஜாவின் எழுத்தை போன்றும் நிழல் சிறுகதை சிறுபத்திரிக்கைக்கான கதையாகவும் இரண்டும் வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்டதான எண்ணமும் ஏற்படுவது ஏன்?
தகுடுலோம்டே போன்ற கதைகளை எதிர்ப்பார்த்து சரியாக 10 வருடங்கள் கழித்துதான் தங்களை இணையத்தில் வாசித்து உடனே தங்களது சிறுகதை தொகுப்பு வெளியான அன்றே (தேவநேய பாவாணர் நுலகத்தில்) கிடைத்தது, (அதுவரை தகுடு லோம்டே நினைவில் இருக்கின்றான்.)
சிறுகதையை பற்றி மிக தீர்க்கமான வரையறைகள் வைத்துள்ள தாங்கள் மேற்கண்ட கதையை எப்படி சிறுகதையாக மதிப்பிடுவீர்கள் என்று எனக்கு பரிய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் எனது சிறுகதைக்கான வாசிப்பினை விரிவுபடுத்தவே கேட்கின்றேன்.
தினம் தினம் கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் எழுதினால் இந்த கேள்வி வந்திருக்காது?
குறிப்பு - மெயில் அனுப்பாமல் பேஸ்புக்கில் எழுதியதற்கு தவறுதலாக எடுத்துக்கொள்ளவேண்டாம். இந்த சமாசாரங்கள் அனைத்தும் எனக்கு புதிது.
Natpudan
மாமல்லன்.
தங்களுடைய இலை கதை சிறுகதையாக தோன்றும் எனக்கு இந்த பயம் சிறுகதையை எப்படி சிறுகதையாக புரிந்துகொள்வது. அது பதிவாகத்தானே தோன்றுகிறது.
இலை . தி.ஜாவின் எழுத்தை போன்றும் நிழல் சிறுகதை சிறுபத்திரிக்கைக்கான கதையாகவும் இரண்டும் வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்டதான எண்ணமும் ஏற்படுவது ஏன்?
தகுடுலோம்டே போன்ற கதைகளை எதிர்ப்பார்த்து சரியாக 10 வருடங்கள் கழித்துதான் தங்களை இணையத்தில் வாசித்து உடனே தங்களது சிறுகதை தொகுப்பு வெளியான அன்றே (தேவநேய பாவாணர் நுலகத்தில்) கிடைத்தது, (அதுவரை தகுடு லோம்டே நினைவில் இருக்கின்றான்.)
சிறுகதையை பற்றி மிக தீர்க்கமான வரையறைகள் வைத்துள்ள தாங்கள் மேற்கண்ட கதையை எப்படி சிறுகதையாக மதிப்பிடுவீர்கள் என்று எனக்கு பரிய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் எனது சிறுகதைக்கான வாசிப்பினை விரிவுபடுத்தவே கேட்கின்றேன்.
தினம் தினம் கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் எழுதினால் இந்த கேள்வி வந்திருக்காது?
குறிப்பு - மெயில் அனுப்பாமல் பேஸ்புக்கில் எழுதியதற்கு தவறுதலாக எடுத்துக்கொள்ளவேண்டாம். இந்த சமாசாரங்கள் அனைத்தும் எனக்கு புதிது.
Natpudan
அன்பன சிவசங்கர்,
<தங்களுடைய இலை கதை சிறுகதையாக தோன்றும் எனக்கு இந்த பயம் சிறுகதையை எப்படி சிறுகதையாக புரிந்துகொள்வது. அது பதிவாகத்தானே தோன்றுகிறது.>
கட்டுரைக்கும் பதிவிற்குமான வேறுபாடு என்ன? வித்தியாசம் வெளியிடப்படும் ஊடகம் எது என்பதைப் பொறுத்ததா? பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டால் கட்டுரை. வலைப்பூவில் வெளியிடப்பட்டால் பதிவா?
பயம், தன்மை ஒருமையில் எழுதப்பட்டிருப்பதால், அதுவும் எழுதியவனின் பிரத்தியேகத் தகவல்கள், குறிப்பாக அவனது வேலை, வேலை பார்க்குமிடம், எல்லாம் அப்படியே கொடுக்கப்பட்டிருப்பதால் உங்களுக்குப் பதிவாகத்தோன்றுகிறதோ?
வேறு விதமாக சொல்வதென்றால், கட்டுரையில் இருக்கும் தகவல்கள் உண்மை, கதையில் சொல்லப்படும் தகவல்கள் கற்பனை என்கிற கட்டுச்சோற்று எண்ணத்தின் காரணமாய் எழும் எண்ணமாக இருக்கலாம்.
எழுதும்போது தன்னையும் பாத்திரமாக்க முடிய வேண்டும். ’தன்’ நிறைகுறைகளைத் தள்ளி நின்று, ஒரு பாத்திரம்போல் பார்க்கையில்தான் என் பார்வையில் ஒருவனை எழுத்தாளன் என்று ஏற்றுக்கொள்வேன்.
ஒரு கதையில் ஏதேனும் ஒரு பாத்திரம் அல்லது சம்பவம் துலக்கம் பெற்று எழும்பி வந்தாலே போதும் என்னைப் பொறுத்தவரையில் அது கதை ஆகிவிடும். நல்லது சிறந்தது எல்லாம் அடுத்தபட்சம்.
<இலை . தி.ஜாவின் எழுத்தை போன்றும் நிழல் சிறுகதை சிறுபத்திரிக்கைக்கான கதையாகவும் இரண்டும் வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்டதான எண்ணமும் ஏற்படுவது ஏன்?>
அசோகமித்திரனைப் போன்று என்று கேட்டுக்கேட்டு புளித்துப்போன காதுக்குதான் தி.ஜா போன்று என்பது எவ்வளவு இன்பமாக இருக்கிறது.
இலை என்ன 81ல் ஆறு லட்சம் விற்றுக்கொண்டிருந்த குமுதத்திலா வெளியாயிற்று? கணையாழியில்தானே வந்தது. கணையாழியும் அப்போது சிறுபத்திரிகைதானே.
89ல் நியூ காலேஜ் அருகில் இருந்த யாத்கார் என்கிற சைவ உணவகத்தில், அப்போது ஞாநியின் பீட்டர்ஸ் காலனி வீட்டில் தங்கியிருந்த ரவித்தம்பி (அப்போது சினிமா பத்திரிகையாளன், தற்போது பிஆர்ஓவாக இருப்பவர்) என்கிற நன்பன் எதிரில் உட்கார்ந்திருக்க பக்கம் பக்கமாய் ’நிழல்’ நெடுங்கதையை எழுதி எழுதிக் கொடுத்துகொண்டிருக்கையில் தகுடு லோம்டேவின் எண்ணங்கள்தான் கொந்தளித்துக்கொண்டு இருந்தனவே தவிர ’தற்காலிக இடைவெளி’ காரணமாய் நேரடித்தொடர்பில் இல்லாதிருந்த சுந்தர ராமசாமி இரண்டுவருடம் கழித்து காலச்சுவடு மலருக்காக என்னிடம் கதை கேட்கப்போவதோ அதை நான் அனுப்பி வைக்க படித்துவிட்டு அவர் எடிட் செய்ய முடியுமா எனக் கேட்கப்போவதோ, இந்த வடிவில் அது இருக்குமாகில் வெளியாக வாய்ப்புண்டா என நான் கேட்கப்போவதோ தாராளமாய் வெளியாகும் எனப்போவதோ பின்பு 91ல் அது காலச்சுவடில் வெளியாகப்போவதோ எதையும் அறியாமல்தான் ‘தி.ஜா’போல் முந்தைய பக்கம் பார்க்காமல் எழுதிக்கொண்டு இருந்தேன். அதற்குப்பிறகு அது எட்டு முறை எழுதி எழுதி இழைக்கப்பட்டது வேறு விஷயம். இந்தப் பத்திரிகையில் எழுதினால்தான் ஒருவன் இலக்கியவாதி என்றில்லை. இந்தப் பத்திரிகைக்காக இப்படி அந்தப் பத்திரிகைக்காக அப்படி என்று எழுதுபவன்மேல்தான் எனக்கு எந்த மரியாதையும் இல்லை.
ஒரே எழுத்து நடையில் எழுதினால்தான் சிறந்த எழுத்து என்றோ, எல்லாவித குட்டிக்கரணமும் போட்டுக்காட்டினால்தான் ‘வித்தைக்காரன்’ என்றோ கட்டாயம் எல்லாம் இல்லை. என்ன எழுதப்பட்டிருந்தாலும் முதல் வார்த்தைக்கும் இறுதி வார்த்தைக்கும் இடையில் இருப்பது அதன் உள்ளாக ரத்தமும் சதையுமாக ஒரு உயிரை எழுப்பிக் காட்டுகிறதா இல்லையா என்பதுதான் வேறு எதையும்விட முக்கியம்.
<தகுடுலோம்டே போன்ற கதைகளை எதிர்ப்பார்த்து>
நன்றி.
<எதிர்ப்பார்த்து>
கிட்டத்தட்ட இதே கேள்வியை இருபத்தியோராம் வயதில் திஜாவின் கதை ஒன்றைக்குறித்து அவரிடம் கேட்கப்போய் அவர் சொன்ன பதில், எல்லாத்தையும் ஒரே மாதிரி எழுத முடியுமா, ஒண்ணு நன்னா வரும் ஒண்ணு சுமாரா இருக்கும்.
<சிறுகதையை பற்றி மிக தீர்க்கமான வரையறைகள் வைத்துள்ள தாங்கள் மேற்கண்ட கதையை எப்படி சிறுகதையாக மதிப்பிடுவீர்கள் என்று எனக்கு பரிய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்>
ஏற்கெனவே சொல்லிவிட்டேன் என்றே படுகிறது. எழுத்து, புழுதிபோல், பிரத்தியேக முயற்சி ஏதுமின்றி தன்னால் சேரும் அனுபவங்களை அடிப்படையாய்க் கொண்டது. பக்கச்சார்பெடுத்து எதையும் நிறுவப்பார்க்காமல் தன்னைத் தன்னிலிருந்து விடுவித்துக்கொண்டு - குறைந்தபட்சம் எழுதும்போதேனும் - தள்ளி நின்று தன்னையும் ஒரு பாத்திரமாக்கி, எதிர்கொண்ட நிகழ்வில் அதன் கீழ்மைகளையும் உச்சங்களையும் அப்படியே கொண்டுவர இணைப்புக் கண்ணிகளுக்கு மட்டும் கற்பனையின் உதவியை நாடினால் கூடவே எழுத்துப் பயிற்சியும் கூடிவருமானால் அது ஏன் கதையாக ஆகாமல் போகும்?
ஆனால் முதல் வாசிப்பில் அது உங்களைக் கவரா விட்டாலோ அல்லது கதையாகப் படாவிட்டாலோ எழுத்தாளனால் என்ன செய்ய முடியும்? அரசாங்க அதி உயர் அதிகாரிக்கு வைப்பது போல் ஆங்காங்கே ஹைலைட்டரா போட்டுக் காட்ட முடியும்? கூர்த்த வாசிப்பிலேயே இணைப்புக் கண்ணிகள் பிடிபடக்கூடும்.
95ல் உயிர்த்தெழுதல் புத்தகத்திற்கு ஒருவர் விமர்சனம் என்கிற பெயரில் உயிர்த்தெழுதல் குல்லா போன்றவையெல்லாம் கதைகளா என்று கேட்டிருந்தார். அவரை நேரில் சந்திக்க நேர்ந்தபோது முதலில் அவை என்னவென்றாவது உங்களுக்குப் புரிந்ததா? அப்புறம்தானே அவை மீதான உங்கள் அபிப்ராயத்தைக்கூற முடியும். இதெல்லாம் உனக்கு பத்து வருஷம் கழிச்சிப் புரிஞ்ச்சா புரியலாம் என்றேன்.
அந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டு, விமலாதித்த மாமல்லனை ட்ரைவ் இன்னில் பார்க்க நேர்ந்தபோது சண்டைக்கே வந்துவிட்டார். ஆனால் இப்போது படித்துப் பார்க்கையில் அவை நன்றாக இருக்கின்றன என்று 2004ல் அவரே எழுதியிருக்கிறார் என்பதை. இணையத்தில் எழுதத்தொடங்கியதும் நன்பர் ஒருவர் சுட்டிக் காட்டியதால் தெரியவந்தது. அவர் இப்போது பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியர். பத்து வருடம் கழித்தாவது அவருக்குப் புரிந்ததும் அதைப் பாசாங்கின்றி தன் தளத்தில் அவர் ஒப்புக்கொண்டார் என்பதும்தான் எனக்கு மகிழ்ச்சி.
பரிசோதனைக்காக என்று எதையும் கையை முறுக்கி எழுதிப்பார்ப்பதில் எனக்கு உவப்பில்லை. அதே சமயம் இருக்கிற கொஞ்சம் மாவை கைமுறுக்காய் திரிப்பதிலும் உடன்பாடில்லை.